நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
Premalu 2 Exclusive: `விக்ரம், சிம்பு படம் பாரத்துட்டு சொன்ன விஷயம்' - க்ரீஷ் ஏ.டி நேர்காணல்
`ப்ரேமலு' படத்தின் பிரமாண்ட வெற்றி அதன் இரண்டாம் பாகத்தின் மீதும் அதிகளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு சிறிய பட்ஜெட் ரொமானடிக் காமெடி திரைப்படத்தின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் இயக்குநர் க்ரீஷ் ஏ.டி. இவர் கையில் எடுத்துக் கொண்ட மேஜிக் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்ல `ப்ரேமலு 2' குறித்து தெரிந்து கொள்வதற்கு ஆவலையும் ஏற்படுத்தியிருக்கிறது. `தண்ணீர் மாத்தன் தினங்கள்', `சூப்பர் சரண்யா' போன்ற ரொமான்டிக் காமெடி திரைப்படங்களை கொடுத்தவர் தற்போது ஒரு த்ரில்லர் ஜானர் பக்கம் களமிறங்கியிருக்கிறார். இப்போது `I'm Kathalan' என்ற க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார். இதிலும் அவரின் ஆஸ்தான நாயகன் நஸ்லென் களமிறங்கியிருக்கிறார். இத்திரைப்படத்திற்காக வாழ்த்துகளைச் சொல்லிப் பேசியபோது ப்ரேமலு வெற்றி, அதன் இரண்டாம் பாகம் என உரையாடல் நீண்டது.
`I'm Kathalan' திரைப்படம் எப்படி உருவாகியிருக்கிறது?
நன்றாக வந்திருக்கு. இது சைபர் க்ரைம் பற்றிய திரைப்படம். நான் இதுவரை ராம் - காம் திரைப்படங்கள்தான் இயக்கியிருக்கேன். இப்போ முதல் முறையாக இந்த பாதையில பயணிக்கிறேன். `ப்ரேமலு' திரைப்படத்துக்கு முன்பாகவே இந்தப் படத்தை நாங்க எடுத்து முடிச்சிட்டோம். சில பிரச்னைகள்ல சிக்கியிருந்தது. அதனால் ரிலீஸும் தாமதமானது. இப்போ படம் ரெடி ஆகிடுச்சு. நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது. எல்லோருக்கும் நிச்சயம் படம் பிடிக்கும். இதற்கு முன்பு படப்பிடிப்பை நல்லா ஜாலியாக கொண்டு செல்வோம். ஆனால் இந்த படம் கொஞ்சம் சீரியஸான படம். நாங்களும் அதே டோன்ல படத்தை எடுத்திருக்கோம்.
நஸ்லென் உங்களுடைய அனைத்துப் படங்களுக்கும் கன கச்சிதமாகப் பொருந்திப் போகிறாரே! எப்படி?
நஸ்லென் சிறந்த நடிகர். காமெடி கதாபாத்திரங்கள் மட்டும்னு அவருடைய நடிப்பை சுருக்கிட முடியாது. அனைத்து கதாபாத்திரங்களையும் கம்ஃபோர்ட்டாக பண்ணிடுவார். நான்தான் நஸ்லெனை `தண்ணீர் மாத்தன் தினங்கள்' படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தினேன். அப்போதிலிருந்து எங்களுக்கு இடையில நல்ல ஒரு நட்பு இருக்கு. கம்ஃபோர்டாக பல விஷயங்களை என்னால் அவரிடம் பகிர்ந்துக்க முடியும். நான் ஒரு இன்ட்ரோவெர்ட் (சிரிக்கிறார்). நஸ்லென், மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் போன்ற நடிகர்களுடன் என்னால் வசதியாக டைரக்ட் பண்ண முடியும்.
`ப்ரேமலு' திரைப்படத்தை அனைவரையும் வசீகரித்ததே! அந்த மேஜிக்கிற்கு காரணம் என நீங்கள் நினைப்பது?
கதை யுனிவர்ஸலாக இருந்தது முதல் முக்கியமான காரணம். படத்தினுடைய பிரதான கதாபாத்திரம் `காமன் மேன் இன் இந்தியா' மாதிரிதான். அனைத்து விஷயங்களையும் அந்தக் கதாபாத்திரத்துடன் பொருத்திப் பார்க்க முடிஞ்சது மற்றொரு காரணம். இந்தளவுக்கு வெற்றியை `ப்ரேமலு' திரைப்படம் எட்டும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை. மற்ற மொழி திரைப்படங்களை ஓ.டி.டி-யில் வெளியானப் பிறகுதான் மக்கள் அதை பார்த்துக் கொண்டாடுவாங்க. ஆனால், `ப்ரேமலு' படத்தை ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் பயங்கரமாக கொண்டாடினாங்க. ஓ.டி.டி-யில் வெளியான பிறகு வடமாநிலங்களிலும் படத்தைக் கொண்டாடினாங்க. எனக்கு என்னுடைய கம்ஃபோர்ட் இடத்தில் இருக்கிறதுதான் இஷ்டம். இந்த வெற்றி இதைவிட பெரிய படத்தை பண்றதுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு. அதனால்தான் `ப்ரேமலு 2' பெரிய திரைப்படமாக பண்றதுக்கு திட்டமிட்டுறோம். `ப்ரேமலு' ரிலீஸுக்குப் பிறகு தமிழ், தெலுங்குன்னு மற்ற மாநிலங்கள்ல திரைப்படம் இயக்குறதுக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால், இங்கு முன்பே கமிட் செய்த படங்களும் இருக்கு. மற்ற மொழி படங்களை இயக்குறதுக்கும் ஆர்வமாக இருக்கேன். இந்த `I'm kaathalan' திரைப்படம் `ப்ரேமலு' படத்தைவிட குறைவான பட்ஜெட்ல படம் பிடித்தோம். ஆடியன்ஸிடமிருந்து எப்படியான வரவேற்பு கிடைக்குமென கொஞ்சம் டென்ஷனா இருக்கு. மற்றொரு பக்கம் `ப்ரேமலு 2'-வில் மக்கள் என்னென்ன விஷயங்கள் எதிர்பார்ப்பார்கள் என யோசிக்க வைக்கிறது.
உங்களுடைய குறும்படங்களிலிருந்து திரைப்படங்கள் முற்றிலுமாக மாறுபட்டு இருக்கே! என்ன மாதிரியான திரைப்படங்களை கொடுக்க வேண்டுமென உங்களுக்கு ஆசை இருக்கு?
ஷார்ட் ஃபிலிம்களுக்கு குறைவான பட்ஜெட்தான் கிடைக்கும். அதனால் அதற்கேற்ப பிளான் பண்ணி பண்ணுவோம். எனக்கு இளைஞர்களுடைய கதைகளை திரையில் சொல்லணும்னுதான் ஆசை. சொல்லப்போனால், எனக்கு செல்வராகவன் சாருடைய படங்கள் மிகவும் பிடிக்கும். இவரைத் தாண்டி இயக்குநர் வெங்கட் பிரபுவினுடைய படங்கள் அத்தனையும் எனக்கு பிடிக்கும். அதுபோல வெற்றி மாறன் சாரின் படங்களும் பிடிக்கும். இயக்குநர் விஷ்ணு வர்தன் படங்களையும் நான் ரசித்து பார்ப்பேன்.
ப்ரேமலு படத்துக்கு கோலிவுட்ல இருந்து யார் யாரிடமிருந்து உங்களுக்கு வாழ்த்து வந்தது?
விக்ரம் சார் படம் பார்த்துட்டு வாழ்த்து தெரிவிச்சாங்க. அவர் இரண்டு முறை படத்தை பார்த்துட்டு நல்ல விஷயங்களை என்கிட்ட சொன்னாங்க. விஜய் சேதுபதி சாரும், சிம்பு சாரும் படம் பார்த்துட்டு வாழ்த்தினாங்க. எனக்கு இந்த நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென விருப்பம்தான். முயற்சி பண்ணுவோம்.
`ப்ரேமலு' படத்தினுடைய வெற்றி நஸ்லெனுக்கும், மமிதா பைஜுவுக்கு தமிழில் நல்ல பாதையை அமைத்துக் கொடுத்திருக்கு. மமிதா விஜய்யின் 69வது படத்தில் நடிக்கிறார். அதே சமயம் நஸ்லென் ஒரு பெரிய படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வருகிறது. இவர்களுடைய வெற்றி உங்களுக்கு பர்சனலாக எந்தளவிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்குது?
எனக்கு ரொம்பவே சந்தோஷம். அவர்களுடைய கரியர் வளர்ச்சியடைவதை எண்ணி சந்தோஷப்படுறேன். நஸ்லெனை எனக்கு அறிமுக காலத்திலிருந்தே தெரியும். சின்ன சின்ன படங்களை பண்ணி இன்னைக்கு இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். மமிதா பைஜு என்னுடைய திரைப்படத்துல மற்ற கதாபாத்திரங்கள் பண்ணியிருக்காங்க. இன்னைக்கு பெரிய ஹிரோயினாக வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
`ப்ரேமலு 2' படத்துக்கான வேலைகள் எப்படி போகுது?
அடுத்த வருடம் மே, ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்குறோம். ஸ்கிரிப்ட் வேலைகள் இப்போ நடந்துட்டு இருக்கு. இப்போது முழு கவனமும் இந்த படத்துலதான் இருக்கு. இந்த படம் முடிச்சதும் சில கதைகள் இருக்கு. அதை வச்சு படம் பண்ணனும். ஒரு வேளை `ப்ரேமலு 2' ஹிட்டானால் பெரிய திரைப்படங்கள் பண்றதுக்கு முயற்சி பண்ணலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...