இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி...
Rohit Sharma : 'நீங்க 100 அடிச்சு டீம் தோற்றா எந்த பயனும் இல்ல!' - கேப்டன்சி குறித்து ரோஹித் சர்மா
'ரோஹித் பேட்டி!'
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் க்ளார்க்குக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில், கேப்டன்சி குறித்து நிறைய விஷயங்களை ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

ரோஹித் சர்மா பேசியதாவது, '2019 உலகக்கோப்பைக்குப் பிறகு எனக்கு ஒரு புரிதல் கிடைத்தது. அந்த உலகக்கோப்பையில் நான் 5 சதங்களை அடித்திருந்தேன். ஆனால், தொடரை வெல்லவில்லை. தொடரை வெல்லாமல் அவ்வளவு ரன்களை அடித்து என்ன பயன்? அதன்பிறகுதான் தொடர்களை வெல்வதும் சாம்பியன்ஷிப்களை வெல்வதும்தான் முக்கியம் எனும் நிலைக்கு வந்தேன்.
'கேப்டன்சியை கற்றுக்கொண்ட விதம்!'
ஒரு பேட்டராக நான் சந்தித்த சரிவுகளிலிருந்துதான் கேப்டன்சியை கற்றுக்கொண்டேன். ஒரு பேட்டராக என்னை வழிநடத்த யாருமே இல்லை. என்னுடைய தவறுகளை நானேதான் கண்டறிந்து திருத்திக் கொள்ள வேண்டிய சூழல். டிவியில் நான் ஆடிய போட்டிகளையே மீண்டும் மீண்டும் பார்ப்பேன். அப்போது எதிரணி கேப்டன்கள் எனக்கு எப்படி பீல்ட் செட் செய்கிறார்கள்.
நான் கேப்டனாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்றெல்லாம் யோசித்து யோசித்தே கேப்டன்சியை கற்றுக்கொண்டேன். டி20 போட்டிகளுக்கு கேப்டன்சி செய்வதுதான் சவாலான விஷயம். இங்கே ஒரே ஓவரில் போட்டி நம்முடைய கையை விட்டு செல்லக்கூடும்.
'எதை விடவும் அணிதான் முக்கியம்!'
எனக்கு நானே நேர்மையாக நடந்துகொள்ள விரும்பினேன். என்னால் பந்துகளை சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. அதே சமயத்தில் வேறு சில வீரர்களும் சரியாக ஆடவில்லை. இதனால் அணியின் மீது அழுத்தம் கூடியது. அதனால்தான் என்னை நானே ட்ராப் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தேன். அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவரிடம் பேசினேன்.

இது சரி தவறு என கொஞ்ச நேரம் விவாதம் நடந்தது. கடைசியில் அணியில் நலனை மனதில் வைத்து அந்த முடிவை எடுத்தோம். தேசிய அணிக்கு கேப்டனாக இருக்கையில் என்னுடைய வீரர்களும் இதே மனநிலையில்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எப்போதுமே அணியின் நலன்தான் முக்கியம். அதனால் வீரர்கள் தனிப்பட்ட சதங்களையோ விக்கெட்டுகளையோ எண்ணி வருத்தப்படக்கூடாது.
நீங்கள் சதமடித்துவிட்டு அணியால் வெல்ல முடியவில்லையெனில் அதில் என்ன பலன் இருக்கிறது?' என்றார்.