Rajini: ``சமீபத்தில் நான் பார்த்த படம்... திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம்" -பாராட்டிய ரஜினி
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'திரு.மாணிக்கம்'.
இந்த டிஜிட்டல் காலத்தில் வெள்ளந்தியாக நேர்மையாக இருக்கும் ஒருவர் என்னவெல்லாம் பிரச்னைகளைச் சந்திக்கிறார். குடும்பமும், சமுதாயமும் அவரை எப்படி நடத்துகிறது என்பதே இதன் கதைக்களம். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தைப் பார்த்திருக்கும் நடிகர் ரஜினி, படக்குழுவைப் பாராட்டியிருக்கிறார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் ரஜினி, "ஒரு நல்ல படத்துக்கு அடையாளம், படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் ஒரு மூன்று, நான்கு நாள்களுக்காவது நினைவில் வந்துகொண்டே இருக்கணும். அந்த படத்தில் வரும் எதாவது ஓர் நல்ல விஷயம், நம் வாழ்க்கையில் நாமும் கடைப்பிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகணும்.
அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு.மாணிக்கம் என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தைவைத்து திரைக்கதை, வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி அவர்கள், தான் ஓர் அற்புதமான இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
இந்த திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றியிருக்கும் மைனா சுகுகுமார், விஷால் சந்திரசேகர், குணா ரகு அவர்களுக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரக்கனி, மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், இந்த படத்தை தயாரித்திருக்கும் G.P.ரவி குமார் மற்றும் என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்" என்று கூறியிருக்கிறார்.