Vairamuthu: கவிஞர் வைரமுத்துவின் திருக்குறள் உரை; பெயரை அறிவித்து வீடியோ
திருக்குறள் தமிழின் பெருமைமிகு இலக்கியம். அறம், பொருள், இன்பம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் நெறிப்படுத்தும் வகையில் திருவள்ளுவரால் எழுதப்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் பல்வேறு நெறிகளை எளிய முறையில் விளக்கும் இந்தக் குறள்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தத் திருக்குறளுக்கு கவிஞர் வைரமுத்து சில மாதங்களுக்கு முன்பு உரை எழுதத் தொடங்கினார்.
திருக்குறள் உரை
— வைரமுத்து (@Vairamuthu) May 22, 2025
தலைப்பு அறிவிப்பு#திருக்குறள் | #திருவள்ளுவர்#வள்ளுவர்மறை_வைரமுத்துஉரைpic.twitter.com/r4EFl6tBFF
தற்போது அந்த உரையை முடித்துவிட்டதாக அறிவித்து அந்த உரைக்கு பெயரையும் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``திருக்குறள் நிறைந்துவிட்டது. முப்பாலுக்கும் உரை எழுதி முடித்திருக்கிறேன். இன்று தலைப்பை அறிவிக்கப் போகிறேன்.. தருமரும், மணக்குடவரும், தாமத்தரும், நச்சரும், பரிதியும், பரிமேலழகரும், திருமலையரும், மல்லரும், பரிப்பெருமாளும், காளிங்கரும், பின்னாளில் வ.உ.சிதம்பரனாரும், தேவநேயப் பாவணரும், புலவர் குழந்தையும்
மு வரதராசனாரும், இன்னும் பல சான்றோர்களும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும், நாவலரும் எழுதி முடித்த பிறகும் கூட, திருக்குறளுக்கு இன்னும் உரை மிச்சப்பட்டிருக்கிறது. அதை நான் எழுதக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 1333 அருங்குறளுக்கும் உரை எழுதி முடித்த உடன் நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறேன். 'வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' என்று தலைப்பிட்டிருக்கிறேன்.
உங்கள் வாழ்த்துப் பூக்களை நான் வேண்டி நிற்கிறேன். நீங்கள் என் மீது வீசப்போகும் ஒவ்வொரு பூவும், என் உறுதியை உயர்த்திப் பிடிக்கும். இன்னும் தமிழுக்குச் செய்ய வேண்டும் என்ற வேட்கைக்கு வேகம் கொடுக்கும். வாழ்க திருவள்ளூவர்! வளர்க வள்ளுவம்! வள்ளுவர் மறை, வைரமுத்து உரை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.