UPSC-ல் தேர்ச்சி பெற்றும் நிராகரிப்பு; 15 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி வென்ற மாற்றுத்திறனாளி!
UPSC தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் பணி நியமனமின்றி நிராகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, 15 வருட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி பெற்றிருக்கிறார். பார்வைக் குறைபாடுள்ள ஷிவம் குமார் ஸ்ரீவஸ்தவா, 2008-ம் ஆண்டு நடைபெற்ற UPSC சிவில் சர்வீஸ் பொதுத்தேர்வில் தேர்ச்சிப்பெற்றார். ஆனால், பணி நியமனப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. நிராகரிப்பு கடிதம்கூட கிடைக்கவில்லை. தன்னோடு தேர்வெழுதி தேர்ச்சிப்பெற்றப் பலர் பல வருட பணி அனுபவத்துடன் பணிபுரிந்து வரும் நிலையில், 15 வருடங்களாகப் பணி நியமனமில்லாமல் தவித்திருக்கிறார்.

1996 முதல் 2005 வரை பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப்பணியிடங்களை UPSC தேர்வாணையம் நிரப்பாமல் விட்டதை ஷிவம் ஸ்ரீவஸ்தவாவும், அவரோடு தேர்வெழுதிய பங்கஜ் ஸ்ரீவஸ்தவாவும் கண்டுபிடித்தனர். எனவே, இது குறித்து 2009-ல் வழக்கு தொடர்ந்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (CAT), தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். 2012-ல் ஸ்ரீவஸ்தவாவுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. ஆனால், அந்த உத்தரவை எதிர்த்த மத்திய அரசு, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
2013-ல் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு 2014 முதல் 2024 வரை விசாரணையில் இருந்தது. அதனால், பணி நியமனமும் சிக்கலில் இருந்தது. 15 வருட தொடர் சட்டப்போராட்டத்துக்கு பிறகு, 2024 ஜூலையில், ஸ்ரீவஸ்தவாவுக்கு இந்திய வருவாய் துறை அல்லது பொருத்தமான வேறு துறையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு வழிகாட்டி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதைத் தொடர்ந்து 46-வது வயதில் பணி நியமனம் பெற்றிருக்கிறார் ஸ்ரீவஸ்தவா.

இது குறித்து பேசிய அவர், "உத்தரவு ஏழு மாதத்திற்கு முன்பு வந்தது. ஆனால் நான் அதைக் கொண்டாடவில்லை. அந்த தீர்ப்பு குறித்து எனது உறவினரிடமும் தெரிவிக்கவில்லை. இந்த போராட்டம் என்னை சார்ந்தது மட்டுமல்ல. என்னைப் போன்றோரின் சிறப்பம்சங்களை அரசு காண தவறினாலும், நாங்கள் சிறந்த சேவையாற்ற தகுதி வாய்ந்தவர்களே என்பதை இந்த தீர்ப்பு நிரூபிக்கிறது. நான் பார்வையற்றவனாக இருந்தாலும் முழு பார்வையோடு இருக்கும் மக்களை விட திறமையானவனே.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் உதவி இயக்குநராக ஆறு மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டேன். தினமும் 60 கி.மீ. ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்து, இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்திற்கு (IIMC) சென்று, அங்கு இரு வருட பயிற்சி பெற்றுவருகிறேன். பயிற்சியை முடித்து பணி நியமனம் பெற்றால்தான் போக்குவரத்து சலுகைகள் கிடைக்கும். 2003-ல் ரோஹினி நீதிமன்றத்தில் இளநிலை உதவி எழுத்தராகவும், பின்னர் மூத்த நீதித்துறை உதவி அதிகாரியாகவும் 20 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். எனது பணி அனுபவத்தில் சொல்கிறேன், மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் அரிதாகவே கிடைக்கிறது. பல ஆண்டுகளாக சம்பளத்திலும் உயர்வில்லை. " என்றார்.

1978-ல் பீகாரின் மோதிஹரியில் பிறந்த ஷிவம், இளமையிலிருந்தே கல்வியில் அதிக ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். 17 வயதில், அரிய மரபணு கோளாறான லெபர் ஹெரிடிட்டரி ஆப்டிக் நியூரோபதி (LHON) நோயால் பாதிக்கப்பட்டு நிரந்தரமாக பார்வையிழந்தார். பல மருத்துவர்களை அணுகியும், யோகா, தியானம், மாற்று மருத்துவம் போன்றவற்றை அணுகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், 2001-ல் தனது பார்வை குறைபாட்டை ஏற்றுக்கொண்டார்.
திடமான மனதோடு தன் வாழ்வை மறுசீரமைக்க தீர்மானித்த அவர், டெல்லியில் உள்ள அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (AICB) மற்றும் டேராடூனில் உள்ள பார்வைக் குறைபாடு உள்ளோர் அதிகாரமளிப்புக்கான தேசிய நிறுவனம் (NIEPVD) போன்றவற்றில் பயிற்சி பெற்றார். GAWS மற்றும் NVDA போன்ற மென்பொருளின் உதவியோடு, புத்தகங்களை ஸ்கேன் செய்து, டிஜிட்டல் மயமாக்கி, அவற்றை கேட்டு UPSC தயாரிப்பில் முழுமனதாக ஈடுபட்டார்.

2016-ல் ஷிவம் புஷ்பாஞ்சலி ராணி என்பவரை மணந்த இவருக்கு, தற்போது 7 மற்றும் 2 வயதுடைய இரு மகள்கள் உள்ளனர். ஷிவம் பற்றி பேசிய அவரது மனைவி, "எனது கணவர் அவரது கனவுகளை மெய்ப்படுத்தும் திறனை ஒருபோதும் சந்தேகித்ததில்லை. முடியாது என்பது அவர் அகராதியிலேயே கிடையாது. அவரை யாராலும் எதற்காகவும் தடுக்க முடியாது. மிகுந்த போராட்டக் குணமுடையவர்" எனக் கூறி நெகிழ்ந்தார்.