Sweden: குரானை எரித்து போராட்டம் நடத்திய நபர் சுட்டுக் கொலை - சுவீடனில் பரபரப்பு!
Sweden: குரானை எரித்து கலவரங்களுக்கு வித்திட்ட சல்வான் மோமிகா என்ற நபர், அவரது அப்பார்ட்மென்ட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஸ்வீடன் நாட்டில் உள்ள, ஹோவ்ஸ்ஜோ பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக புதன்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11:11 மணிக்கு அதிகாரிகளுக்கு அழைப்பு வந்திருக்கிறது.
வியாழன் அன்று மோமிகா உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது சமூக ஊடகங்களில் லைவில் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
குரான் எரிப்பு!
கடந்த 2023-ல் ஸ்டாக்ஹோம் மத்திய மசூதிக்கு வெளியே இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆனுக்கு மோமிகா நெருப்பு வைத்ததைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது.
ஸ்வீடனில் வசித்துவந்த மோமிகா இராக்கைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டுகளில் நான்குமுறை குறிப்பிட்ட இனக்குழுவுக்கு எதிராக போராடியதாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், இவரது மரணத்தால் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
வெளிநாட்டு சதி
மோமிகாவின் கொலையில் இதுவரை 5 நபர்களை ஸ்வீடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இருக்கும் அபாயம் உள்ளதால் ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த விசாரணையில் தலையிட்டுள்ளது.
மோமிகாவின் இஸ்லாமிய எதிர்ப்பு போராட்டங்கள் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இராக் நாட்டின் தலைநகரான பக்தாத்தில் மோமிகாவுக்கு எதிராக இரண்டுமுறை போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் தீவிரம் கருதி, ஸ்வீடன் தூதர் நகரை விட்டு வெளியேற்றப்பட்டார்.
சுவீடன் நாட்டின் கருத்து சுதந்திர சட்டங்களின் அடிப்படையில் மோமிகா குரானை எரித்து போராட்டம் நடத்தியபோது காவல்துறையினர் அவருக்கு அனுமதி அளித்ததுடன், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது இஸ்லாமிய மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோமிகாவின் வழக்கு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, புனித நூல்களை எரிக்கும் போராட்டங்களுக்குத் தடை விதிக்க சட்டரீதியான வழிமுறைகளை ஆய்வு செய்வதாக ஸ்வீடன் அரசு உறுதியளித்திருந்தது.