Travel contest: `இது சந்தோச பூமி’ - பயங்களை மீறி காஷ்மீர் சென்று வந்த அனுபவம்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
"காஷ்மீர் போறீங்களா.. அவ்ளோ தூரம்லாம் வேணாம் பக்கத்துலயே எங்கயாவது போய்ட்டு வாங்க"
காஷ்மீர் போக நானும் என் கணவரும் திட்டமிடும் பொழுது முதலில் வீட்டார்களிடம் இருந்து எதிர்ப்பு தான் வந்தது.
"வேற எங்கயாவது போலாம்ல.. அங்கேயே சண்டையா இருக்குமே.. உங்கள அங்க அனுப்பிட்டு நாங்க எப்படி நிம்மதியா இருக்குறது"
"அதெல்லாம் டூரிஸ்ட்டுக்கு ரொம்ப பாதுகாப்பா தான் இருக்கும். ஒன்னும் பயப்பட தேவை இல்லை" என்றெல்லாம் கூறி வீட்டாரை சம்மதிக்க வைத்ததோடு எங்களுக்கு துணையாக புதுமண தம்பதியினரான என் அண்ணா அண்ணியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு காஷ்மீர் கிளம்பினோம்.

உண்மையில் முன்தினம் வரை எனக்கும் உள்ளுக்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. அங்கே சென்று தான் ஆக வேண்டுமா மொழி தெரியாத இடம் வேறு. என்ன செய்யப் போகிறோமோ என்கிற குழப்பத்துடன் தான் தயாரானேன்.
முதல் விமான பயணம் தந்த கிறக்கத்துடன் டெல்லி வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் டெல்லியில் இருந்து ஒன்றரை மணி நேர விமான பயணத்தில் ஸ்ரீநகர் வந்து சேர்ந்தோம்.
ட்ராவெல் ஏஜென்சி மூலம் தான் நாங்கள் தங்குவதற்கு ஹோட்டலும் சுற்றி பார்ப்பதற்கான வாகன வசதிகளையும் பதிவு செய்திருந்தோம்.

விமானத்தில் இருந்து இறங்கியவுடன் எங்களுக்கென பதிவாகி இருந்த வாகன ஓட்டுநரை அழைக்க அலைபேசியை எடுத்தேன். அலைபேசியில் சிக்னல் கிடைக்க வில்லை. பின் என் கணவர், அண்ணன் அண்ணியின் அலைபேசியில் அழைக்கலாமென பார்த்தால் யாருடைய அலைபேசியிலும் சிக்னல் இல்லை.
உள்ளுக்குள் மீண்டும் பயம் எழுந்தது. ஸ்ரீநகர் விமான நிலையம் டெல்லி விமான நிலையம் போல் பரபரப்பாக இல்லை. ஏதோ ஓர் அமைதியான சூழல் நிலவியது. வெளியில் இராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்க்கும் பொழுது இன்னும் பதட்டம் ஆனது.
வாகன ஓட்டுநர்கள் சிலர் கையில் பெயர் பலகையை சுமந்து கொண்டு நின்றிருந்தனர். அதில் எங்கள் பெயர் இருக்கின்றதா என ஒவ்வொருவர் பெயர் அட்டைகளிலும் தேடினோம்.

"என்னடா கடைசில நம்மலையும் ஜப்பானில் கல்யாணராமன் கவுண்டமணி மாதிரி முனுசாமி முனுசாமின்னு அலைய விட்டுட்டாங்க" என்று என் அண்ணன் கூறியதும் எங்களுக்கு குபீரென சிரிப்பு வந்தது. இதற்குத்தான் பயணத்தில் பேச்சுத் துணைக்கு நம்மை போல குணம் உள்ளவரையும் அழைத்து செல்ல வேண்டுமோ!
'BALAJI REVATHI SELVA RADHA'
இறுதியில் எங்கள் பெயர் பலகையை கொண்டவரையும் கண்டுகொண்டோம்.
இங்கே தான் அடுத்த திருப்பம். அவருக்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது. அவருக்கு தெரிந்த ஹிந்தி எங்களுக்குத் தெரியாது.
அவருக்கு எங்கள் எண்ணங்களை புரிய வைக்க முடியாமல் இடையில் இன்னொருவரை அழைத்து அவருக்கு ஆங்கிலத்தில் கூறி எங்கள் நிலையை விளக்கினோம்.
அதற்கு பதிலாக எங்களை அழைத்து செல்ல வந்த ஓட்டுநர் எங்களுக்கு ஒரு லோக்கல் சிம் ஒன்றை கொடுத்தார். அதை எங்கள் அலைபேசியில் போட்டுக் கொண்டோம். எங்களை அனுப்பி வைத்த ஏஜென்சியை அழைத்தோம்.

"அங்க இங்கிலிஷ் தெரிஞ்ச டிரைவர்ஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் சார்... நீங்க அதுக்கு தனியா அமௌன்ட் கட்டணும்.. இவரு உங்கள எல்லா இடத்துக்கும் பத்திரமா கூட்டிட்டு போவாரு.. எந்த பிரச்னையும் இருக்காது.. இந்த லோக்கல் சிம் அங்கிருந்து வர வரைக்கும் நீங்களே யூஸ் பண்ணிக்கலாம்" என்றார்.
அதற்கு மேல் எங்களுக்கும் வேறென்ன செய்வது என்று தெரியவில்லை.
எங்களுடைய காஷ்மீர் பயணத்தை இனிதே தொடங்கினோம்.
முதலில் துலிப் தோட்டம்(Tulip garden) ஸ்ரீநகருக்கு சென்றோம்.
நாங்கள் ஏப்ரல் மாதத்தில் தான் சென்றோம் என்பதால் துலிப் மலர்கள் பூத்து குலுங்கும் காலமாக இருந்தது.
ஒரு மலர் பூத்து குலுங்கியிருப்பதை காணவே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஒரே இடத்தில் லட்சக் கணக்கான மலர்கள் மலர்ந்து இருந்தால் அதை வர்ணிக்கத்தான் வார்த்தைகள் உண்டா!
ஊதா நிற மலர்கள், சிவப்பு நிற மலர்கள், வெள்ளை நிற மலர்கள், ஆரஞ்சு நிற மலர்கள், மஞ்சள் நிற மலர்கள், நீல நிற மலர்கள் என பல வண்ணங்களில் நேர் வரிசையாக நேர்த்தியாக இருந்த மலர் கண்காட்சி தோட்டத்தில் மலர்களை ரசித்துக் கொண்டே மலர்களோடு சேர்த்து எங்களையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

கொஞ்சம் இதமான வெயில் இருந்ததால் நானும் அண்ணியும் ஆளுக்கொரு தொப்பி வாங்கி அணிந்து கொண்டோம். உள்ளூரில் தொப்பி அணிந்து கொண்டு நடக்க முடியுமா..
ஆடை சுதந்திரமும் பிடித்த மாதிரியான அபாரணங்கள் அணிந்து கொள்ளும் சுதந்திரமும் சுற்றுலாவில் தானே அனுபவிக்க முடியும்.
பூங்காவில் காஷ்மீர் ஆடைகளை வாடகைக்கு போட்டுப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். நாங்களும் ஆசைக்காக காஷ்மீர் ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
பகல் பொழுதை பூங்காவில் கழித்து விட்டு மதிய உணவிற்குப் பின் தால் லேக்(Dal Lake) செல்லத் தயாரானோம். முதலில் பார்க்கும் பொழுது ஏதோ படகுகள் சவாரி செய்யப் போகும் இடம் என்று நினைத்து கொண்டு இறங்கினோம்.
அங்கே வேறொவர் வந்தார் எங்களை படகு வீட்டிற்கு அழைத்து சென்றார்.

மாலை ஐந்து மணிக்கு ஷிகாரா ரைடு செல்ல தயாராகி வந்தோம். இயல்பாக இருக்கும் படகு சவாரி போல் இல்லை இந்த ஷிகாரா சவாரி. குளிர் காலத்தில் உறைந்து இருக்குமாம் இந்த ஏரி. சீசன் நேரத்தில் தான் இந்த மாதிரியான சவாரியெல்லாம். தால் ஏரி பெரியதாக இருந்தது. அங்கேயே பல கடைகள் இருந்தன. தண்ணீர் மேலே இத்தனை மனிதர்களா என்கிற ஆச்சர்யம் நிச்சயம் சவாரியின் முடிவில் இருக்கும்.
அங்கே இருந்த கடைகளை சுற்றிப் பார்த்து விட்டு தேவையான பொருட்களை வாங்கினோம்.
என்னதான் நம் ஊரில் அதே பொருட்கள் கிடைத்தாலும் காஷ்மீரில் வாங்கினோம் என்று சொல்வதற்காக சில பொருட்களை வாங்க ஆசை எழுந்தது. எந்த ஊருக்கு சென்றாலும் அப்படி வாங்க வேண்டியதாய் தானே உள்ளது.
மாலைப் பொழுதில் சூரிய பிம்பம் மின்ன ஆரம்பித்த பயணம் நிலவின் ரம்மியத்தோடு முடித்து விட்டு மீண்டும் படகு வீட்டிற்குச் சென்றோம்.
இரவில் பிரட் ஆம்லெட்டும் நாணும் தயாராக வைத்திருந்தார் படகு வீட்டை பராமரிப்பவர்.
அவரைப் பார்க்கும் பொழுது ஹாலிவுட் படத்தில் வருபவர் போல் இருந்தார். உண்மையில் படகு வீடே ஹாலிவுட் உணர்வை தந்தது.
என்ன மாதிரியான வாழ்க்கை இது! படகிலே அறை படகிலே குளியலறை படகிலே உணவுக் கூடம் எல்லாம்.
எங்களுக்கும் என் அண்ணன் அண்ணிக்கும் மட்டுமே தனி படகு வீடு அதில் மூன்று அறை இரண்டு அறையில் நாங்கள்.
புகைப்படங்கள் பல எடுத்து சந்தோசத்தை பதிவு செய்து கொண்டோம்.

அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கு எழுந்து படகு வீட்டின் வாசலில் நின்று சூரிய உதயத்தை கண்டோம்.
பற்கள் நடுங்க நடுங்க குளிரை அணைத்துக் கொண்டு சூரியன் இல்லாத சூரிய வெளிச்சம் உள்ள விடியலை கண் கொட்டப் பார்த்துக் கொண்டே நின்றேன்.
அப்படியே சில நிமிடங்கள் நின்று விட்டு படகு வீட்டில் குளித்து முடித்து தயாரானேன்.
ஏழு மணிக்கெல்லாம் காலை உணவை தயார் செய்து வைத்து விட்டார் அதே படகு பராமரிப்பாளர். இந்த முறை சாப்பிடும் பொழுது அவருடன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே உண்டோம். வெவ்வேறு விதமான மனிதர்களின் வாழ்வியலை அறிந்து கொள்வதும் சுற்றுலாவின் நோக்கம் தானே!
சோன்மார்க்(Sonamarg) கிளம்பினோம்...
வழியெங்கும் இதமான வெயில் இருந்தது. காஷ்மீர் என்றாலே முழுவதும் பனியாக இருக்கும் என்றெல்லாம் எண்ணியிருந்தேன். ஆனால் அப்படி இல்லை இங்கும் வெயில் காலத்தில் இயல்பான வெப்ப நிலை தான் இருந்தது. சில இடங்களில் மலைகளில் பனி உறைந்து இருந்தது
ஆங்காங்கே இராணுவ வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். ஊரில் சில இடங்களில் என்றுமே பாதுகாப்பு படையினர் இருப்பார்களாம். சோன்மார்க்கில் கீழிருந்து மலை மேலே செல்வதற்கு குதிரை மூலம் செல்ல வேண்டி இருந்தது. முதலில் குதிரை மேலே ஏற பயமாகத் தான் இருந்தது.
ஏறி அமர்ந்து குதிரை செல்ல செல்ல பய உணர்வு சுவரஸ்யமாய் மாறியது. குதிரையின் பயிற்சியாளர் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு நடந்து வர நாங்கள் குதிரை மேல் அமர்ந்து பயணித்தோம்.

குதிரை கனைக்கும் சத்தத்தோடும் குதிரையின் காலடி சத்தத்தோடும் மலை மேல் ஏறுவது எனக்குள் ஓர் இளவரசி உணர்வை எழுப்பியது. அவ்வப்போது மலைகளின் ஓரம் குதிரை செல்லும் பொழுது பயம் எழுந்தாலும் மொத்தமாய் குதிரையின் மேல் பயணித்த அனுபவம் பரவசம் தந்தது.
இங்கே தான் இறங்க வேண்டும் எனக் கூறி எங்களை இறக்கி விட்டு இடத்தில் இருந்து வலது புறம் திரும்பி பார்த்ததும் உடல் சிலிர்த்து நின்றேன்.
'புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது'
பனி சூழ்ந்த மலை. தரையில் இருந்து முதல் அடி பனி மலையின் மீது வைக்கும் பொழுது உச்சி குளிர்ந்து தான் போனது.
காலுக்கு தனி ஷூ கொடுத்திருந்தார்கள். நான் சில நிமிடங்கள் வெறும் காலில் நடந்து விட்டு பின் காலணி அணிந்து கொண்டேன்.
கால் பனி கட்டிகளில் புதைந்து வெளி வந்தது. நடக்கவே சிரமமாக இருந்தது. ஆனாலும் ஆசை தந்த மகிழ்ச்சியில் பனிகட்டிகளின் ஊடே நடந்து தீர்த்தோம். அங்கே இருந்த ஸ்கேட்டிங் போன்ற சிறு சிறு விளையாட்டுகளில் விளையாடினோம். பனி கட்டிக்களை தொட்டுப் பார்த்து தூக்கி வீசி நெகிழ்ந்தோம். கிளம்பவே மனம் இல்லாமல் ஏறி ஏறி இறங்கினோம்.
விளையாடியதில் பசி... அங்கே மேகி மட்டும் சூடாக கிடைத்தது. ஆளுக்கொரு கிண்ணம் வாங்கி உண்டோம். என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட்டுத் தானே ஆக வேண்டும். குளிரில் சுடச் சுட சாப்பிட்டது மேலும் சுவையாகத் தெரிந்தது.
அங்கே பார்த்து முடித்து விட்டு சூரியன் மறைவதற்குள் எங்களை எங்களுக்கென ஒதுக்கி இருந்த நட்சத்திர உணவகத்தில் இறக்கி விட்டார் வாகன ஓட்டுநர். நேற்று படகு வீட்டில் இன்று நட்சத்திர ஹோட்டலில். இரவு ஏழு மணிக்கு தயாராகிக் கொண்டு உணவருந்த சென்றோம்.

பஃபே முறையில் உணவுகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.
இனிப்புகள்... நான்... பன்னீர் பட்டர் மசாலா... சாலட்... புலாவ்... வெஜ் பால் மஞ்சுரியன்... சிக்கன் கிரேவி... இன்னும் பல
நாம் நம் ஊரிலேயே வட நாட்டு உணவுகளையும் சைனீஸ் உணவுகளையும் உண்டு பழகி விட்டோமே. அதனால் நம் ஊரில் உண்பது போல் தான் இருந்தது. அரிசியின் மிருதுவில் மட்டும் மாற்றம் இருந்தது.
உணவை முடித்து விட்டு வெளியில் புற்களின் மேல் போட்டிருந்த நாற்காலிகளில் நால்வரும் அமர்ந்து சிறிது நேரம் உரையாடினோம். நேரம் ஆக ஆக குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது.
சீக்கிரமே அறைக்கு சென்று உறங்கினோம். அதிகாலையிலே விழிப்பும் வந்தது. ஜன்னலின் வெளியே பார்த்தேன். மழை தூறல் இருந்தது. காஷ்மீரின் மழையையும் பார்த்து விட்ட மகிழ்ச்சி. சில நிமிடங்களிலே மழை நின்றது பரவாயில்லை நாங்கள் வெளியில் செல்ல வேண்டும் என்கிற சுயநல திருப்தி.
அறையில் குளிக்க அவர்களே சோப்பு ஷாம்பு எல்லாமும் வைத்திருந்தனர். நட்சத்திர ஹோட்டலில் என்ன இருந்தாலும் நம் வீட்டு அறை போல் வருமா..
குளித்து முடித்தும் முகம் தெளிவாக இல்லை. பனியில் நேற்று விளையாடிதில் ஏற்பட்டிருந்த சொரசொரப்பா.. தண்ணீர் மாற்றி ஊற்றுவதால் தோலில் சேராத் தன்மையா தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் தாண்டியும் ஒரு பொலிவு இருந்தது முகத்தில்.. சுற்றுலாவில் உள்ள பொலிவு.
'குல்முகர் மலரே குல்முகர் மலரே…
கொல்ல பார்க்காதே…
உன் துப்பட்டாவில் என்னை கட்டி…
தூக்கில் போடாதே…'
காரில் ஹிந்தி பாடல்கள் ஓடின. ஆனால் எனக்குள் இந்தப் பாடல் தான் ஒலித்தது. ஏன் என்றால் நாங்கள் இன்று செல்லப் போவது குல்மார்க்(Gulmarg) காஷ்மீரில் புகழ் பெற்ற இடம்.

குல்மார்க்கில் இரண்டு மலை உச்சிகள் இருக்கின்றன. அங்கே வெப்பநிலை மிகவும் குறைவாகத் தான் இருக்குமாம். பனி கட்டிகளோடு மூடு பனியும் சூழ்ந்து இருக்குமாம். ஆர்வத்துடன் உள்ளே சென்றோம்.
"மலை உச்சிகளுக்கு செல்லும் கண்டோலா ரைடிற்கு ஆன்லைனில் டிக்கெட் எடுத்திட்டீங்களா?" என கேட்டார்கள் நுழைவு வாயிலில் ஆங்கிலத்தில்.
"ஆன்லைன்னா.. நேர்லயே எடுத்துகலாம்னு ஏஜென்சில சொன்னாங்க" என்றார் என் கணவர்.
"ஒரு மாசமா ஆன்லைன்ல தான் டிக்கெட் புக் பண்ண வராங்க.. ஆப்லைன் டிக்கெட் இப்போ இல்லை.. ஆன்லைன்ல செக் பண்ணுங்க.. இருந்தா புக் பண்ணுங்க.." என்றனர்.
"இதெல்லாம் சரியா விசாரிக்க மாட்டியா.. இப்போ டிக்கெட் கிடைக்கலன்னா இன்னிக்கு பிளான்யே போச்சு" என்றான் அண்ணன் சற்று கோபமாக.
"அவங்களுக்கும் என்ன தெரியும்.. நம்மலும் முன்னாடியே என்னன்னு பாத்துருக்கணும்.. டென்ஷன் ஆகாம இப்போ செக் பண்ணுங்க" என்றார் அண்ணி.
எங்கள் தொலைபேசிகளில் இணைய சேவை கிடைக்கவில்லை. ஓட்டுநர் கொடுத்த சிம்மிலும் இணையம் எடுக்கவில்லை. தமிழும் ஆங்கிலமும் தெரியாத எங்கள் ஓட்டுநரிடம் எப்படியோ இதை சொல்லி புரிய வைத்தோம்.
அவர் முகம் வாடியது. எங்களுக்காக அவர் வருந்தினார். எங்களை அருகில் இருந்த ஒரு நெட் சென்டருக்கு அழைத்து சென்றார். அங்கே முதல் மலை உச்சி (Phase 1) டிக்கெட் மட்டும் பதிவு செய்ய முடிந்தது. இரண்டாம் மலை உச்சியான(Phase 2) டிக்கெட் கிடைக்கவில்லை.
நாங்கள் வருத்தமுற்றதை கண்டு அங்கே இருந்த பெரியவர் எங்கள் அருகில் வந்தார்.
"ஏன் உங்கள் முகம் இவ்வளவு வாடி இருக்கின்றன.. இது சந்தோச பூமி.. காஷ்மீர் பூமியின் சொர்க்கம்.. இங்கே இப்படி சோர்ந்து நிற்கக் கூடாது.. முதல் மலை உச்சியிலும் நிறைய அதிசயங்கள் உள்ளன.. அதை மகிழ்ச்சியோடு கண்டு களியுங்கள்" என்றார் ஆங்கிலத்தில்.
இப்படிப்பட்ட மனிதர்களிடமான உரையாடல் கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய இன்றைய பயணத்தின் நோக்கமோ என்னவோ!
"வாபஸ்" என்றார் சிரித்துக் கொண்டே எங்கள் ஓட்டுநர்.
அதாவது எல்லாம் சரியாகி விட்டதா இப்பொழுது குல்மார்க் செல்வோமா என்கிற அர்த்தத்தில்.
முதலில் அவரைப் பார்க்கும் பொழுது திரைப்படங்களில் வரும் வில்லன் போல் இருக்கிறாரே என பயந்தேன். ஆனால் அவர் உள்ளம் கள்ளம்கபடமற்றது.
மொழி புரியாமல் முக பாவனைகளிலே எங்களை புரிந்து கொண்டார். நான்கு நாட்களும் எங்கள் பயணத்தை சிறப்பாக அமைத்து கொடுத்தார்.
ரோப் கார் போல் இருக்கும் கண்டோலாவில் முதல் மலை உச்சிக்கு சென்றோம்.

குளிரின் உச்சம் உணர்ந்தோம். பற்கள் நடுங்க ஆரம்பித்தன. கைகள் உறைந்தன. மூடு பனியில் சிறிது தூரம் தாண்டி யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை.
காஷ்மீரின் காவா டீ வாங்கி பருகினோம். பனியில் விளையாட ஆரம்பித்தோம். வெறும் கையில் பனி கட்டிகளை தொடவே முடியவில்லை. கையில் உறைகள் அணிந்து கொண்டு பனியில் விளையாடினோம். ஸ்நோ மொபைலிங் காரில் சென்றோம். மேலும் சில விளையாட்டுகளில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம்.
பனியில் போர்த்திக் கிடந்த மலையோடு எங்களை பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
உதிரியாய் கீழே கிடந்த பனி கட்டிகளை மீண்டும் மீண்டும் கைகளில் தீண்டினேன்.
"ரொம்ப நல்லாருக்குள்ள இந்த உணர்வு"
"நல்லாருக்கும்.. நாங்களும் காஷ்மீருக்கு இரண்டாவது முறை பியூட்டிஃபுல் ப்லேஸ்" நாங்கள் பேசிக்கொள்வதைப் பார்த்து எங்கள் அருகில் இருந்த ஒரு தமிழர் கூறினார்.
தமிழ்நாட்டை தாண்டி செல்லும் பயணங்களில் தமிழர்களை காண நேரும் பொழுது அவர்கள் தமிழ் பேசி கேட்கும் பொழுது ஒரு தனி சந்தோசம் ஏற்படத் தான் செய்கின்றது.
நிறைந்த மகிழ்ச்சியோடு அங்கிருந்து கிளம்பினோம். ஹோட்டல் அறைக்கு சென்றோம். அங்கே கிடைத்த இணைய வசதி மூலம் வீட்டாருக்கு புகைப்படங்கள் அனுப்பினோம்.
எங்களுக்கு கிடைத்த லோக்கல் சிம் மூலம் அலைபேசியில் பேசினோம். அவர்கள் நினைத்த நேரத்தில் எங்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவர்களும் சிரமப்பட்டார்கள். அவ்வப்போது பேசி நாங்கள் பத்திரமாக இருக்கிறோம் என்பதை தெரிவித்தோம்.
காஷ்மீரில் கடைசி நாளாக பகல்கம்(Pahalgam) சென்றோம். ஆரு பள்ளத்தாக்கு(Aru Valley) பேடாப் பள்ளத்தாக்கு(Betab Valley) மற்றும் சந்தன்வாரி (Chandanwari) சென்றோம். அதற்கென தனி காரில் சென்று அதன் வரலாற்று சிறப்புகள் அறிந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வந்தோம்.
ஒவ்வொரு இடத்திலும் குதிரை சவாரி மற்றும் பிற சாகச விளையாட்டுகள் விளையாடும் பொழுது அதெற்கென தனியாகச் செலவு ஆனது. அதற்கேற்றார் போல் பணம் வைத்து கொள்வது நலம்.
இறுதியாக காஷ்மீரில் உலர் பழங்கள், குங்குமப்பூ, ஆப்பிள் ஊறுகாய் மற்றும் நினைவு பொருட்கள் சில வாங்கினோம்.
"எனக்கு பானிபூரி சாப்பிடணும் போல இருக்கு" வட இந்தியாவிற்கு வந்துவிட்டு பானிபூரி சாப்பிடாமல் செல்வதா.. என் அண்ணி ஆசைப்பட குளிர்ந்த நீரில் நனைத்து கொடுத்த பானிபூரியை உண்டுவிட்டு விமான நிலையத்திற்கு கிளம்பினோம்.
வீட்டிற்கு வந்ததும் இரண்டு மூன்று நாட்கள் சுற்றியும் மலையும் பனியுமாய் தெரிந்தன. காட்சிகள் கண்களை விட்டு அகலாமல் இருந்தன.
சுற்றுலாவிற்கு கிளம்பும் வரை தான் அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா அப்படி சென்று என்ன செய்யப் போகிறோம் இங்கேயே இருந்து விடலாமே என்றெல்லாம் யோசிக்க வைக்கும்.
திட்டமிட்டு சரியான வழிகாட்டுதலின் படி கிளம்பி விட்டால் பெரிய தூரம் எல்லாம் ஒன்றும் இல்லை. செல்லும் தூரங்களுக்கு ஏற்ற ஆச்சர்யங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சென்றடையும் இடம் மட்டும் இல்லாமல் வழியெங்கும் நிகழும் கற்றலும் அனுபவங்களும் சுற்றுலாவிற்கு மேலும் அழகூட்டுகின்றன.
பயணிப்போம்! நம்மை உணர்வோம்! வாழ்வை ரசிப்போம்!
- ரேவதி பாலாஜி
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.