TVK Vijay: `அடக்குமுறை, அராஜக அரசியல் எல்லாம் வேண்டாம் சார்’ - நாகையில் விஜய் காட்டம் | முழு உரை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் பரப்புரை செய்கிறார். தனது இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரத்தை நாகையில் மேற்கொள்கிறார் விஜய்.
அதில் விஜய் பேசியதாவது ”அண்ணா, பெரியார் அவர்களுக்கு வணக்கம். நான் இப்பொழுது எந்த மண்ணில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியுடன், கடல் தாய் மடியில் இருக்கும் என் மனத்திற்கு நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.
என் நெஞ்சில் குடியிருக்கும்.... உங்கள் அனைவருக்கும்.. என்னைக்கும் ஒரு மீனவ நண்பனா இருக்கிற இந்த விஜயோட அன்பு வணக்கங்கள். கப்பலில் இருந்து பொருட்களை விற்பதற்காக அந்த காலத்தில் அந்திக்கடை இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உழைக்கும் மக்கள் இருக்கிற ஊருதான் நாகப்பட்டினம். மத வேறுபாடு அற்ற, அனைவருக்கும் பிடித்துப்போன, மதச்சார்பற்று வாழும் நாகை மக்களுக்கு வணக்கம்.
தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ளது நாகை மாவட்டம். ஆனால் நவீன வசதி, மாடர்ன் தொழிற்சாலைகள் இங்கு இல்லை.. அதுமட்டும் இல்லாமல், அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் இல்லாமல், குடிசைகள் அதிகம் இருக்கும் ஊரும் நாகப்பட்டினம் தான்.
மோடியோ, உள்துறை அமைச்சரோ வந்தா இப்படி பண்ணுவீங்களா?

இந்த முன்னேற்றத்திற்கு எங்கள் ஆட்சி தான் சாட்சி என்று அடுக்கு மொழியில் பேசி பேசி அதை கேட்டு கேட்டு காதில் இருந்து ரத்தம் வந்தது தான் மிச்சம். இவர்கள் ஆண்டது போதாதா? மக்கள் இப்படி தவிப்பதும் போதாதா? இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதை பற்றியும் அதற்கான காரணம், தீர்வு பற்றியும் ஏற்கனவே மதுரை மாநாட்டில் பேசி இருந்தேன். அது ஒரு தப்பா? மீனவர்களுக்காக குரல் கொடுப்பது நம்மளுடைய கடமை, உரிமை.
நான் என்ன இன்னைக்கு நேற்றா, மக்களுக்காக குரல் கொடுக்கிறேன். இதை நாகப்பட்டினத்தில் 14 வருஷங்களுக்கு முன்னாடி 2011 செப்டம்பர் 27 அன்று மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஒரு பொது கூட்டம் நடத்தினோம். இந்த விஜய் களத்துக்கு வர்றது ஒன்னும் புதுசு இல்ல.. எப்பவோ வந்தாச்சு, இதற்கு முன்பு விஜய் மக்கள் இயக்கமாக வந்து நின்றோம்... தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக வந்து நிற்கிறோம்.
மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் இந்த சமயத்தில் நமது தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பது நமது கடமை அல்லவா.. மீனவர்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோன்று ஈழ தமிழர்களின் வாழ்க்கையும் முக்கியம்.
மீனவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து ஒரு கடிதம் மட்டும் எழுதிவிட்டு பின்னர் அமைதியாக இருக்க ...நாம ஒன்னும் நாடக திமுக அரசும் இல்லை, மற்ற மீனவர்கள் என்றால்.. இந்திய மீனவர்கள் தமிழ்நாடு மீனவர்கள் என்றால் மட்டும் தமிழக மீனவர்கள் என்று பிரித்துப் பார்க்கும் பாசிச பாஜக அரசும் கிடையாது. இதற்கான நிரந்தர தீர்வை காண்பது தான் நம்முடைய இலக்கு" என்றார்.
அதைத் தொடர்ந்து, நாகையில் இருக்கும் பிரச்னைகளை குறித்து விஜய் பேசினார்
``இங்கு மண்வளத்தை பாதிக்க செய்யும் இறால் பண்ணைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். அப்போதுதான் மீனவர்களின் வாழ்வாதாரமும், விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிப்படையாமல் இருக்கும்.
கடலோர அரிப்பில் இருந்து பாதுகாக்கும் அலையாத்தி காடுகளை அழிக்காமல் தடுக்க வேண்டிய திமுகவிற்கு இதைவிட முக்கியமான வேலை உள்ளது. அதுதான் சொந்த குடும்பத்தின் வளர்ச்சியும் சொந்த குடும்பத்தின் சுயநலமும். இங்கு இருக்கின்ற மக்கள் குடிநீருக்காக கஷ்டப்படுகிறார்கள்.
அவர்களுக்காக காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரலாம். வேலைவாய்ப்பு கிடைக்க தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா? ஒவ்வொரு முறையும் வெளிநாட்டிற்கு சென்று வரும்போது எல்லாம்.. அத்தனை கோடி முதலீடு இத்தனை கோடி முதலீடு என்று சிஎம் அவர்கள் சிரித்துக் கொண்டே சொல்வாரே.. சிஎம் சார் மனசு தொட்டு சொல்லுங்க... வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் முதலீடா இல்ல உங்க குடும்பத்தோட முதலீடு மொத்தமா வெளிநாட்டுக்கே போகுதா?
வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை என இங்க இருக்கும் சுற்றுலா இடங்களை வளர்ச்சி அடைய செய்யலாம்.. செய்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்.. வேதாரண்ய பகுதியில் உப்பு ஏற்றமதி செய்வதற்கு வசதிகளை செய்து கொடுக்கலாம். செய்தார்களா? நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் செய்வதற்கு மருத்துவர்கள் இல்லையாம். நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தையாவது சுத்தமாக சுகாதாரமாக வைத்திருக்கிறார்களா?
நாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் வேலைகளை சீக்கிரமா முடிக்கலாம் அதையாவது செய்தீர்களா? இங்கு ஏற்கனவே இருந்த ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை மூடிவிட்டார்கள். அதை மீண்டும் திறந்தால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், அதைப்பற்றி ஏன் யோசிக்கவில்லை.

நெடுஞ்சாலை வேலைகளை துரிதப்படுத்தி முடிக்கலாம் அதை செய்தார்களா? மிக முக்கியமான ஒன்று மழைக்காலங்களில் பாதுகாப்பான இடத்தில் நெல்லை வைக்கமுடியாமல் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைகிறார்கள். இதற்கு சரியான குடோன் கட்டிக் கொடுக்கவில்லை அதையாவது செய்து கொடுத்தார்களா? தேர்தலுக்கு முன்னாடி மட்டும் வந்து திமுககாரர்கள் செய்வோம், செய்வோம் என்று சொன்னார்கள் செஞ்சாங்களா? இது எதையுமே செய்யாமல் .. அப்படியே எல்லாமே செய்தது போல் பெருமையாக சொல்கிறார்கள்..
கடந்த வாரம் திருச்சி மற்றும் அரியலூருக்கு நம்ம மக்களை பார்க்க சென்றிருந்தேன்.. பெரம்பலூருக்கும் செல்ல வேண்டி இருந்தது.. நிறைய கட்டுபாடுகள் விதித்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் பஸ்ஸும் நகர முடியவில்லை. என்னால் பெரம்பலூர் பகுதிக்கு செல்ல முடியாததற்கு தற்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள தேடி நான் வருவேன்.. இந்த சுற்றுப்பயணம் குறித்து தெரிவித்தவுடன் அது என்ன சனிக்கிழமை, சனிக்கிழமை என்று பலரும் கேட்டார்கள்.. உங்களின் வேலைகளுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்கக் கூடாது.. இந்த ஒரு காரணத்திற்காக தான் வார இறுதியில் பரப்புரை நடத்த திட்டமிட்டோம். லீவு நாட்களில் ஓய்வு நாட்களில் வர வேண்டும் என்பதுதான் என்னுடய எண்ணமே.
நம்ம மக்களை சந்திக்கிறதுக்கு இந்த சொந்தங்கள சந்திக்கிறதுக்கு எத்தனை கட்டுப்பாடுகள்.. சில இடங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள்.. அதற்காக அவர்கள் கூறும் காரணங்கள் ரொம்ப சொத்தையாக உள்ளது.
அங்க பேசக்கூடாது, இங்க பேசக்கூடாது.. 10 நிமிஷம் தான் பேசணும்.. நான் பேசுறது மூணு நிமிஷம் தான்.. இதுல அதை பேசக்கூடாது, இதை பேசக்கூடாது என்று சொன்னால் நான் எதை தான் பேசுவது.. அரியலூருக்கு சென்றபோது நான் செல்லவிருந்த பகுதியில் பவர் கட், திருச்சியில் நான் பேசியபோது அந்த ஸ்பீக்கருக்கு செல்ல இருந்த வயர்கட்.. சிஎம் சார் ஒரு உதாரணத்திற்கு கேட்கிறேன் உள்துறை அமைச்சரோ மோடியோ யாராவது இங்கு வந்தால் அவர்கள் பேசும்போது இதுபோன்று பவர் கட் பண்ணுவீர்களா? கொஞ்சம் கட் பண்ணி தான் பாருங்களேன்.. முடியாது இல்ல...
`கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தா...'
நீங்கள் தான் மறைமுக உறவுக்காரர்களே... இதைத் தாண்டி ஒரு ரூல்ஸ் சொன்னார்கள் பஸ்ஸுக்குள் தான் நான் இருக்க வேண்டுமாம்.. பஸ்ஸுக்கு வெளியே போக கூடாதாம்.. கை இவ்வளவுதான் தூக்க வேண்டுமாம்.. நான் கூட என்னவோ என்று நினைத்தேன். ஆனால் சரியான காமெடியாக உள்ளது. நான் நேரடியாகவே கேட்கிறேன் என்ன மிரட்டி பாக்குறீங்களா? அதுக்கு இந்த விஜய் ஆள் இல்ல சார்... கொள்கையை சும்மா வைத்துக் கொண்டு குடும்பத்துடன் கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தா.. சொந்தமா உழைத்த சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்...
என்ன நாங்கள் பெருசா கேட்டு விட்டோம். மக்கள் நிம்மதியாக நின்று பார்ப்பதற்கு ஒரு இடம்.. அந்த இடத்தை தேர்வு செய்து அதற்கான அனுமதி கேட்கிறோம்.. ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்.. அனுமதி கேட்கும் இடத்திலெல்லாம் விட்டுவிட்டு நெருக்கடியான இடங்களை கொடுக்கிறீர்கள். உங்கள் எண்ணம் தான் என்ன சார்.. மக்களை பார்க்க கூடாது, மக்களிடம் பேசக்கூடாது, அவர்களின் குறைகளை கேட்கக்கூடாது மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடாது.. என்று நினைக்கும் உங்களின் எண்ணம் தான் என்ன சார்.. அரசியல்வாதி என்பதை மறந்து விடுங்கள் தமிழ்நாட்டின் ஒரு மகனாக, என் சொந்தத்தை பார்க்க போனால் என்ன செய்வீர்கள்.. அப்பவும் தடை விதிப்பீர்களா? அடக்குமுறை அராஜக அரசியல் எல்லாம் வேண்டாம் சார்.. நான் ஒன்றும் இங்கு தனி ஆள் இல்லை.. மக்கள் மாபெரும் சக்தியின் பிரதிநிதி .. மறுபடியும் சொல்றேன் 2026 இல் ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே... ஒன்னு தவெக இன்னொன்னு திமுக..
இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் பார்க்காமல் நேரடியாக அரசியல் களத்திற்கு வந்து சந்தியுங்கள் பார்க்கலாம்.. கொள்கையை பேருக்கு மட்டும் வைத்துக் கொண்டே குடும்பத்தை வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கும் நீங்களா? தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ஒருத்தனாக இருக்கும் நானா? இந்த விஜய்யா என்று பார்த்திடலாம்... இந்த மாதிரி தடைகள் எல்லாம் நீங்கள் போட்டால் நேரடியாக மக்களிடமே நான் அனுமதி கேட்டு விடுவேன்.. இப்படி தடையாக போடும் இந்த திமுக அரசு உங்களுக்கு வேணுமா? உங்க நல்லதுக்கு இந்த தவெக ஆட்சி வரவேண்டும் தானே! தன்னம்பிக்கையுடன் இருங்கள் வெற்றி நிச்சயம்" என்று தனது உரையை முடித்தார் விஜய்