Socotra: 825 வகை தாவரங்கள்; 700 வகை உயிரினங்கள்; வேற்றுகிரகம் போல காட்சியளிக்கும் பாலைவன தீவு!
சகோத்ரா, ஏமனில் உள்ள ஒரு பாலைவனத் தீவு. உலக அளவில் இன்ஃப்ளூயன்சர்களாலும் சுற்றுலா செல்லும் பணக்காரர்களாலும் பெரிய அளவில் கவனிக்கப்படாத இந்த தீவு, சர்வதேச சுற்றுலா செல்லும் வாய்ப்புள்ள அனைவரும் சென்று பார்க்க வேண்டிய ஒரு தீவாகும்.
பூமிக்கு உள்ளே ஏதோ வேற்றுகிரகத்துக்கு சென்றதுபோல காட்சியளிக்கும் இந்த தீவுக்கு சுற்றிலும் சிறிய தீவுகள் உள்ளன. இதன் வடக்கே ஏமன் (மத்திய கிழக்கு) மற்றும் கிழக்கே சோமாலியா அருகில் உள்ள நாடுகள். இந்தியப் பெருங்கடலில் கார்டாஃபுய் கால்வாய்க்கும் அரேபிய கடலுக்கும் இடையில் அமைந்துள்ள இதனை தனித்துவமான பாலைவன தீவு என்கின்றனர்.
முழு பாலைவனமாக இல்லாமல் இந்த தீவில் தனித்துவமான டிராகன் பிளட் மரங்கள், அரியவகை பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன. இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச விரும்பிகளை ஈர்த்துவரும் இந்த தீவுக்கூட்டத்தை இந்தியப் பெருங்கடலின் Galapagos என அழைக்கின்றனர்.
இங்கு 4 பெரும் தீவுகள் உள்ளன. சகோத்ரா, அப்துல் குரி, சம்ஹா மற்றும் தர்சா. சகோத்ரா தீவை 2008ம் ஆண்டு உலக பாரம்பர்ய தளமாக அறிவித்தது யுனெஸ்கோ.
இந்த தனித்த தீவில் வெயில் காலத்தில் கொடூரமான வெயிலும், மழைக் காலத்தில் காட்டுத்தனமான பருவ மழையும் பெய்வதனால் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பு உருவாகியுள்ளது.
சகோத்ராவின் உள்பரப்பில் பல மலைகள் உள்ளன. அங்கிருந்து பல்வேறு மட்டங்கள் பீடபூமிகள் இருக்கின்றன. அதன் புல்வெளிகளில் அரிதான புற்கள் உள்ளன.
இந்த தீவுக்கூட்டம் 25 மில்லியன் ஆண்டுகள் பழைமையானது. வறண்ட மலைகள், சுண்ணாம்பு பீடபூமிகள் மற்றும் கடற்கரை சமவெளிகள் என பலவகையான நிலப்பரப்பும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் தீவாக இது விளங்குகிறது.
சகோத்ரா அதன் இயற்கை அதிசயங்களைத் தாண்டி, மனித தலையீட்டாலும் அரசியல் காரணங்களாலும் ஆபத்தைச் சந்தித்துள்ளது. வளைகுடா பகுதியிலிருந்து ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு பயணிக்கும் பாதையில் இருப்பதால், யு.ஏ.இ-க்கு இந்த தீவின் மீது ஒரு கண் உள்ளது. ஏமன் நாட்டின் உள்நாட்டு போரால் சகோத்ரா தீவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
சகோத்ராவில் 60,000 மக்கள் வசிக்கின்றனர். இந்த தீவின் பூர்வீகமான சகோத்ரி பழங்குடியினருடன், வெளியில் இருந்து வந்தவர்களும் உள்ளனர்.

இந்த தீவு ஏன் வேற்றுகிரகம் போல இருப்பதாகக் கூறப்படுகிறது என்ற முக்கிய விஷயத்துக்கு வருவோம். இந்த தீவில் உள்ள 825 தாவர வகைகளில் 37% தாவரங்கள் இந்த தீவைத் தவிர உலகில் வேறு எங்கும் இல்லை.
அதேப்போல அங்குள்ள ஊர்வனவற்றில் 90% மற்றும் நில நத்தைகளில் 95% இந்த தீவில் மட்டுமே வசிக்கும் உயிரினங்கள்.
தாவரங்கள்
இங்குள்ள மரங்கள் விசித்திரமானவை. பெரிய அளவிலான குடை போலவும் மர குழாயில் பிங்க் நிற புதர் இருப்பதுபோலவும் விநோதமாக காணப்படும். இந்த 825 தாவரங்களில் 307 அழியும் நிலையில் உள்ளன.
குடை போல காணப்படும் தாவரத்தின் பெயர் டிராகன் பிளட் மரம். இந்த மரத்திலிருந்து கிடைக்கும் சிகப்பு ரெசின் சாயமாகவும், மருத்துவத்திலும் பயன்பட்டுள்ளது. இங்குள்ள பல டிராகன் பிளாட் மரங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
இங்கு 9 வகையான சாம்பிராணி மரங்கள் (frankincense) உள்ளன. சகோத்ரா பாலைவன ரோஜா (The Socotra desert rose) என்பது மற்றொரு உள்ளூர் மரம். பாம்போ மரம் போல காணப்படும் இந்த மரத்தில் தண்ணீர் சேகரித்து வைக்கப்படுகிறது. இதில் அரிதாக இலைகளும் பூக்களும் முளைக்கும்போது மிகவும் தனித்துவமானதாகவும் அழகானதாகவும் இருக்கும்.
விலங்குகள், பறவைகள்
இந்த தீவில் 700க்கும் மேற்பட்ட உள்ளூர் விலங்கினங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அவற்றில் சகோத்ரா வார்ப்ளர், சகோத்ரா பன்டிங், பேய் நண்டு, சகோத்ரா சுண்ணாம்பு நண்டு, சகோத்ரா நீர்க்காலி, சகோத்ரா சூரியப் பறவை, எகிப்திய கழுகு, மற்றும் லாகர்ஹெட் ஆமை போன்றவை மிகவும் அரிதானவை.



இங்கு பலவகையான நண்டுகள், இறால்கள், மீன்கள் இருக்கின்றன. என்றாலும் வௌவால்கள் மட்டுமே இங்குள்ள ஒரே பாலூட்டிகள். தவளை போன்ற நில நீர் வாழ்விகள் ஒன்றுகூட இல்லை.
காலநிலை மாற்றமும் இங்குள்ள வளங்களை தொடர்ந்து பயன்படுத்துவதும் உயிரினங்களை ஆபத்தில் தள்ளியிருக்கின்றன. எனினும் உள்ளூர் சகோத்ரி மக்கள் வளங்களையும் உயிரினங்களையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு...
இயற்கை சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த மற்றும் சாகசம் நிறைந்த பயணத்தை விரும்புபவர்களுக்கு சகோத்ரா நிச்சயமாக ஏமாற்றமளிக்காத சுற்றுலாத் தளமாக இருக்கும்.
அரிதான விலங்குகள், பறவைகளை பார்ப்பதும் மரங்களை ரசிப்பதும் உங்களுக்கு விருப்பம் என்றால், மீன் பிடிக்கவும், கடல் ஆமைகளை ரசிக்கவும், பிசின் சேகரித்து வாழும் மக்களை அறிந்துகொள்ளவும் பிடிக்கும் என்றால் இந்த தீவு உங்கள் பயணத் திட்ட பட்டியலில் இடம்பெற வேண்டும்.
இங்கு புதைபடிவ ஆய்வு, மலையேற்றம், குகைகளை ஆராய்தல், முகாமிடுதல் (Camping) மற்றும் ஸ்கூபா டைவிங் போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபடலாம்.