Saif Ali Khan: நீதிமன்ற உத்தரவால் சிக்கல்; ரூ.15,000 கோடி சொத்தை இழக்கும் சைஃப் ...
Sathyaraj: "தி.மு.க-வில் இணைந்திருக்கும் என் மகள் திவ்யாவுக்கு..." - சத்யராஜ் நெகிழ்ச்சி
நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அவரின் மகள் திவ்யாவும் சினிமாவில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியலில்தான் அவருக்கு ஆர்வம்.
பெரியார் கொளையால் ஈர்க்கப்பட்ட திவ்யா, விரைவில் 'தி.மு.க' வில் இணைவார் என்று நீண்ட நாள்களாகவே செய்திகள் பரவின. அவரும் தான் விரைவில் அரசியல் கட்சியில் இணையவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். அதை உறுதி செய்யும் வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜன 19) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 'தி.மு.க'வில் இணைந்தார். திமுகவின் கட்சி கொடியான கருப்பு - சிவப்பை பிரதிபலிக்கும் வகையில் கருப்பு - சிவப்பு நிற சேலை அணிந்திருக்கும் அவரது புகைப்படம் அரசியல் வட்டாரத்தில் வைரலானது.
இதுகுறித்து தற்போது இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் நடிகர் சத்யராஜ், "என் அன்பு மகள் திவ்யா திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டதற்கு எனது வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு தளபதி ஸ்டாலின் ஆகியோர் வழியில் சமூக நீதிக் கோட்பாட்டில் சமரசமின்றி வெற்றி நடைபோட என் மகள் திவ்யாவை மன்மார வாழ்த்துகிறேன்." எனப் பேசியிருக்கிறார்.