Retro: 'ரெட்ரோ' படத்துக்கு 15 நாள் ரூம் போட்டு ரெடி ஆனேன்! - 'மைக்கேல் மிராஸ்' விது பேட்டி
மீண்டும் நடிகராக தன்னை நிரூபித்திருக்கிறார் நடிகர் விது.
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் ஷட்டானி கதாபாத்திரத்தில் நடித்து நமக்கு பிரமிப்பை ஏற்படுத்தியவர் இப்போது 'ரெட்ரோ' படத்தில் மைக்கேல் மிராஸாக களமிறங்கி கவனம் ஈர்த்திருக்கிறார்.
படத்தில் இவருடைய சிரிப்புதான் வில்லனிசத்தின் பீக் மொமன்ட்! 'ரெட்ரோ' தொடர்பாக பல விஷயங்களைப் பேசுவதற்கு இவரைச் சந்தித்தோம்.
அதே சிரிப்போடு நிகழ்ந்த இந்த உரையாடல் ஷட்டானி கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கம், சூர்யாவுடனான நட்பு என பல பக்கங்களைப் புரட்டின.

விது பேசுகையில், "படத்துக்கும் என்னுடைய கதாபாத்திரத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.
நிறைய மீம்ஸுமே போடுறாங்க. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துல என்னுடைய பெயர் எல்லோருக்கும் பரிச்சயமாச்சு.
ஆனால், என்னுடைய முகம் பலருக்கும் தெரியாது. இப்போ 'ரெட்ரோ' மூலமாக மக்களுக்கு இன்னும் அதிகமாக பரிச்சயமாகியிருக்கேன்.
திரையரங்குகள்ல மைக்கேல் மிராஸ், கிங்னு பல பெயர்கள்ல என்னை அழைப்பது ரொம்பவே மகிழ்ச்சி!" என்றவரிடம் அடுத்தடுத்துக் கேள்விகளைக் கேட்டோம்.
'பேட்ட', 'டபுள் எக்ஸ்' படங்களுக்கு முன் விது என்பவர் யார்? அவர் எப்படி சினிமாவுக்குள் வந்தார்?
நான் கோவையைச் சேர்ந்தவன். சின்ன வயசுல இருந்தே சினிமா மீது எனக்கு தனி ஆர்வம். எனக்கு 4 வயசு இருக்கும்போது தலைவர் படத்துக்கு எங்க வீட்டுல இருந்த ஒரு அண்ணா எங்களைக் கூட்டிட்டுப் போனாரு. அதுதான் சினிமா மீதான ஆர்வத்தின் தொடக்கம். அப்புறம் வீட்டுல சொல்ற படிப்பை படிச்சு என்ஜினீயரிங் தொடர்பாக வேலைக்குப் போயிட்டேன். ஆனால், எனக்குள்ள ஏதோ ஒரு விஷயம் சினிமாங்கிறதைப் பற்றி எனக்கு உறுத்தியது. 'ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்' கார்த்திகேயன் சந்தானம் எனக்கு அண்ணனைப் போன்றவர். அவரைச் சந்திச்சேன். இந்த சினிமா பயணம் அப்படியே போயிட்டு இருக்கேன்.
கார்த்திக் சுப்புராஜ் & கோ-வுக்குள் வந்தது எப்படி?
கார்த்திக் சுப்புராஜ் அண்ணாவை 2009-லேயே நான் சந்திச்சிருக்கேன். 'பேட்ட' படத்துல நான் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிச்சிருப்பேன். அந்த படம் முடிச்சதும் 'டைம் வேஸ்ட் பண்ணாத. ஊருக்கு போயிடு'னு அண்ணா சொல்லிட்டாங்க. ஆனா, எனக்கு சினிமாவைத் தாண்டி வேற எதுவும் தெரியாது. இதன் பிறகு நடிப்பை முறையாக கத்துகிட்டுத் தயாரானேன். அதன் பிறகு வாய்ப்புகளுக்கான கதவுகளும் திறந்தது. ஷட்டானி கதாபாத்திரத்தின் வாய்ப்பும் எனக்குக் கிடைச்சது. அந்தக் கதாபாத்திரத்துல என்னுடைய முகம் தெரியாது. இப்போ, 'மைக்கேல் மிராஸ்' கதாபாத்திரம் அப்படியே வேற. ரொம்பவே ஜாலியாக வேலைகளைக் கவனிச்சோம். கார்த்திக் சுப்புராஜ் அண்ணாவும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தாரு.
விது, மைக்கேல் மிராஸாக மாறியது பற்றி?
முதல்ல மைக்கேல் மிராஸ் கேரக்டருக்கு என்னை ஆடிஷன் பண்ணவே இல்ல. வேற ஒரு கதாபாத்திரத்துக்குதான் பண்ணினாங்க. அந்தக் கேரக்டருக்கு நான் செட்டாகல. சூர்யா சார் படம், நான் அதுல நடிச்சாகணும் ஆசையோடு இருந்தேன். அப்புறம் நான் அந்த சமயத்துல தாடி அதிகமாக வச்சிருந்தேன். ஷேவ் பண்ணீட்டு ப்ரஷாகத் தொடங்கலாம்னு நினைச்சுட்டு ஷேவ் பண்ணினேன். அப்போ எடுத்த ஒரு போட்டோவை கார்த்திக் சுப்புராஜ் அண்ணாவுக்கு அனுப்பினேன். பிறகுதான், இப்படியொரு கதாபாத்திரம் இருக்குன்னு என்னைக் கூப்பிட்டாரு. சொல்லப்போனால், இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை ஆடிஷன் பண்ணி முடிச்சிட்டு அவங்களெல்லாம் ஷூட் பண்ணிட்டாங்க. நான் இந்தக் கேரக்டர்ல நடிக்கணும்னு ரூம் போட்டு இந்தப் படத்துக்காக மொத்தமாக 15 நாட்கள் நான் தயாராகினேன். அப்போ எடுத்த ஆடிஷன் காணொளிகளை அவருக்கும் அனுப்பினேன். அப்படிதான் நான் மைக்கேல் மிராஸாக மாறினேன்.

தயாராகும்போது எதாவது ரெபரென்ஸ் எடுத்து வேலை பார்த்தீங்களா?
தனியாக ரெபரென்ஸாக எடுத்து வேலை பார்க்கல. கல்ட் லீடர் சார்லஸ் மேன்சன் என ஒருத்தர் இருக்காரு. அவரைப் பற்றி கடந்தாண்டு ஒரு ஆவணப்படம்கூட வந்தது. அவர் ரொம்பவே இரக்கமற்றவர், ஒரு படையையே தூண்டிவிட்டு செயல்களை நிகழ்த்தக்கூடிய ஒருத்தர். அவரை மாதிரியே இந்தக் கதாபாத்திரம் நடந்துக்கணும்னு மட்டும் தெரியும். இதை மட்டும் எடுத்துக்கிட்டு நான் வேலை பார்த்தேன். எனக்கு இந்தக் கதாபாத்திரத்துல நடிக்கும்போது எந்தக் கஷ்டமும் தெரியல. இந்த வாய்ப்பு கிடைக்குமா, அது தகுதியானவன்னு நிரூபிப்போமானு எண்ணங்கள்தான் எனக்குள்ள இருந்தது. தவிர, நான் இதுக்காகதான் இங்க வந்தேன். அதனால நடிக்கும்போது நான் எந்தக் கஷ்டத்தையும் உணரல.
பார்க்கிறதுக்கு நடிகர் மாதவன் மாதிரியே இருக்கீங்கன்னு கமென்ட்ஸ் உங்களுக்கு வந்தது பார்த்தீங்களா?
ஆமா, அது மாதிரி நிறைய கமென்ட்ஸ் பார்த்தேன். என்ன விஷயம் என்கிட்ட மேடி சார் மாதிரி இருக்கிறதைப் பார்த்தாங்கனு தெரியல. என்னுடைய மைக்கேல் மிராஸ் கதாபாத்திரத்தை வச்சு என்னை அடையாளப்படுத்துறதே எனக்கு பெரிய காம்ப்ளிமென்ட். அதே மாதிரி, என்னுடைய நடிப்பு வெறுக்க வைக்கிற மாதிரி இருக்குன்னு திட்டியும் கமென்ட்ஸ் போடுறாங்க. நான் மக்கள்கிட்ட இப்படியான வகையில பதிவாகிட்டோம்னு வருத்தப்படமாட்டேன். மக்கள் மனசுல நான் பதிவாகியிருக்கிற விஷயமே எனக்கு ரொம்பப் பெருசு!

படத்துல உங்களோட `நட்பு' படப்பிடிப்பு தளத்தில் உங்ககிட்ட எவ்வளவு நட்பாக இருப்பார்?
(சிரித்துக் கொண்டே...) நான் முதன் முதல்ல நேர்ல பார்த்த ஹீரோ சூர்யா சார்தான். நான் ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போது 'சில்லுனு ஒரு காதல்' படத்தோட ஷூட்டிங் கோவைல நடந்தது. நாங்க ஸ்கூலெல்லாம் கட் அடிச்சிட்டு அந்தப் படப்பிடிப்பைப் போய் பார்த்தோம். அப்படி பார்த்த ஒரு ஹீரோகூட நடிச்சது எனக்கு ஆச்சரியமாகதான் இருந்தது. அவருமே என்னுடைய நடிப்புக்கு அப்பப்போ சில இன்புட்ஸ் கொடுப்பாரு. ஷூட்டிங் முடிச்சிட்டு கடைசி நாள் எல்லோருக்குமே அவர் வீட்டுல டின்னர் கொடுத்தாரு. சூர்யா சார் வீட்டுல டின்னர் சாப்பிட்ட விஷயத்தை என்னால நம்பவே முடியல.

'டபுள் எக்ஸ்' படத்தின் சமயத்தில் ஹீத் லெட்ஜர் மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு கதாபாத்திரம் பண்றதுதான் என்னுடைய கனவுன்னு சொல்லியிருந்தீங்க! இப்போ அந்த கனவுக்கான பயணத்துல ரெண்டு படி முன்னாடி போயிருக்கோம்னு நினைக்கிறீங்களா?
இல்லங்க அந்தளவுக்கு நான் இன்னும் கேரக்டர்ஸ் பண்ணலனு தோணுது. எனக்கு நடிப்புல முழுமையான திருப்தி கிடைக்குமான்னு தெரியல! அவர் ஒரு கதாபாத்திரமாக மாறுவதற்கு பல மாசம் செலவு பண்ணுவார். அது மாதிரி நானும் முழுமையாக ஒரு கதாபாத்திரத்துக்குத் தயாராகணும்.