Travel Contest : பாண்டி டு பாரீஸ்! - நடைமுறை என்ன? சுத்தி பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பாண்டிச்சேரியிலிருந்து பாரிஸ் மற்றும் புருஷெல்ஸ் செல்வதுதான் எனக்கும் எனது இல்லத்தரசிக்குமான திட்டம். விசா விண்ணப்பத்திற்குத் தேவையான 18 ஆவணங்களை என் மகளும் மருமகனும் மெயிலில் அனுப்பினார்கள்.
இதில் மிக முக்கியமானது பாரிஸில் அவர்கள் வசிக்கும் நகராட்சியின் அனுமதிக் கடிதம் ஆகும்.
இந்த ஒரிஜினலைத்தான் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.
பெற்றோர் என்கின்ற முறையில் நாங்கள் மூன்று மாதங்கள் தங்குவதற்கான தனி அறை வசதி உள்ளது என்பதற்கான சான்றிதழ்.
மற்றவை எல்லாம், சொந்த வீட்டுப்பத்திரம், வீட்டுவரி ரசீது, மின்கட்டண ரசீது, தொலைபேசி கட்டண ரசீது, 3 வருட வருமானவரி ரசீது, 3 மாத சம்பளப் பட்டியல், 3 மாத வங்கிக்கணக்கு, இத்துடன் மூன்று மாதங்களுக்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக இருவரின் உறுதிமொழியுடன், அழைப்புக்கடிதம் கட்டாயம் தேவை.

எங்கள் தரப்பில் பல ஆவணங்கள்:
மூன்று வருட வருமானவரி தாக்கல் செய்த சான்றிதழ், பென்ஷன் புத்தகம், எனது மற்றும் மனைவியின் மூன்று மாத வங்கிக் கணக்கு, எங்கள் செலவுகளை நாங்களே செய்துகொள்ளமுடியும் என்பதற்கு உத்திரவாதமாக குறைந்தபட்சம் நான்கு லட்சம் இருப்பு இருக்கவேண்டும்.
பிரான்ஸிலிருந்து இந்தியா திரும்பி வந்துவிடுவேன் என்பதற்கு உத்திரவாதமாக வீட்டுப்பத்திர நகல் அல்லது நிரந்தரவைப்புச் சான்றிதழ் முதலியவற்றைத் தயார்செய்வதற்கு ஒருமாதகாலம் ஆகிவிட்டது.
அனைத்தையும் சரிபார்க்க டிராவல் ஏஜென்ஸியின் சர்வீஸையும் பெற்றோம். அவர்கள் எங்களது ஒரிஜினல் பாஸ்போர்டையும் சரிபார்த்து, முறைப்படி வரிசைப்படுத்திக் கொண்டார்கள்.
நாங்கள் மூன்று மாதகாலம் ஷெங்கன் விசா பெற எங்கள் இருவருக்கும் மருத்துவக் காப்பீடு செய்யச் சொன்னார்கள்.
மருத்துவக் காப்பீடு பற்றி எழுதினால் பல பக்கங்கள் ஆகும். பயணத்தேதி முதல்நாள் முதல் திரும்பிவரும் பயணத்தேதி மறுநாள் வரை எங்கள் இருவரின் வயதைப்பொறுத்து ரூபாய் 25641/- ஆகிவிட்டது.

முன்னதாகவே , நாங்களும் பழக்கப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று முன் பரிசோதனைச் செய்துகொண்டோம். வெளிநாட்டுப் பயணம் என்று சொன்னதால் டாக்டரும் நமக்கு வலி தெரியாமல் ஊசிபோடுவதுபோல , இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட் என்று எல்லாம் எடுக்கவைத்து பில் போட்டுவிட்டார். மேலும் மூன்று மாதத்திற்கு மருந்து மாத்திரைகள் எழுதிக்கொடுத்துவிட்டார்.
அவர், "வெளிநாட்டில் நமது மருந்துகள் கிடைக்காது; செலவுகள் ஈரோவில் செய்யவேண்டிவரும்; நீங்கள் போகுமிடத்தில் நிம்மதியாக இருக்கவேண்டும்; உங்கள் குழந்தைகளும் நிம்மதியாக உங்களைச் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும்; மருந்துகளை தவறாமல் சாப்பிடுங்கள் "என்று அறிவுரை வழங்கினார். எல்லாம் பல ஆயிரங்கள் ஆகிவிட்டது.
அடுத்து VFS என்று சொல்லக்கூடிய visa facilitations services அவர்களிடமிருந்து விசா இன்டர்வியூ அப்பாய்ன்ட்மெண்ட் வந்துவிட்டது. குறிப்பிட்ட நேரத்தில் புதுச்சேரி VFS சென்றுவிட்டோம். அவர்களும் ஆவணங்களை சரிபார்த்துவிட்டு ஏற்றுக்கொண்டார்கள்.
ஷெங்கன் விசா கட்டணம் சில பல ஆயிரங்கள், அவர்களது சேவைக்கட்டணமாக சில ஆயிரங்கள், பாஸ்போர்ட்டை நமக்கு கூரியரில் அனுப்புவதற்கு முக்கால் ஆயிரம் என்று பில் கொடுத்து வாங்கிக்கொண்டார்கள்.

விசா பத்து நாட்களில் வந்துவிட்டது். அந்த பத்து நாட்களும் வருமோ வராதோ என்ற பரிதவிப்பு. பாஸ்போர்டைத் திறந்து விசாவைப் பார்த்தவுடன் ஒரு இனம்புரியாத பரவசம். அடுத்து விசா தேதிக்கும் திரும்பிவரும் தேதிக்கும் இடையில் நாம் நல்லநாள் பார்க்கும் பழக்கம் நம்மை விடவில்லை. நல்லநாள் பார்த்து விமான டிக்கெட் போடப்போனால் இன்றையத்தேதியில் கட்டணம் உயர்ந்து விட்டது.
சரி லக்கேஜ் எடை எவ்வளவு…. எவ்வளவு ……என்று கேள்விகள்: ஒவ்வொரு விமான நிறுவனமும் வேறு வேறு மாறுபட்ட எடையைத்தான் அனுமதிப்பார்கள். நமக்கு ஏற்ற விமானத்தில் டிக்கெட் போட்டாகிவிட்டது. அடுத்து, இப்போது என்னென்ன பொருட்களை வாங்கி வைத்தோமோ அவற்றை எடைப்போட்டு குறிப்பிட்ட எடைக்குள், கட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும். ஒரே ஒரு கிலோ எடை கூடினாலும் ஆயிரங்களில் சார்ஜ் கட்டவேண்டும். கடைசி நாள்வரை மிகமிக அவசியமான பொருட்கள் நினைவுக்குவரும்.
அத்துடன் மூன்று மாதகாலம் நம் வீட்டு மளிகையை இருப்பு வைக்கமுடியாது, கெட்டுவிடும். அதனால் மளிகையை. விரைவில் சாப்பிட்டு தீர்த்துவிடவேண்டும். விசாவுக்கு விண்ணப்பித்தவுடன் புதிய மளிகை வாங்குவதை மூன்று மாதங்கள் தள்ளிப்போட வேண்டும்.
வீட்டுப்பாதுகாப்புக்கு கேமராக்களை சரிபார்ப்பது அல்லது மாற்றுவது, புதிய பக்கா பூட்டுகளை வாங்கிவிடவேண்டும்
எல்லாம் சுருக்கமாக முடிந்துவிட்டது. பாரிஸ் வந்து சேர்ந்தாகிவிட்டது. விமானத்தில் ஏறியது முதல் இறங்கும் வரை சுவாரசியமாகத்தான் இருக்கும். அனுபவத்தில் தெரிந்துக்கொள்ளலாமே.
பாரிஸ் வந்துசேரும்போது வெள்ளி, சனிக்கிழமை என்றால் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் நம்முடன் இருப்பர். திங்கட்கிழமை அவரவர் ஆபீஸ், பள்ளிக்கு கிளம்பிவிடுவர்.
எனது மகள் எனக்கு வழக்கப்படி மொபைல் சிம், பஸ், ட்ராம், மெட்ரோ பாஸைப் புதுப்பித்துவிட்டாள். ஒரே பாஸில் மூன்று வகைப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தலாம். ஒருநாளில் எத்தனை முறைவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 30 நாட்களும் நம்மால் பயணம் செய்ய முடியாது என்பது தான் நிதர்சனம்.
பாரிசில் எல்லோரும் முதலில் விரும்புவது ஈபில் டவர். ஆன்லைன் டிக்கெட் 36 ஈரோ.( 1 ஈரோ=₹ 98 ). இது லிப்ட் பயணத்திற்கு.
படிக்கட்டு ஏறியும் டவர் உச்சியை ஆடையலாம். அதற்கு 20 ஈரோ. ஈபிள் டவரின் உயரம் 330 மீட்டர் (1,038 அடி). 674 படிக்கட்டுகள் ஏறி இரண்டாவது மாடிக்குச் செல்லலாம்.
உச்சியை அடைய லிப்ட் பயன்படுத்த வேண்டும். உச்சியிலிருந்து. பாரிஸின் அழகை சிலுசிலுப்பான காற்று வீசும் சுகத்தில் கண்டு ரசிக்கலாம்.
ஈபிள் டவரின் அடிவாரமே மிகவும் விசாலமானது. கேண்டீன்களில் வாங்கிக்கொண்டு உட்கார்ந்து பேசிக்கொண்டே டவரின் கட்டுமானத்தை வியந்து ரசிக்கலாம். கட்டணமில்லா கழிவறைகள், படுசுத்தம்.

இன்னொருநாள் லூர்வ் மியூசியம். பண்டைய பொக்கிஷங்களின் கண்காட்சி. ஆடைகள் அணிகலன்கள், பிரஞ்ச் மன்னர்கள், அரசிகள், இளவரசிகள் இளவரசர்களின் மணிமுடிகள், கட்டில்கள், தங்க நாற்காலிகள், மதுவருந்தும் தங்கக்கோப்பைகள், தங்க சிகரெட் டப்பாக்கள் ஏராளம்: ஏராளம். அதிசயத்தக்க நூலகங்கள். மிகமிக நேர்த்தியான பராமரிப்பு.

இன்னொரு நாள் நோத்ருதாம் என்றழைக்கப்படும் கத்தீட்ரல். நீண்டவரிசையில் நிற்கும் பலநாட்டு ஐரோப்பியர்களையும் அவர்களின் உடை, மென்மையான உடலசைவு, ஆரவாரமற்ற நடை, பொதுவிடத்தில் பெரியசத்தமின்றி மென்மையாகப் பேசும் நாகரீக தன்மையை அறியலாம். வரிசையில் பொறுமையுடன் நின்று, எவ்வளவு இடைவெளி இருப்பினும் முந்திக்கொண்டு புகுந்துசெல்லாத நாகரிகம். கத்தீட்ரல் உள்ளே பெல்ஜியம் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சர்சின் நடுவே சிலுவையில் அறையப்பட்ட யேசுவின் சிலை.
இன்னொரு நாள் : பாந்தியன் பயணம் பிரமாண்ட முன்வரிசைத்தூண்கள். ஒவ்வொரு தூணும் 110 மீட்டர் உயரம். நமது மதுரை நாயக்கர் மஹாலில் உள்ளது போன்றே மிக அகன்ற உயரமானவை. இது ஒரு முக்கியமான வரலாற்றுச் சின்னம். இதன் நடுவில் அமைந்துள்ள கூம்பு பாரிஸின் வானவெளியில் தனித்துவமானது்.
பிரான்ஸின் முக்கியமான அறிஞர்கள், எழுத்தாளர்கள், மற்றும் தலைவர்கள் இதனுள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். உலகின் சுழற்சியை நிரூபிக்க Leon Foucault நிறுவிய பெண்டுலம் இங்குதான் உள்ளது. நுழைவுக் கட்டணம் 13 ஈரோ. 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இலவச அனுமதி.
லூர்து அன்னை ஆலயம்:
லூர்து... பாரிஸிலிருந்து TGV என்னும் நீண்டதூரம் செல்லும் ரயிலில் பயணம். தூரம் 880 கி.மீ. முதல் வகுப்புக் கட்டணம் 92 ஈரோ. விசாலமான, சொகுசான இருக்கைகள். பாரிஸின் மோம்பர்னஸ் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 5 மணிக்குப் புறப்பட்டோம். மிகப்பெரிய ரயில் நிலையம். காலை 6.36 மணிக்கு சரியாக ரயில் புறப்பட்டது.
ரயில் வேகம் 300 கி.மீ. லூர்து. இம்மாக்குலேட் கன்சப்சன் தலைமையகம். 1858 ம் ஆண்டு புனித பெர்னதெத் சுபிஷரூஸ்க்கு அன்னை மரியா 18 முறை காட்சி அளித்ததாக நம்பப்படுகிறது. கோயிலின் பின்புறமுள்ள மலைக்குகையிலிருந்து ஊற்றெடுத்துப் பாயும் புனிதநீர் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கொண்டதாக கருதப்படுகிறது. மூன்றடுக்கு தேவாலயம். ஒவ்வொரு அடுக்கிலும் நுட்பமான கட்டடக்கலை. இந்த ஊரே மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. மிகவும் சவுகரியமான விடுதிகள் நிறைய உள்ளன.
நடுத்தரக் கட்டணம் € 132. ஒரு இரவு தங்குவதற்கு..

பார்சிலோனா பயணம் :
ஸ்பெயின் நாட்டின் மிக அழகிய கடற்கரை நகரம். பாரிஸ் நகரிலிருந்து விமானம் மூலம் நான், மனைவி, மகன், மகள், மருமகன் மருமகள் இரண்டு பேரப்பிள்ளைகளுடன் பயணம் செய்தோம். ஓட்டல் முன்பதிவு செய்து நகரின் முக்கிய இடத்தில் தங்கினோம். நகருக்குக் கீழே ரயில் நிலையம். பஸ், கார் மட்டுமே வெளியே சாலைகளில் காணமுடிகிறது்.
கடற்கரையில் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், அமெரிக்காவை விரல்நீட்டி சுட்டிக்காட்டுகிறார். பார்சிலோனாவி்ல தான் 1992ம் ஆண்டு 25வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. ஒலிம்பிக் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட கிராமங்கள், விளையாட்டு மைதானங்கள் புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன. ஊரைச் சுற்றிப்பார்க்க திறந்த சுற்றுலாப் பேருந்துகள் சிகப்பு, பச்சை, நீல வண்ணப் பேருந்துகள். கட்டணம் € 16. 24 மணி நேரம், 2 நாட்கள் கூட பயணிக்கலாம்.

இங்குள்ள பார்சிலோனா பசிலிகா கத்தீட்ரல், கோத்திக் கட்டடக்கலை, சாக்ரடா பாமிலியா ஆகியவற்றின் கலவையாகும். உயரமான கோபுரங்கள், வளைவுகள் நிறைந்த சிக்கலான வடிவமைப்புகள் கொண்டதாக உள்ளது. பிரபல கட்டடக்கலை நிபுணர் ஆண்டோனி கௌடி வடிவமைத்துள்ளார். 1882ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சர்ச் இன்னும் முடிக்கப்படவில்லை.
இத்தகைய பசிலிகா கத்தீட்ரலில் 2023 ம் ஆண்டு டிசம்பரில் கிருஸ்துமஸ் பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது. டிசம்பர் மாத கடும் பனிமழையில் காலை 4.00 மணிக்கு நடுங்கும் குளிரில் வரிசையில் குடைபிடித்துக் காத்திருந்து 8.00 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.
9.00 மணிக்கு கிருஸ்துமஸ் மாஸ் பிரார்த்தனை ஆரம்பித்து 11.00 வரை கலந்துகொண்ட பாக்கியத்தை எப்படி வர்ணிப்பது. பலநாடுகளிலிருந்து வந்தவர்களில் மொத்தம் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
அதில் நாங்கள் கலந்துக் கொண்டது ஆண்டவர் அருள் என்றே நம்புகிறோம்.

சுவிட்சர்லாண்ட் தித்லிஸ் பயணம் :
பெல்ஜியம்- புருஷெல்ஸிலிருந்து 2 நாட்கள் பேக்கேஜ் பயணம். கடும் குளிரில் இரவு பெல்ஜியத்தைக் கடந்து லக்ஸம்பெர்க் நாட்டின் வழியாக அதிகாலை நேரத்தில் சுவிசர்லாண்டின் ரீண்பால்ஸ் அருவிக்கரையை அடைந்தோம்.
இந்த ரீண்நதி சுவிசர்லாந்தில் உற்பத்தியாகி ஜெர்மனி, பிரான்ஸ், லக்ஸம்பர்க் நாட்டை செழிப்பாக்கி இறுதியில் வடக்குக் கடலில் கலக்கிறது.
இது ஐரோப்பாவின் மிக நீண்ட நதியாகும். இந்த நதிகரையில் உள்ள ஷாபௌசென் நகரின் மத்தியில் உள்ள சுவிசர்லாண்ட் நேஷனல் வங்கியைச் சுற்றி்பபார்த்தோம். நம் ஊரில் ரயில்கள் மின்சார கம்பிகளைத் தொட்டுச்செல்வது போல் இங்கு பஸ்கள் ஓடுகின்றன.
நாங்கள் அத்தகைய பஸ்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு பஸ்ஸின் தொடுகோல் மின்கம்பிகளை விட்டுவிலகிவிட்டது. பஸ் நின்றுவிட்டது. டிரைவர் இறங்கி நீண்ட மரக்குச்சியால் தொடுகோலை நிமிர்த்தி விட மீண்டும் பஸ் இயங்கியது.

அன்று இரவு ஆந்தர்லேக்கின் என்கின்ற ஊரில் நல்ல ஓட்டலில் தங்கினோம். இரவு 11 மணிக்கு மேலும் கடைகள் திறந்திருக்கின்றன. எல்லாக் கடைகளிலும் கைக்கடிகாரங்கள் சர்வசாதாரணமாக விற்கப்படுகின்றன.
சிறியது முதல் பெரிய கடைகள்வரை நூற்றுக் கணக்கில் கைக்கடிகாரங்கள் விற்கப்படுகின்றன. இந்த நாட்டின் நாணயம் ஃப்ராங்க் ஆகும். நாம் ஈரோவைக் கொடுத்தால் ஃபராங்க் கணக்கில் மாற்றி மீதி கொடுக்கிறார்கள்.
மறுநாள் அதிகாலை 5.00 மணிக்கு எழுந்து பனிக்கட்டிகள் மூடிய சாலையில் 2 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி சென்று அந்த அனுபவத்தையும் பெற்றேன். காலை 10.00 மணிக்கு தித்லிஸ் சிகரத்திற்கு பஸ் பயணம். 12.00 மணியளவில் தித்லிஸ் அடிவாரத்தை அடைந்தோம். பத்தாயிரம் அடி உயரம் ஏற வேண்டும். மைனஸ் 19 டிகிரி குளிர்.
பெண்களும் ஆண்களுமாக பனிச்சறுக்கு விளையாட்டு உடையில் வந்தக்கொண்டே இருக்கிறார்கள். வரிசைப்படி வின்ச்சில் ஏறிச்சென்றோம். உயரே செல்லச்செல்ல கீழே பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்களின் சாகசங்களை வியந்து பார்த்தோம்..12.30 மணியளவில்
உச்சியை அடைந்தோம். சுற்றிலும் பனி மூடியச்சிகரங்கள். ஐஸ் படலங்களின் மேல் விளையாட்டு. ஒருவர்மேல் ஒருவர் வீசி ரசித்தோம். கண்ணாடிகளால் அடைக்கப்பட்ட சுழலும் ஒட்டல். ஆர்டர் கொடுத்து சூடாண உணவு வருவதற்குள் ஒரு சுற்று முடிந்துவிட்டது.
நானும் இந்த சுற்றை முடித்துக் கொண்டு நான்காவது முறையாக ஐரோப்பிய பயணத்தில் இருக்கும் நான் அடுத்த சுற்றுக்கு வருகிறேன். சுபம்!
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.