Tamil Cinema Business: படத்தின் திரையரங்க ரிலீஸுக்கு முன்பே எப்படி லாபம் கிடைக்கும்? | Depth
சினிமாவில் லாபக்கணக்கு
சினிமாவில் லாபக்கணக்கு திரையரங்க வசூலை வைத்து மட்டும் தயாரிப்பாளர்கள் கணக்கிடமாட்டார்கள். அந்த லாபக்கணக்கில் பல்வேறு விஷயங்கள் அடங்கியிருக்கிறது. இதில் ரிலீஸுக்கு முந்தைய ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மிகவும் முக்கியமானது.
இந்த பிசினஸ் விற்பனையை எட்டாமல் தாமதமாகினால் படத்தின் ரிலீஸும் தள்ளிப்போகும். அப்படி இந்த பிசினஸ் நடந்து முடியாததால் பல திரைப்படங்களின் ரிலீஸ் தேதியும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.

ஒரு திரைப்படம் தொடங்கப்பட்டு அது குறித்தான அறிவிப்பு வெளியான பிறகு அப்படத்திற்கான பிசினஸ் அனைத்தும் தொடங்கும்.
அப்படத்தின் ஆடியோ உரிமம், சாட்டிலைட் உரிமம், ஓ.டி.டி உரிமம் போன்ற பல விஷயங்கள் இந்த பிசினஸில் அடங்கியிருக்கிறது.
பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் இப்படியான ப்ரீ ரிலீஸ் பிசினஸில் பெரிய சிரமங்களை சந்திப்பதில்லை.
சொல்லப்போனால், பல பெரிய திரைப்படங்களும் ரிலீஸுக்கு முன்பு நிகழ்ந்த இந்த பிசினஸை படத்திற்கு ஒரு விளம்பரமாக வைத்து புரொமோட் செய்தும் வருகிறார்கள். ஆனால், சின்ன பட்ஜெட் திரைப்படங்களின் நிலைமை அப்படியே இதற்கு நேரெதிரானது.
சின்ன பட்ஜெட் திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்கின்றனர் பலர். ஆனால், ரிலீஸுக்கு முந்தைய பிசினஸிலேயே பல சவால்களை சந்திக்க வேண்டிய நிலைமை சின்ன பட்ஜெட் திரைப்படங்களுக்கு இருக்கிறது.

இதில் முக்கியமாக பெரிய திரைப்படங்களுக்கும், சின்ன பட்ஜெட் திரைப்படங்களுக்கும் ஓ.டி.டி பிசினஸ் முன்பிருந்ததுபோல இல்லை. அப்படியான ஓ.டி.டி விஷயத்தில் திரைப்படங்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி சாட்டிலைட் பிசினஸ் இன்னும் கடினமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். கடந்த ஆண்டு வெளியான 271 திரைப்படங்களில் 21 திரைப்படங்கள்தான் தொலைக்காட்சிக்கு விற்றிருகிறதாம். ஒரு படத்திற்கு முன் எப்படியான பிசினஸ் இருக்கும்? அவை என்னென்ன? அவற்றில் நமக்கு பெரிதளவில் தெரிந்திடாத விஷயங்கள் என்னென்ன என்பதைக் இக்கட்டுரையில் பார்க்கலாம்.
ஒரு படத்தின் பிசினஸுக்கு தொடக்கப்புள்ளி வைப்பதே இந்த ஆடியோ உரிமம் பிசினஸ்தான். சமூக ஊடகங்கள் அபரிமிதமான வளர்ச்சியை எட்டி அனைத்துமே உள்ளங்கையில் இப்போது அடங்கிவிட்டது.
சமூக ஊடகங்களைப் பிரதானப்படுத்தியே பல தொழில்களின் விளம்பரங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஒரு திரைப்படத்திற்கு முதல் முக்கியமான விஷயம் இந்த ஆடியோ உரிமம்தான்.

மியூசிக் லேபிள் ஒரு திரைப்படத்திற்கான ஆடியோ உரிமத்தைப் பெற்ற பிறகு அத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் அந்த மியூசிக் லேபிள்தான் வெளியிடும்.
அப்பாடல்களின் உரிமமும் அந்த மியூசிக் லேபிளிடம்தான் இருக்கும். ஒரு திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியானதும் உடனடியாக இந்த ஆடியோ உரிமத்திற்கான பிசினஸ் தொடங்கும் என்கிறார்கள்.
ஏனெனில், ஒரு படத்தின் ஆடியோ உரிமம் விற்பனையானால் அப்படத்தின் பாடல்கள் என அடுத்தடுத்த அப்டேட்கள் அனைத்தும் வெளிவரத் தொடங்கும். ஆதலால்தான் ஒரு திரைப்படத்திற்கு ஆடியோ உரிமம் மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிடுகிறார்கள்.
டாப் இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் திரைப்படத்திற்கு டிமான்ட் எப்போதும் அதிகமாக இருக்கும். நிச்சயமாக இந்த டாப் இசையமைப்பாளரின் பாடல் ஹிட்டடிக்கும் என நம்பிகையுடன் பெரிய தொகைகளைக் கொடுத்துகூட இந்த ஆடியோ உரிமத்தை ஆடியோ லேபில்கள் பெறும்.

ஆனால், இந்த டாப் வரிசையைத் தாண்டி இருக்கும் இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் திரைப்படங்களுக்கு இதுபோன்ற சீரான நிலைமை இருக்காது.
படத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு இந்த ஆடியோ பிசினஸ் அடித்தளம் என்பதால் பல சிறிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் வருவாய் பகிர்வு (Revenue Sharing) முறையைப் பின்பற்றியும் ஆடியோ உரிமத்திற்கு கையெழுத்திடுகிறார்கள். இதிலிருந்துதான் ஒரு படத்திற்கான பிசினஸ் தொடங்கும்.
ப்ரீ ரிலீஸ் பிசினஸில் இந்த டப்பிங் உரிமமும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆக்ஷன், ஹாரர், த்ரில்லர் திரைப்படங்களின் டப்பிங் உரிமத்தை உடனடியாகவே பெற்றுக் கொள்வார்களாம்.
சொல்லப்போனால், ஒவ்வொரு தென்னிந்திய திரைப்படத்திற்கான அப்டேட்கள் அனைத்தையும் இதுபோன்ற டப்பிங் உரிமத்தைப் பெறுபவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் எதிர்பார்க்கும் பார்முலா இத்திரைப்படத்தில் இருந்தால் டப்பிங் உரிமத்தைப் பெற்றுக்கொள்வார்கள். ஒரு திரைப்படத்தின் இந்தி மொழி டப்பிங் உரிமத்தைப் பெற்றவர்கள் அதை வைத்து அவர்களின் பிசினஸை மேற்கொள்வார்கள்.
ஓ.டி.டி தளங்களுக்கு, தொலைகாட்சிகளுக்கு டப் செய்யப்பட்ட இந்தப் பதிப்பை, உரிமத்தைப் பெற்றவர்கள் விற்பனை செய்வர். இதுவும் ஒரு முக்கியமான ப்ரீ ரிலீஸ் பிசினஸாகப் பார்க்கப்படுகிறது.
ஓ.டி.டி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் வருவது பெருமளவில் குறைந்துவிட்டது என திரையரங்க உரிமையாளர்கள் பலர் கூறி வருகிறார்கள்.
கொரோனா தொற்று பரவிய காலகட்டத்தில் ஓ.டி.டி தளங்கள் மக்களிடையே பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.
புதிய திரைப்படங்களை திரையரங்குகளுக்குச் சென்றுதான் பார்க்க முடியுமென இருந்த நிலைமை ஓ.டி.டி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு மாற்றம் பெற்றது.

சமீப மாதங்களாக ஓ.டி.டி தளத்தில் விற்பனை செய்வதற்கு பல சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறது. தற்போதைய ப்ரீ ரிலீஸ் பிசினஸில் ஓ.டி.டி உரிமம் முக்கியமானதொரு பங்கு வகிக்கிறது.
இதிலும் முக்கியமாக பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள்தான் முதலில் வியாபாரத்தை எட்டுமாம்.
பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களை ஓ.டி.டி தளங்களே அணுகி தாங்களே அதைப் பெற்றுக்கொள்வதாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
ஆனால், சிறிய திரைப்படங்களுக்கு இதுபோன்ற இலகுவான நிலைமை கிடையாது. சிறிய பட்ஜெட் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் தங்களுடைய திரைப்படங்களின் சிறிய பகுதியை ஓ.டி.டி தளங்களுக்குக் காட்டி வியாபாரத்தை மேற்கொள்வார்கள்.
அப்படி படத்தைப் பார்த்து `Pay per view' என்ற அடிப்படையிலும் சில திரைப்படங்களின் உரிமத்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், இவை இரண்டிற்குள்ளும் சிக்கும் சில திரைப்படங்களின் நிலைமையும் இங்கு இருக்கிறது.
சில திரைப்படங்களின் ஓ.டி.டி உரிமத்தை குறைவான பணம் கொடுத்து ஓ.டி.டி தளங்கள் பெற்றுக் கொள்ள முன் வரும்.

இந்தக் தொகைக்குப் பிறகு திரையரங்குகளில் இத்திரைப்படம் பெரிதளவில் ஓடினாலும் லாபத்தை எட்டாத சூழலை சந்திக்கும். இது போல சில திரைப்படங்கள் ஓ.டி.டி பிசினஸில் சில சவால்களை சந்திக்கும்.
அதிலும் சில திரைப்படங்கள் தற்போது வரை ஓ.டி.டி தளங்களில் விற்பனையாகமல் இருக்கிறது. இப்படியான ஒரு பிசினஸ் முறைதான் ஓ.டி.டி உரிமத்தைப் பெறுவதில் நிகழ்கிறது. சந்தாதாரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தற்போது தேர்ந்தெடுத்த சில திரைப்படங்களின் ஓ.டி.டி உரிமத்தை மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். பல ஓ.டி.டி நிறுவனங்கள் படம் திரையரங்கில் நன்றாக ஓடிய பிறகே விலை உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்துப் பேசுவதாகச் சொல்கிறார்கள். திரையரங்கில் தன்னை நிரூபிக்கிற சின்ன படங்களுக்குதான் ஓ,டி.டி.யில் சிவப்பு கம்பளம் விரிப்பதாகச் சொல்கின்றனர்.
முன்பெல்லாம் என்டர்டெயின்மென்ட்க்கு டி.வி, ரேடியோ மாதிரியான சில விஷயங்கள் மட்டும்தான் இருந்தது. ஆனால், தற்போது என்டர்டெயின்மென்ட்டுக்கான களமாக பல விஷயங்கள் இயங்கி வருகின்றன.
இதனால் டி.வி-யைப் பார்ப்பவர்களின் விகிதமும் குறைந்தது. கொரோனாவுக்கு முன்பு வரை மக்களுக்கு ஓ.டி.டி தளங்கள் பெரிதளவில் பரிச்சயம் கிடையாது.

சினிமாவிலும் ப்ரீ ரிலீஸ் பிசினஸில் ஓ.டி.டி பிசினஸ் என்ற ஒன்றே கிடையாது. சாட்டிலைட் பிசினஸ் ஒன்றே பிரதானமாக இருந்தது. ஆனால், ஓடிடி தளங்கள் பெரிதளவில் விரிவடைந்த பிறகு தொலைக்காட்சிக்கான மார்கெட் குறைந்தாகவே சொல்கிறார்கள்.
முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளியாகி சில மாதங்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடுவதற்காக காத்திருப்பார்கள். ஆனால், ஓ.டி.டி தளங்கள் பெரிய வளர்ச்சியை எட்டிய பிறகு இப்படியான எதிர்பார்ப்பு இப்போது இருப்பதில்லை.
திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமத்தை பெறுவதும் பெருமளவில் குறைந்திருக்கிறது. பெரிய நடிகர்களின் திரைப்படங்களை சேனலே முன் வந்து அப்படத்திற்கான சாட்டிலைட் உரிமத்தைப் பெற்றுக் கொள்ளும். மற்ற சின்ன பட்ஜெட் திரைப்படங்களை திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகே உரிமத்தைப் பெறுகிறார்கள்.

அதிலும் திரையரங்குகளில் பெரிதளவில் சோபிக்காத திரைப்படங்களின் உரிமத்தைப் வாங்குவதில்லை. கடந்தாண்டு வெளியான திரைப்படங்களில் சொற்ப திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமம் மட்டுமே வியாபாரமாகியிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றும் இருக்கிறது.
முன்பு ப்ரீ ரிலீஸ் பிசினஸில் நல்ல வியாபார மூலமாக திகழ்ந்து வந்த சாட்டிலைட் பிசினஸ் முன்பிருந்ததுப் போல இல்லை என்பதே பல தயாரிப்பாளர்களின் கருத்தாக இருக்கிறது.
தியேட்டர் உரிமத்திற்கான பிசினஸ் இந்தியா, ஓவர்சீஸ் என இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு திரைப்படத்தினைப் பார்த்து அல்லது ஒரு திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பொறுத்து இந்த பிசினஸ் நடைபெறும். இரண்டிலும் நடக்கும் பிசினஸ் குறித்து தனிதனியாகப் பாரக்கலாம்.
ஓவர்சீஸில் தமிழ் திரைப்படங்கள் ரிலீஸாவது குறைவுதான். பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களின் ஓவர்சீஸ் திரையரங்க உரிமத்தைப் பெறும் பிசினஸ் எப்போதும் சீராக இருக்கும்.

இதைத் தாண்டி ஒரு எதிர்பார்பை உருவாக்கும், இந்தத் திரைப்படத்திற்கு நிச்சயமாக மக்கள் வருவார்கள் என நம்பிக்கையை ஏற்படுத்தும் படங்களின் ஓவர்சீஸ் உரிமத்தை மட்டுமே வாங்குவார்கள்.
இந்திய தியேட்டர்களில் உரிமத்தை சில பகுதிகளாகப் பிரிப்பார்கள், வட இந்தியா மற்றும் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மற்றும் தெலங்கானா என சில பகுதிகளாகப் பிரிப்பார்கள்.
இதில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தமிழ்த் திரைப்படங்கள் தமிழிலேயேதான் வெளியாகும். ஒரு தமிழ்த் திரைப்படத்திற்கு எப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது என்பதைப் பார்த்து ஒரு விநியோகஸ்தர் அப்படத்திற்கான திரையரங்க விநியோக உரிமையைப் பெறுவார்.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் டப் செய்யப்பட்ட வெர்ஷனே வெளியாகும். ஒரு படத்தை டப் செய்து வெளியிடுவதற்கு அதிகமாக பணம் செலவாகும்.

அதனால், சில திரைப்படங்கள் தேர்ந்தெடுத்து அங்கு வெளியிடுவார்கள். இதே போன்றதொரு நிலைதான் வட இந்தியா திரையரங்க உரிமத்தைப் பெறுவதிலும் நிகழும். எப்போதும் பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு இருக்கும்.
இதுபோன்ற திரைப்படங்களைப் பார்த்து விநியோகஸ்தர்கள் அப்படத்தை வாங்கிக் கொள்வார்கள். ஆனால், சின்ன பட்ஜெட் திரைப்படங்களின் நிலைமை திரையரங்க வெளியீட்டிலும் பெரிய சிரமங்களைச் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
நாம் பார்த்த ப்ரீ ரிலீஸ் பிசினஸ் அனைத்தும் பெரிய திரைப்படங்களுக்கு மட்டுமே சாதகமானதாக நடக்கிறது. பல சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் பல சவால்களை தொடர்ந்து அனைத்துக்கட்டப் பிசினஸிலும் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது!
இக்கட்டுரைக்காக தயாரிப்பாளர் தன்ஞ்செயன் பல தகவல்களை நமக்கு எடுத்துரைத்ததோடு சில விஷயங்களையும் பகிர்ந்தார். அவர், `` ஆடியோ உரிமம் இப்போது டாப் இசையமைப்பாளர்கள் மியூசிக் போடும் திரைப்படங்களுக்கு நன்றாக நடந்து வருகிறது.
ஓ.டி.டி பிசினஸ் `OTT Friendly' நடிகர்களின் திரைப்படங்களுக்கு சீராக இருக்கிறது. சின்ன படங்களின் தயாரிப்பாளர்களெல்லாம் அவர்களுடைய படத்தின் 30 நிமிடங்களைக் கொண்ட பிசினஸ் கட்டைப் போட்டு காண்பித்து அவர்களிடம் படத்திற்கான ஓ.டி.டி உரிமத்தை விற்பனை செய்வார்கள்.

இதை தாண்டி சில திரைப்படங்களுக்கு `Pay Per View' முறையையும் பின்பற்றுகிறார்கள். சாட்டிலைட் பிசினஸை பொறுத்தமட்டில் பல திரைப்படங்களை ரிலீஸுக்கு முன்பு சேனல்கள் வாங்குவதில்லை.
டாப் நடிகர்களின் படங்கள் அவர்களுடைய லைப்ரரியில் இருக்கும். கடந்தாண்டு மொத்தமாக 241 படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் 21 திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமம்தான் விற்பனையாகியிருக்கிறது. மீதமுள்ள 210 திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமம் இப்போது வரை விற்பனையாகவில்லை." எனக் கூறி முடித்துக்கொண்டார்.
சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் இந்த ப்ரீ ரிலீஸ் பிசினஸில் சந்திக்கும் விஷயங்கள் பற்றிய உங்களின் பார்வையை கமென்ட்டில் பதிவிடுங்கள்!