CM STALIN Udhayanidhi - Vijay -க்கு மறைமுக பதிலடி - பின்னணி? | Waqf MODI ADMK TV...
PMK: "தேர்தல் ஆணையக் கடிதத்தில் அன்புமணி பெயர் இல்லை; பாலு சொன்னது பொய்" - கொதிக்கும் எம்எல்ஏ அருள்
அன்புமணி தலைமையிலான பா.ம.க-வை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக பா.ம.க வழக்கறிஞர் பாலு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் பொய்யான தகவலைக் கூறியுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்திடம் இருந்து வந்த கடிதத்தில் மாநிலத் தலைவராக அன்புமணி பெயர் இல்லை எனவும் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ம.க இணை பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான அருள் கூறுகையில், "தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாகக் கூறி, வழக்குரைஞர் பாலு, பொய்யான, உண்மைக்குப் புறம்பான சட்ட விதிகளுக்கு முரண்பட்ட தகவலை வெளியிட்டு வருகிறார். 46 ஆண்டுகளாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கட்டிக் காத்த இயக்கத்தை அவரிடம் இருந்து பறிக்க நினைக்கிறார்கள். இந்தக் கட்சிக்காக 21 பேர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெற்ற நிர்வாக குழுவில் செயல்தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டார். அந்த வகையில், செயல் தலைவராக இருந்து பொதுக்குழுவைக் கூட்ட அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. இதே போல், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோருக்கும் அதிகாரம் இல்லை.
நிர்வாக குழுவில் நீக்கப்பட்டவருக்கு, பொதுக் குழுவையோ, செயற்குழுவையோ கூட்ட அதிகாரம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த நிலையில், வழக்கறிஞர் பாலு தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாகக் கூறி வருகிறார்.
அவர் குறிப்பிடும் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் அன்புமணி பெயர் எங்கேயும் இடம் பெறவில்லை. மொத்தத்தில் பொய்களை மறைத்து இட்டுக்கட்டி உண்மைக்கு மாறான தகவலை வழக்குரைஞர் பாலு தெரிவித்து வருகிறார்.
இது ஏற்புடையதல்ல. ஒட்டுமொத்த பாட்டாளி மக்கள் சொந்தங்கள் அனைவரும் பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். இதில் எள்ளளவும் யாருக்கும் மாற்று கருத்து இல்லை என்றார்.

பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டு விட்டார். அதன் பிறகு ராமதாஸ்தான் கட்சியின் தலைவராக உள்ளார். இதனிடையே கட்சியின் அலுவலக முகவரியை வேண்டுமென்றே கடந்த சில மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு தேர்தல் ஆணையத்தில் மாற்றிக் கொடுத்துள்ளார்கள். அதன் காரணமாகவே தேர்தல் ஆணையத்தின் கடிதம் அந்த முகவரிக்கு சென்றுள்ளது.
அதனை தங்களுக்கு வந்த கடிதமாக பொய்யான தகவலை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையத்தில் இருந்து வந்த கடிதத்தில் எந்த இடத்திலும் மாநிலத் தலைவரின் பெயர் அன்புமணி எனக் குறிப்பிடவில்லை. ராமதாஸ் இடமிருந்து கட்சியைப் பறிக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு பரப்பப்படும் பொய்" என்ற அருள், கட்சியின் கொடி சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என யாராலும் எங்களுக்குத் தடை விதிக்க முடியாது என ஆவேசமாகத் தெரிவித்தார்.