Sarfaraz Khan: 'முதலில் அவரைத் தோற்க விடுங்கள்..!' - சர்பராஸ் கானுக்கு கங்குலி ஆதரவுக் குரல்
சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்காமலேயே அவரைப் பற்றித் தீர்மானிக்காதீர்கள் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
சர்பராஸ் கான், கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சி உள்ளிட்ட முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாகத் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில், 54 ஆட்டங்களில் 16 சதமடித்து 4,500-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்திருக்கும் சர்பராஸ் கான், கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.
அந்தத் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய சர்பராஸ் கான், மூன்று அரைசதங்களுடன் 200 ரன்களை குவித்தார். அதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபரில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில், மூன்று போட்டிகளில் 171 ரன்களை குவித்தார். அதில், ஒரு இன்னிங்ஸில் 150 அடித்து அவுட்டாகியிருந்தார் சர்பராஸ் கான். தற்போது, ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் பார்டர் கவாஸ்கர் தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார்.
இருப்பினும், வாய்ப்பு கொடுத்தாலும் சரியாக விளையாடுவதில்லை போன்ற விமர்சனங்கள் சர்பராஸ் கான் மீது வந்த வண்ணமே இருக்கிறது. இந்த நிலையில், முதலில் வாய்ப்பு கொடுங்கள் என்று சர்பராஸ் கானுக்கு ஆதரவுக் குரல் கொடுத்திருக்கும் சவுரவ் கங்குலி, "அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். வாய்ப்பு கொடுக்காமலேயே எப்படி அவரைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசலாம்... முதலில் அவரைத் தோற்க விடுங்கள்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் டன் கணக்கில் ரன்களை குவித்து இந்திய அணியில் அவர் இடம் பிடித்திருக்கிறார். அவருக்கு வேறு யாரும் இதைக் கொடுக்கவில்லை. எனவே, வாய்ப்பு கொடுப்பதற்கு முன்பே அவரைப் பற்றி எழுத வேண்டாம். அவர் எப்படி நன்றாக விளையாடுகிறார் அல்லது மோசமாக விளையாடுகிறார் என்பதை அறிய அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். வாய்ப்பு கொடுக்காமல் அவரைத் தீர்மானிக்காதீர்கள்." என்று ஸ்போர்ட்ஸ் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்தார்.
நவம்பர் 22-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் இடம்பெறுவாரா என்பது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...