தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
`StartUp' சாகசம் 40: `முதலீடு இன்றி தொடங்கினோம்; இன்று ..!’ - கருவாட்டு சந்தையில் சாதித்த கதை
நீல பொருளாதாரம் அல்லது கடல் சார்ந்த பொருளாதாரம் என்பது கடல், கடலோர மற்றும் நீர்வழி வளங்களை நிலைத்தன்மையுடன் பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் கடல் சூழலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொள்கையாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, 7,500 கிலோமீட்டர் நீளமான கடற்கரையுடனும் பரந்த கடல் பகுதியுடனும் இருப்பதால், நீல பொருளாதாரம் இந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது.
மீன்பிடித் தொழில், கப்பல் போக்குவரத்து, துறைமுக மேம்பாடு, கடல் சுற்றுலா, கடல் சார்ந்த ஆற்றல் உற்பத்தி, கடல் உயிரி தொழில்நுட்பம் மற்றும் கடல் கனிம வளங்கள் எடுத்தல் போன்ற பல துறைகள் இதில் அடங்கும். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் குஜராத் போன்ற கடலோர மாநிலங்களில் இந்த நீல பொருளாதாரம் ஏற்கனவே குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.

இந்தியாவின் காய்ந்த மீன் சந்தை நம் நாட்டின் மீன்பிடித் தொழிலில் மிகவும் பாரம்பரியமான மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒன்றாக விளங்குகிறது. ஆண்டுதோறும் ₹8,000 கோடிகளுக்கு மேல் மதிப்புள்ள இந்த சந்தை கடலோர மாநிலங்களில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது. இதில் தமிழ்நாடு ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது.
இந்த நீல பொருளாதாரத்தில் இந்தியாவின் கருவாட்டுச் சந்தையின் ஆண்டு மதிப்பு தோராயமாக ₹8,000 முதல் ₹10,000 கோடி வரை உள்ளது. ஏற்றுமதி மதிப்பு தோராயமாக ₹2,500 முதல் ₹3,000 கோடி வரை உள்ளது. இந்தத் தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் முக்கிய உற்பத்தி மையங்களாக விளங்குகின்றன.
கருவாட்டுத் தயாரிப்புகளில் பல வகைகள் உள்ளன. உப்பு சேர்த்து காய வைத்த மீன் அல்லது காய்ந்த மீன், வெயிலில் காய வைத்த இறால் அல்லது இறால் வற்றல், காய்ந்த கணவாய் அல்லது கணவாய் வற்றல், நெத்திலி பொடி மற்றும் சுறா துடுப்பு போன்றவை முக்கிய தயாரிப்புகளாகும். இவை அனைத்தும் பாரம்பரிய தமிழ் முறைகளில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு இந்தியாவின் மொத்த காய்ந்த மீன் உற்பத்தியில் சுமார் 30 சதவீதம் பங்களித்து வருகிறது. தமிழ்நாட்டின் கருவாட்டுத் தொழில் உலகளாவிய சந்தையில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. ராமேஸ்வரம், தூத்துக்குடி, சென்னை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகின்றன. ஏற்றுமதி சந்தையில் பெரும் வாய்ப்புகள் உள்ளன. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் புதிய சந்தைகளாக வளர்ந்து வருகின்றன.
சர்வதேச போட்டியின் சூழலில் இந்திய கருவாட்டுத் தயாரிப்புகள் பல நாடுகளுடன் போட்டியிட வேண்டியுள்ளது. வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த பேக்கேஜிங்குடன் உலக சந்தையில் இடம்பிடித்து வருகின்றன. இந்தப் போட்டியில் நம்முடைய பாரம்பரிய முறைகளை மேம்படுத்தி நவீன தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

லெமூரியா புட்ஸ் - சாகசக் கதை
தமிழ்நாட்டுக் கருவாட்டு மீன் துறையில் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று இணையம் வழியே கருவாட்டை விற்க ஆரம்பித்து வளர்ச்சியை நோக்கிப் பயணித்து வருகிறது.
லெமூரியா புட்ஸ் எனும் நிறுவனம் கொரோனா பரவத் துவங்கிய போது தான் ஆரம்பிக்கப்பட்டது. என்னதான் ஊரடங்கு போட்டாலும் தங்களுக்குள் உள்ள முயற்சிக்கு ஊரடங்கு போடாமல் மனம் தளராமல் பயணித்து வரும் அவர்களின் சாகசக் கதையைத் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.
கலை கதிரவன் தனது மனைவியுடன் இத்தொழிலை ஆரம்பித்த பின் அவரது அறை நண்பர் கிருஷ்ணசாமி இணைந்து கொள்ள, அவர்கள் வணிகம் விடாமுயற்சியுடன் தொடங்கி இன்று ரயில் நிலையத்தில் கூட கருவாடு விற்கலாம் என்ற நிலையை ஆரம்பித்துள்ளனர். இனி லெமூரியன் புட்ஸ் கலை கதிரவனுடன் நம்மோடு...
``உங்களுக்கு ஏன் உலர் மீன் (கருவாடு) வியாபாரம் மீது ஆர்வம் வந்தது? மற்ற வணிக வாய்ப்புகளை ஏன் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை?"
``நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இராமநாதபுரம் மாவட்டம் தான். பொறியியல் படிப்பு முடித்து,10 வருடம் பல்வேறு நிறுவனங்களில் பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் பணியாற்றினேன். அப்போது நமது ஊரில்/மாவட்டத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய கருவாடு கிடைப்பதில் சிரமம் இருந்தது. அப்போது என் நண்பர்கள் ஊரிலிருந்து வரும்போது கருவாடு வாங்கிவரச்சொல்லுவார்கள், சரி அமேசான் போன்ற தளங்களில் வாங்கலாம் என்று தேடி பார்க்கும்போது, அதன் விலை மிகவும் அதிகமாக இருந்தது.
பின்னாளில்,சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்ற எண்ணம் வந்தபோது, எனக்கு மிகவும் எளிதாக தோன்றிய தொழில் இது மட்டுமே.
இதுவே நான் இந்த தொழிலை தேர்ந்தெடுத்தற்கும், எனது தொழிலை Amazon தளம் மூலம் தொடங்கியதற்கும் காரணம் ஆகும்."

``பாரம்பரியமாக உலர் மீன் தயாரிப்பதற்கும், உங்கள் புதிய வணிகத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன? "
``எந்த ஒரு பொருளும் நமது தனி பயன்பாட்டிற்கு நாம் தயார் செய்யும் பொழுது, நாம் எந்த வித சமரசமும் இன்றி, விலையை பற்றி கவலை படாமல், ஒரு நல்ல பொருளை உருவாக்கி பயன்படுத்த வேண்டும் என்ற ஒற்றை எண்ணத்தில் நாம் தயார் செய்கின்றோம்.
அதே பொருளை வணிகப்படுத்த முயற்சிக்கும் பொழுது, அதில் நிறைய சமரசங்கள் செய்யப்படுகிறது. காரணம் அதை நாமோ, நமது பிள்ளைகளோ பயன்படுத்துவதில்லை என்ற எண்ணம் மற்றும் தயாரிப்பு செலவு மற்றும் நேரத்தை குறைந்து அதன்மூலம் அதை லாபம் அடையவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.
நாங்கள் எங்கள் தொழில் புதிய தொழில்நுட்பங்களை தாண்டி, எங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் ஒரு தொழிலை செய்து வருகின்றோம். அதே எண்ணத்தை எங்கள் பணியாளர்களிடம் புகுத்துகின்றோம்.
உதாரணமாக சில நேரங்களில் நாங்கள் கருவாடு கையாளும்போது, அதில் எங்களுக்கு மட்டுமே தெரிந்த சில குறைபாடுகள் இருக்கும். அதை அப்படியே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்தாலும் அவர்களுக்கு அது தெரியப்போவதில்லை. இது போன்ற சூழ்நிலையில் இதை அனுப்பலாமா என்று எங்கள் பணியாளர் கேட்கும்போது அவர்களுக்கு நாங்கள் சொல்வது ஒன்றே ஒன்று தான்.
எதோ ஒரு காரணத்தால், உங்களுக்கு இந்த பொருளை அனுப்ப வேண்டாம் என்று தோன்றுகிறது. அப்படி தோன்றும் பட்சத்தில் அதை கண்டிப்பாக அனுப்ப வேண்டாம். ஒரு பொருளை நீங்கள் பயன்படுத்த உங்களுக்கு ஒரு தயக்கம் வரும் பட்சத்தில் அதை மற்றவருக்கும் நாம் கொடுக்கக்கூடாது. இதை மட்டும் எந்த ஒரு தருணத்திலும் கடைபிடியுங்கள் என்று கூறினோம். அன்று முதல், நாங்களே இதை அனுப்பலாம் என்று கூறினாலும் அவர்கள் எங்களை அனுமதிப்பதில்லை.
மாறாக,அவர்கள் இதுபோன்ற பொருட்களை அனுப்பலாமா என்று கேட்கும்போது, சரி அனுப்புங்கள் என்று நாம் கூறி இருந்தால், நமக்கு நன்மை செய்வதாக நினைத்து அதைவிட மோசமான பொருளையும் அனுப்ப வாய்ப்பு உள்ளது.

நமது தரம் என்ன என்பதை நமது பணியாளர்களுக்கு உணரசெய்யும் பொழுது, எங்கள் பொருட்களில் பெரும்பாலும் Quality Complaints எங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்தது இல்லை.
ஆரம்பத்தில் இவ்வாறு செய்யும் போது அதிகமான பொருட்கள் வீணாக குப்பையில் போடும் சூழல் வந்து. இதை கண்ட எங்கள் பணியாளர்கள், எதனால் இதுபோன்ற பொருட்கள் வீணாகிறது என்று ஆராய்ந்து, அதை சரி செய்து, அவ்வாறு வீணாகாமல் பார்த்துக்கொள்கின்றனர்.
நாங்களும் எளிய தொழில்நுட்ப உபகரணங்களை கொண்டு எங்களின் கருவாடு செய்முறையை முறைபடுத்தினோம்"
``இந்தத் தொழிலைத் தொடங்கியபோது நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன, குறிப்பாக நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர்களை அடைவதில்? அவற்றை எவ்வாறு சமாளித்தீர்கள்?"
``கொரோனா காலக்கட்டத்தில் கூட நாங்கள் நல்ல விற்பனையை பெற்றோம், அதனால் எங்களுக்கு சவால்கள் நிதி சார்ந்து இல்லை, சந்தை படுத்துவதில் நிறைய சவால்கள் இருந்தது. இதை தாண்டி உளவியல் ரீதியான நிறைய சவால்கள் இருந்தன.
ஒருவர் ஒரு IT நிறுவனமோ, பிற தொழில்கள் செய்யும்போது, அவர் தன்னை அறிமுக படுத்தும் போதும், அவர் குடும்பத்தார் அவரை பற்றி தன் சொந்த பந்தங்கள் கேட்கும்போதும் எந்த தயக்கமும் இன்றி சொல்ல முடியும். சற்று பெருமிதத்துடன் கூட அறிமுக படுத்துவார்.
ஆனால் நான் தேர்ந்தெடுத்த தொழில் அவ்வாறு இல்லை. ஒரு வித தயக்கம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இருந்தது. இது ஒன்று மட்டும் தான் நான் சந்தித்த ஒரே சவால்....
நிதி சார்ந்த சவால்கள் பெரும் அளவில் இல்லை. பெரிய முதலீடுகள் இன்றி தொடங்கப்பட்ட தொழில் இது. இன்னும் சொல்ல போனால் முதலீடே இல்லாமல் தொடங்கப்பட்ட தொழில்.

எங்கள் வீட்டில் 10 x 7 அளவு கொண்ட ஒரு சிறிய இடத்தில் இதை தொடங்கினோம். அதனால் வாடகைக்கான தேவை இல்லை. நானும் எனது மனைவி அனிதாவும் மட்டுமே பணியாளர்கள். அதனால் யாருக்கும் மாத ஊதியம் கொடுக்க தேவை ஏற்படவில்லை. தனியாக கடை அமைப்பதற்கு பொருளாதாரம் இல்லாததால், அமேசான், Flipkart போன்ற இணையதளங்கள் மூலம் இந்தியா முழுவதும் எங்கள் பொருட்களை சந்தை படுத்தினோம். எங்களுக்கு இணையதளத்தை நானே உருவாக்கினேன். எங்களின் ஒரே முதலீடு கருவாடு மற்றும் அதை பேக்கிங் செய்ய தேவை பட்ட பொருட்கள் மட்டுமே. அந்த சிறிய முதலீடை கொண்டு நாங்கள் எங்கள் விற்பனையை தொடங்கினோம். அதன் மூலம் கிடைக்க வருமானத்தில் எங்களின் அடுத்தடுத் தேவைகளை பூர்த்தி செய்தோம். எங்கள் நாங்களே ஒரு பிராண்ட் ஆக உருவாக்கினோம்."
` `உங்களின் தயாரிப்புகளைப் பாரம்பரிய சந்தைகளைத் தாண்டி, ஆன்லைன் தளங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற நவீன சந்தைப்படுத்தல் முறைகளில் எப்படி பிரபலப்படுத்தினீர்கள்? எப்படி இந்த எண்ணம் தோன்றியது? இந்தத் தொழில் வளர்ச்சிக்கு அரசு வழங்கும் திட்டங்கள் அல்லது மானியங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவியது?"
``முழுமையான நெட்வொர்க்கிங்தான் , நெட்வொர்கிங்தான் எங்கள் தொழிலை நன்றாகவே கொண்டு சென்றது. ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு வளர எங்கள் கிராமத்துக்கு அருகில் ஒரு வேளாண் ஆராய்ச்சி மையம்(KVK) இருந்தது. ஒரு வேலை காரணமாக அங்கு செல்ல நேர்ந்தது. அங்கே முனைவர்.கலை செல்வன் மற்றும் முனைவர் பாலு ஆகியோரை சந்தித்தேன். எங்களை பற்றி விசாரித்துவிட்டு மதுரையில் உள்ள NABARD- MABIF சென்று பார்க்குமாறு கூறினர்.
அங்கு CEO திரு.சிவக்குமார் அவர்களை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பு எங்களை இன்று வரை அடுத்த அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்று.... வெறும் முதலீடு மட்டுமே வைத்து செய்ய முடியாத பல வேலைகள் இந்த நெட்வொர்க்கிங் மூலமாக செய்ய முடியும். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் இருந்து கொண்டு இதுவரை 1.05 கோடி முதலீடு பெற்றுள்ளோம். இதற்கு பெரும் காரணம் நாங்கள் வளர்த்துகொண்ட நெட்வொர்க்கிங் தான்...
NABARD- MABIF மையம் எங்களுக்கு 25 Lakhs முதலீடு செய்தது. அதை கொண்டு இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட் கருவாடு விற்பனை மையத்தை(Dry Fish Showroom) தொடங்கினோம். அதன் பிறகு, Startup TN மூலம் 80 லட்சம் முதலீடு பெற்றோம். இது மட்டுமா... நாங்கள் ரயில் நிலையத்தில் கூட கருவாடு விற்கின்றோம்."

``உங்கள் வணிகம் மீனவ சமூகத்தினருக்கு எவ்வாறு உதவுகிறது? உள்ளூர் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இது எந்த வகையில் பங்களிக்கிறது?"
``எங்களின் நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் அமைந்துள்ளது. எங்களுக்கு வரும் ஆர்டர்களை மீனவர்களுக்குக் கொடுத்தும், அதோடுஅந்த பகுதியில் உள்ள மீனவ பெண்கள் தான் எங்களிடம் பணியாற்றுகின்றனர். இதுவரை சுமார் 10 பெண்கள் பணியாற்றுகின்றனர். எங்கள் நிறுவனம் வளரும்போது இந்த எண்ணிக்கை இன்னும் உயரும்.. இவ்வாறாக அவர்களின் பொருளாதார வளர்ச்சியில் எங்களின் சிறிய பங்களிப்பும் உள்ளது...எங்களின் வளர்ச்சி எங்கள் அனைவருக்குமான வளர்ச்சியாக இருக்கும்."
``இந்தத் துறையில் நுழைவதற்கு ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் உங்கள் வெற்றிப் பயணத்திலிருந்து நீங்கள் சொல்லும் முக்கியப் பாடம் என்ன?
தொழில்நுட்பத்தைக்கொண்டு இன்னமும் விரிவாக வாடிக்கையாளர்களிடம் நம் தயாரிப்புக்களை எடுத்துச்சொல்வது.
கியூ ஆர் கோடு மூலம் எங்கள் கருவாடு எங்கே வாங்கப்பட்டது, அதன் சேர்மானங்கள் என்ன? அதிலிருந்து என்னமாதிரியெல்லாம் சமையல் செய்யலாம் என்பது பற்றியெல்லாம் நாங்கள் சேர்த்தோம். அது நல்ல வரவேற்பை பெற்றது
முக்கியமாக எந்த தொழிலும் இழிவானது கிடையாது. அதே சமயம் எந்த தொழிலும் சுலபமானதும் கிடையாது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம், குறைந்த நாட்களில் அதிக லாபம் என்று நீங்கள் YouTube இல் பார்க்கும் வீடியோக்களை நம்பி தொழிலில் இறங்க வேண்டாம்... நாங்கள் கடந்துவந்த பாதையில் அப்படி ஒரு தொழில் இல்லை.
சுலபமான, விரைவான வெற்றி என்பது மாயை. ஆனால் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது நிதர்சனம்... அதை நோக்கிய எங்கள் பயணம் தொடர்கிறது. இந்த பயணத்தில் பங்கேற்க நினைக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.”
(சாசங்கள் தொடரும்)
"StartupTN Seed Fund"
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (ஸ்டார்ட்அப்டிஎன்) தமிழ்நாடு விதை நிதி, ஒரு புதிய தொழில்முனைவோர் தனது புதுமையான யோசனையை நனவாக்க, அதற்குத் தேவையான மூலதனம், வழிகாட்டுதல், ஆதரவு போன்றவற்றை அளிக்கிறது. இதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான கருத்தாக்கம் தான் "StartupTN Seed Fund".
StartupTN Seed Fund வழியாக முதலீடு மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை.
யோசனையை நனவாக்குதல்: தங்கள் யோசனையைச் செயல்படுத்தத் தேவையான மூலதனத்தைப் பெறுதல்.
தொழில் வளர்ச்சி: திட்டப் பணி தயாரிப்பு, பொருள்/சேவை தயாரிப்பு மேம்பாடு, சந்தைப்படுத்தல், குழு விரிவாக்கம் போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குதல்.
வல்லுநர் வழிகாட்டுதல்: Startup TN Seed Fund பெரும் நிறுவனங்கள், தொழில்முனைவோர்களுக்கு வணிகத் திட்டமிடல், சந்தை ஆராய்ச்சி, நிர்வாகம் போன்ற துறைகளில் வல்லுநர் வழிகாட்டுதலை வழங்குகின்றன.
நெட்வொர்க்கிங் வாய்ப்புகள்: விதை நிதி வழியாக, தொழில்முனைவோர்கள் முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள், மற்றும் பிற தொழில்முனைவோர்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.