ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
Trump: `முக்கியப் பொறுப்பில் தமிழர் நியமனம்' டிரம்பிற்கு எதிராகவும், ஆதரவாகவும் எழும் குரல்... ஏன்?
'Make America Great Again' - அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் அதிகம் முழங்கிய ஒன்று. அமெரிக்காவில் அனைத்திலும் மற்ற நாட்டவர்களை விட, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதன் மையம் தான் இந்த முழக்கம்.
இந்த முழக்கத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான விஷயங்களை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பே டிரம்ப் பேசி வருகிறார். அதில் முக்கியமான ஒன்று, 'அமெரிக்காவில் குடியேறும் பிற நாட்டவர்களை குறைப்பது அல்லது தடுப்பது'.
இப்போது என்ன பிரச்னை?
'அமெரிக்கர்களுக்கு ஆதரவாக பேசி...அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை' என்று பிரசாரம் செய்து வாக்குகளை அள்ளிய டிரம்ப், தற்போது தனது ஏ.ஐ ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த ஶ்ரீராம் கிருஷ்ணன் என்பவரை நியமித்துள்ளது அமெரிக்காவில் பிரச்னையையும், சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.
டிரம்பின் தீவிர ஆதரவாளர் மற்றும் வலதுசாரி செயற்பாட்டாளரான லாரா லூமர் டிரம்பின் இந்த நியமனத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது எடுத்த நிலைபாட்டிற்கு மாறாக டிரம்ப் தற்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை தனது அலோசகர்களில் ஒருவராக நியமித்துள்ளது லாரா லூமருக்கு மட்டுமல்ல, டிரம்பின் ஆதரவாளர்களில் ஒரு பிரிவினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க் நிலைப்பாடு என்ன?
நாணயத்தின் இன்னொரு பக்கம் போல, டிரம்ப்பின் இன்னொரு பிரிவு ஆதரவாளர்களான எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி டிரம்பின் இந்த முடிவை ஆதரித்துள்ளனர்.
அவர்களைப் பொறுத்தவரை, 'அமெரிக்காவில் குறிப்பிட்ட சில துறைகள் மற்றும் பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதனால், அவைகளை நிரப்ப நிச்சயம் வெளிநாட்டினர் தேவை' என்பது அவர்களது கருத்து.
H1B விசா முறையை காப்பாற்ற போருக்கு கூட செல்வேன் என்று எலான் மஸ்க் பதிவிட்டிருக்கிறார்.
மேலும், ஶ்ரீராம் கிருஷ்ணன் எலான் மஸ்கின் நம்பிக்கைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
H1B விசா...
இந்த இடத்தில் H1B விசா குறித்து நாம் தெரிந்துகொள்வது மிக அவசியமாகும். H1B விசா என்பது தகுதியான பிற நாட்டு தொழிலாளர்களுக்கு அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்ற கொடுக்கப்படும் விசா ஆகும். ஒரு ஆண்டுக்கு அமெரிக்கா 65,000 H1B விசா வழங்கி வருகிறது.
இந்த H1B விசா பெறுபவர்களில் 70 சதவிகிதம் பேர் இந்தியர்கள் மற்றும் 10 சதவிகிதம் பேர் சீனர்கள். மீதம் உள்ள 20 சதவிகிதத்தை தான் உலகில் உள்ள பிற நாட்டினர் பெறுகிறார்கள்.
மேலே கூறிய நியமிப்பிற்கு எதிர்ப்புகள் கிளம்புகிறப் போது, தானாகவே இந்த H1B விசா குறித்த பிரச்னை எழுகிறது. இந்தப் பிரச்னையினால் H1B விசா குறித்த கொள்கைகள் அல்லது சட்டங்கள் மாற்றப்பட்டால், இதில் பெரிதும் இந்தியர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.
டிரம்ப் என்ன சொல்கிறார்?
நேற்று H1B விசா குறித்து டிரம்ப் பேசும்போது, "H1B விசா என்பது நல்ல திட்டம். H1B விசா பெற்ற பலர் எனது நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்" என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால், கடந்த காலங்களில் H1B விசாவிற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தவர் டிரம்ப் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு பிரிவு அமெரிக்கர்களை பொறுத்தவரை, H1B விசா என்பது அவர்களது வாய்ப்பை பறிக்கும் ஒரு முறை ஆகும். இதை யாராக இருந்தாலும் ஆதரிக்கக்கூடாது என்பது அவர்களது கொள்கை. அவர்களால் முக்கியப் பதவிகளில் அமெரிக்கர் அல்லாதவர்களை நியமிப்பது ஏற்றக்கொள்ள முடியவில்லை.
ஆனால், எலான் மஸ்க், விவேக் ராமசாமி போன்ற தொழிலதிபர்கள் H1B விசா மூலம் தங்களுக்கு தேவையான திறமையான பணியாளர்களை வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்குள் கூட்டி வந்து, தங்களது பணிகளை செய்து கொள்கின்றனர். அதனால், அவர்களுடைய முழு ஆதரவு H1B விசா முறைக்கு உண்டு.
இந்த சூழ்நிலையில், தன் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக கூறப்படும் எலான் மஸ்க் பக்கமே இருப்பாரா அல்லது தன் ஆதரவாளர்களின் இன்னொரு பிரிவினர் பக்கம் சாய்வாரா என்பதை அவர் பதவியேற்றதும் அவர் கொண்டு வரும் கொள்கைகள் மற்றும் சட்ட திட்டங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.