Tiger death: கூடலூரில் மேலும் ஒரு புலியின் சடலம் கண்டெடுப்பு; தீவிர விசாரணையில் வனத்துறை
உலக அளவில் வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் வனப்பகுதியாக நீலகிரி பல்லுயிர் வள மண்டலம் விளங்கி வருகிறது. புலிகள் காப்பகம் மட்டுமின்றி அதனை ஒட்டியுள்ள தனியார் தேயிலை, காப்பி தோட்டங்களிலும் புலிகளின் நடமாட்டம் தென்பட்டு வருகின்றன. வயநாடு போன்ற பகுதிகளில் புலிகளின் மர்ம இறப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட நெலாக்கோட்டை வனச்சரகத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பெண் புலி ஒன்று உயிரிழந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். அந்த புலியின் உடலை மீட்டு உடற்கூறாய்வு செய்து, மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
புலிகளின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நெலாக்கோட்டை பகுதியில் இன்று (மார்ச் 6) காலை மேலும் ஒரு புலி இறந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். பாலினம், வயது, இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெலக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து 2 புலிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
