TVK: ``தவெக-வில் இருப்பவர்கள் அனைவருமே குழந்தைகள்தான்"-அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தைத் தொடர்ந்து, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு 48 நாள் விரதத்தைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் 48 நாட்கள் விரதத்தை நிறைவு செய்யும் வகையில் பழநி கோயிலுக்கு காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். பாஜக தலைவர் அண்ணாமலை காவடி சுமந்தபடி திரு ஆவினன்குடி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு தொடர்ந்து, அடிவாரம் பாத விநாயகர் கோயில் படிவழிப் பாதை வழியாக மலைக்கோவிலுக்குச் சென்றார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/a2szvjbh/2025-02-12-at-09.25.1175ab185b.jpg)
மலைக்கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடனை முடித்துவிட்டு அடிவாரம் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ``தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கடுமையாக விரதமிருந்து வெகுதூரம் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகனை வழிபடுகின்றனர். ஆனால் பக்தர்களுக்கு நடைபாதை, கழிவறை உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இல்லை. முருக பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும். பிரான்சில் இருந்து கொண்டு பிரதமர் மோடி தைப்பூச வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக முதலமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்." என்றவர்,
தொடர்ந்து விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து பேசினார், ``யார் யாரைச் சந்தித்தாலும் அது பற்றிக் கவலை இல்லை. நாங்கள் மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்னையைத் தீர்க்கும் வகையில் அரசியல் செய்கிறோம். ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்பவர்கள்தான் வியூக நிபுணர்களை அழைத்து அரசியல் செய்தால் மக்கள் பதில் சொல்வார்கள்.
அவர்களுக்கு ஏழை மக்களின் பசி தெரியாது. 18 வயதிற்குக் கீழான குழந்தைகள் அரசியல் கட்சியில் சேரக்கூடாது என்று சட்டம் இருக்கும்போது, தவெக-வில் குழந்தைகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது நகைப்புக்குரியது. தவெக-வில் குழந்தைகள் பிரிவு ஒன்று இருப்பது பெரியதல்ல, அக்கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் குழந்தைகள்தான்" என்றார்.