திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!
Russia - Ukraine War: ``போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தான்; ஆனால்..'' - புதின் கேட்கும் 3 கேள்விகள்!
இந்த வாரம், சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க - உக்ரைன் பேச்சுவார்த்தையில் உடனடி 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது உக்ரைன்.
அடுத்ததாக, அமெரிக்க அதிகாரிகள் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் அங்கேயே சென்று பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அறிவித்திருந்தார் ட்ரம்ப். ஒருவேளை போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான வரி விதிக்கும் என்றும் எச்சரித்திருந்தார் ட்ரம்ப். ட்ரம்ப் சொன்னதுப்போல அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்காக தற்போது ரஷ்யா சென்றுள்ளனர்.
இந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், "30 நாள் போர் நிறுத்தம் எங்களுக்கும் சந்தோஷம் தான். ஆனால்..." என்று மூன்று கேள்விகளை அடுக்கியுள்ளார்.

முதல் கேள்வி: உக்ரைன் ஆக்கிரமித்துள்ள ரஷ்ய பகுதியான குர்ஸ்க்கை பெரிய அளவில் மீண்டும் ரஷ்யா கைப்பற்றிவிட்டது. ஆனால், இன்னமும் உக்ரைன் படை அங்கே இருக்கத்தான் செய்கிறது. போர் நிறுத்தத்தின் போது, அந்தப் படையினர் சண்டை எதுவும் இல்லாமல் உக்ரைனுக்கே திரும்பிவிடுவார்களா அல்லது அவர்கள் ரஷ்யாவிடம் சரணடைவார்களா?
இரண்டாம் கேள்வி: ரஷ்யா தற்போது போரில் முன்னிலையில் உள்ளது. இந்த 30 நாள் போர் நிறுத்தத்தை உக்ரைன் படைகளை பலப்படுத்தவும், ஆயுதங்களை பெறவும் பயன்படுத்தினால் என்ன செய்வது?
மூன்றாவது கேள்வி: இந்த 30 நாள்களில் இரண்டு தரப்பினரும் முழுவதுமாக போர் நிறுத்தத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை யார் உறுதி செய்வார்கள்?
இந்தக் கேள்விகளுக்கு அமெரிக்கா பதிலளிக்குமா... அந்தப் பதிலை உக்ரைன் ஒத்துக்கொள்ளுமா? என்பதை அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகள் மூலம் தான் தெரிந்துகொள்ள முடியும்.