F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் - யார் இந்த லாரா முல்லர்?
TVK Vijay : `ஆண்டு விழாவுக்கு முன்னதாக... உத்தரவிட்ட விஜய்’ - பரபரக்கும் த.வெ.க முகாம்!
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு முன்னதாகவே நிர்வாகிகள் பட்டியலை வெளியிட தீவிரமாகி வருகிறது த.வெ.க தலைமை. அதுதொடர்பாக, கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோரைக் கொண்ட குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய த.வெ.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், "கட்சி தொடங்கப்பட்டு வரும் பிப்ரவரி 2-ம் தேதியுடன் ஓராண்டு முடிகிறது. கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் எனக் குறிப்பிட்ட சிலரின் பொறுப்புகள் குறித்துதான் தகவல்கள் வெளியாகியிருக்கிறதே தவிர, மாவட்டம், ஒன்றியம், பகுதி, வட்ட கழகங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. கட்சியிலுள்ள அணிகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, கடந்த சில மாதங்களாகவே தலைவர் விஜய்யும் பொதுச் செயலாளர் ஆனந்தும் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வந்தனர். 'மன்றத்தில் இருப்பவர்களுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகளை அளிக்க வேண்டும்' என்பதை ஒரு வாதமாக முன்வைத்தார் ஆனந்த்.
ஆனால், 'மன்றத்தில் இருப்பவர்களில் பலருக்கு அனுபவமின்மையும் நிதி பின்புலமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அவர்களை மாவட்டச் செயலாளர் ஆக்கினால், களத்தில் திராவிடக் கட்சிகளை எதிர்கொள்வதில் தடுமாற வேண்டியதிருக்கும். ஆகவே, தகுதியான ஆட்களை தேர்வு செய்து நியமிக்கலாம்' என விஜய்க்கு நெருக்கமான சிலர் ஆலோசனை அளித்தனர். தற்போது மன்றத்தில் இருக்கும் மாவட்ட கட்டமைப்பை விரிவாக்கம் செய்து, கட்சியில் அமைப்புரீதியாக 110 மாவட்டங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக, 55 மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் தலைவர் விஜய்யிடம் அளிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் ஆனந்த் தான் அந்தப் பட்டியலைத் தயார் செய்தார். சென்னை புறநகருக்கு ஈ.சி.ஆர்.சரவணன், கள்ளக்குறிச்சிக்கு பரணிபாலாஜி, விழுப்புரம் வடக்கிற்கு மோகன்ராஜ், விழுப்புரம் தெற்கிற்கு சுரேஷ், சிவகங்கை தெற்குக்கு முத்துபாரதி, மதுரை வடக்கிற்கு விஜயன்பன் கல்லாணை, இராமநாதபுரத்திற்கு மலர்விழி ஜெயபாலா, தூத்துக்குடிக்கு அஜிதா ஆக்னல், புதுக்கோட்டைக்கு பர்வேஸ், தென்காசிக்கு சிவா என, மன்றம் தொடங்கிய காலத்திலிருந்து தலைவருக்கு விசுவாசமாக இருந்த பலரும் அந்த லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளனர்.
அடுத்த 55 மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் தற்போதுதான் தயாராகி முடிந்திருக்கிறது. அந்த லிஸ்ட்டில், கட்சிக்காக செலவு செய்யக்கூடிய வகையில் 'தெம்போடு' இருப்பவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த மாவட்டச் செயலாளர்களின் பட்டியலை ஆய்வு செய்துவரும் தலைவர் விஜய், இம்மாத இறுதிக்குள் அறிவிப்பை வெளியிடவிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, அணி நிர்வாகிகளின் பட்டியலும், மாநில நிர்வாகிகளின் பட்டியலும் வெளிவரும். மாவட்ட அளவிலான அணி நிர்வாகிகளின் பட்டியலும் தனியாகத் தயாராகி வருகிறது. பிப்ரவரி மாத இறுதிக்குள் நிர்வாகிகள் நியமனங்களை முழுவதுமாக முடித்துக்கொண்டு, கட்டமைப்பை வலுப்படுத்த திட்டமிட்டிருக்கிறது கட்சித் தலைமை" என்றனர் விரிவாக.
சமூகம், வாக்காளர்களின் அடர்த்தி, பூகோள முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒன்றிய கழக கட்டமைப்பை உருவாக்குவதற்கும் கட்சிக்குள் ஏற்பாடுகள் தூள் பறக்கின்றன. "மன்றத்திலிருந்த பெரும்பாலானோருக்கு ஏதாவது ஒரு பதவியைப் போட்டுக் கொடுத்துவிட்டனர். அப்படி பதவியில் இருந்தவர்களெல்லாம் கட்சிக்குள்ளும் அதே பதவியை எதிர்பார்ப்பதுதான் நிர்வாகிகள் நியமனத்தை தாமதமாக்கி இருக்கிறது. ஒன்றிய அளவிலும் அணிகள் அமைக்கப்படவுள்ளன. அந்தவகையில் பார்த்தால், மன்றத்திலிருக்கும் பலருக்கும் ஏதாவது ஒருபதவி கிடைப்பது நிச்சயம் உண்டு" என்கிறார்கள் த.வெ.க சீனியர்கள்.
முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு முன்னதாகவே, மாவட்டச் செயலாளர்களின் பட்டியலை வெளியிட்டு, ஆண்டு விழாவை அமைப்புரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாட திட்டமிட்டிருக்கிறாராம் விஜய். வரும் பிப்ரவரி 2-ம் தேதி, தந்தை பெரியார், வேலூநாச்சியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள் ஆகியோரின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்துவதோடு, சில இடங்களில் கூட்டங்களை நடத்துவதற்கும் விஜய் உத்தரவிட்டுள்ளதால் பரபரத்துப் போயிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs