Rahane: ``யாரும் என்னிடம் அதைப் பற்றிக் கூறவில்லை" - இப்போது வருந்தும் ரஹானே
இந்திய டெஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்த அளவில் ஒரு சில பேட்ஸ்மேன்கள் மட்டுமே சாலிட் டிஃபென்ஸ் ஆடக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அதுவும் சச்சின், டிராவிட், லக்ஷ்மன் போன்றோருக்குப் பிறகு இந்திய அணியில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு முரளி விஜய், புஜாரா, ரஹானே, கோலி ஆகியோர்தான் உருவெடுத்தனர். இவர்களிலும், முரளி விஜய், புஜாரா, ரஹானே ஆகியோர் தாங்கள் விளையாடிய கடைசி ஓரிரு தொடர்களில் ஒருசில போட்டிகளில் மோசமாக ஆடியதனால் ஓரங்கட்டப்பட்டனர்.

உள்ளூர் போட்டிகளில் ஆடுங்கள்!
கோலி, ரோஹித் கூட கடைசி இரண்டு தொடர்களில் முழுமையாகவே சரியாக ஆடவில்லைதான். ``சூப்பர் ஸ்டார் கலாசாரமெல்லாம் கடைப்பிடிக்க வேண்டாம். சரியாக ஆடவில்லையென்றால் உட்காரவையுங்கள். உள்ளூர் போட்டியில் திறமையான வீரர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அப்படியில்லை வாய்ப்பு கொடுப்போம், கம்பேக் கொடுப்பார் என்று நினைத்தால், எல்லோரையும் அப்படியே நடத்துங்கள். குறைந்தபட்சம் உள்ளூர் போட்டிகளில் ஆட வையுங்கள். ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்து இடம் கொடுக்காதீர்கள்." என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அவர்களுக்கு நடந்தது இவர்களுக்கு நடக்கவில்லை. அதன் விளைவு, இன்றைக்கு இந்திய டெஸ்ட் அணியில் சாலிட் டிஃபென்ஸ் பேட்ஸ்மேன் இடம் காலியாக இருக்கிறது. இந்த நிலையில்தான், அணியிலிருந்து நீக்கியபோது மோசமாக உணர்ந்ததாகவும், தன்னிடம் பி.ஆர் (PR) டீம் இல்லையென்றும் ரஹானே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
வேறெதுவும் என் கையில் இல்லை:
இந்திய எக்ஸ்பிரஸ் ஊடகத்துடனான நேர்காணலில் இதைப் போட்டுடைத்த ரஹானே, ``சில ஆண்டுகளுக்கு முன்பு அணியிலிருந்து நான் நீக்கப்பட்ட பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்த விஷத்தைப் பொறுத்தவரை, விளையாடுவதைத் தவிர வேறெதுவும் என் கையில் இல்லை. உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐ.பி.எல்லில் நன்றாக விளையாடியதால் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டேன். ஓர் அனுபவ வீரர் மீண்டும் அணிக்குள் வரும்போது, அடுத்து இரண்டு மூன்று தொடர்களில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவார் என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு என்னைத் தேர்வு செய்யவில்லை. மிகவும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், நீக்கப்பட்டதால் மிகவும் மோசமாக உணர்ந்தேன். என்னை ஏன் நீக்கினீர்கள் என்று கேட்கும் ஆள் நான் இல்லை. ஏன் என்று மெசேஜ் கூட அனுப்பியதில்லை. சென்று கேள் என்று நிறைய பேர் கூறினர். ஆனால், எதிர்முனையில் இருப்பவர் பேசத் தயாராக இருந்தால்தானே பேச முடியும். அவர் தயாராக இல்லையென்றால், கேட்டும் பயனில்லை. என்னிடம் என்ன இருக்கிறதோ அதை மட்டும்தான் என்னால் செய்ய முடியும். கம்பேக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பி.ஆர் டீம் இல்லை
நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவன். இப்போது அதிலிருந்து வெளிவந்துவிட்டேன். என்னுடைய கவனம் எப்போதும், கிரிக்கெட் விளையாடுவது வீட்டுக்கு செல்வது மட்டும்தான். ஆனால், முன்னோக்கிச் செல்வதற்கு சில விஷயங்கள் தேவைப்படும் என்று யாரும் என்னிடம் கூறியதில்லை. உன்னுடைய கடின உழைப்பைப் பற்றி பேசு, எப்போதும் செய்திகளில் இருக்க வேண்டும் என்று இப்போது கூறுகிறார்கள். இருந்தாலும், `விளையாடு வீட்டுக்கு போ' என்று இப்போதும் சில சமயங்களில் தோன்றும். என்னிடம் பி.ஆர் டீம் இல்லை. என்னுடைய ஒரே பி.ஆர் கிரிக்கெட் மட்டுமே. செய்திகளில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன். நான் வட்டத்துக்கு வெளியே இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்." என்று கூறினார்.

ரஞ்சி டிராபியில் ஹரியானாவுக்கெதிரான காலிறுதி ஆட்டம் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் தனது 200-வது போட்டியில் ஆடிய ரஹானே, அதில் சதமடித்து மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறப் பங்காற்றினார். 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரஹானேவைத் தவிர யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.