வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு 20 ஆ...
Varun Chakaravarthy : 'முடிஞ்சா தொட்டுப் பார்!' - மீண்டும் ஒரு 5 விக்கெட் ஹால்; அசத்தும் வருண்
2021 உலகக்கோப்பையில் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தபோது அவரின் மிஸ்டரி பௌலிங்கின் மூலம் எதையோ செய்யப்போகிறார் எனத் தோன்றியது. ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. ஒரு சில போட்டிகளில் ஆடினார். நினைவில் நிற்கும் வகையில் எந்த செயல்பாட்டையும் கொடுக்கவில்லை. பெருத்த ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஐ.பி.எல் இன் வழி நேராக கிடைத்த வாய்ப்பை வருண் விரயம் செய்தார். அதன்பிறகு பிசிசிஐயின் பார்வையும் அவர் மீது விழவில்லை.
வருணின் கதை அவ்வளவுதான் எனத் தோன்றியது. ஆனால், மீண்டும் மீண்டும் ஐ.பி.எல் இல் சிறப்பாகச் செயல்பட்டார். கடின உழைப்பின் பலனாக மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை அவர் விடவில்லை. எப்படியெல்லாம் ஆட நினைத்தாரோ அப்படியெல்லாம் ஆடினார். சொல்லப்போனால் எல்லாருடைய எதிர்பார்ப்புகளையும் மிஞ்சிய செயல்பாடுகளைக் கொடுத்தார். இதோ இப்போது ராஜ்கோட்டில் நடந்துகொண்டிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருக்கிறார்.
இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த பிறகு கடந்த சில மாதங்களில் மட்டும் 10 போட்டிகளில் ஆடியிருக்கிறார் வருண். அதில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இதில் இரண்டு 5 விக்கெட் ஹால்களும் அடங்கும். '2021 இல் அணியிலிருந்து டிராப் செய்யப்பட்ட பிறகு நிறையவே உழைத்தேன். என்னுடைய பந்துவீச்சில் இன்னும் நிறைய மாற்றங்களை செய்தேன்.' என அந்த கடினமான காலக்கட்டம் தனக்கு படிப்பினையையே கொடுத்ததாக சொல்கிறார் வருண் சக்கரவர்த்தி.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க மண்ணில்தான் வருண் இந்திய அணிக்காக கம்பேக் கொடுத்தார். 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அது. மொத்தமாக 12 விக்கெட்டுகளை அந்தத் தொடரில் வீழ்த்தியிருந்தார். செயிண்ட் ஜார்ஜ் பார்க்கில் நடந்த இரண்டாவது போட்டியில் 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ரீஷா ஹென்றிக்ஸ், மார்க்ரம், க்ளாசென் என பெரிய பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். அந்த ஸ்பெல்தான் வருணை பற்றி மீண்டும் பேச வைத்தது. இந்த முறை வருண் தவறவிடமாட்டார் எனும் நம்பிக்கையையும் கொடுத்தது. அந்தத் தொடர் முடிந்த பிறகு வங்கதேசம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இதிலும் வருணுக்கு இடம் கிடைத்தது. மூன்று போட்டிகளில் 5 விக்கெட்டுகள். டீசண்ட்டான பெர்பார்மென்ஸ். அணியில் இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இந்நிலையில்தான், இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்தது. நடப்பு டி20 தொடர் தொடங்கியது. முதல் போட்டியே கொல்கத்தாவில். ஈடன் கார்டன் வருணுக்கு பழக்கப்பட்ட மைதானம். கடந்த மூன்று ஐ.பி.எல் சீசன்களில் சராசரியாக 20 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். அதில் பெரும்பாலானவை ஈடன்கார்டனில் எடுக்கப்பட்டவை. அந்த அனுபவம் வருணுக்கு கைக்கொடுத்தது. முதல் போட்டியிலேயே இங்கிலாந்தின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பட்லர், ப்ரூக், லிவிங்ஸ்டன் என வீழ்த்தியதெல்லாமே பெரிய தலைகள். வெகுமதியாக மேன் ஆப் தி மேட்ச் விருதும் கிடைத்தது. சேப்பாக்கத்தில் நடந்த 2 வது போட்டியில் 2 விக்கெட்டுகள் மட்டுமே கிடைத்ததில் கொஞ்சம் ஏமாற்றம்தான். வருணுமே கொஞ்சம் அப்செட்டாகத்தான் ராஜ்கோட்டுக்கு வந்திருப்பார்.
ராஜ்கோட்டில் இந்தப் போட்டியில் ப்ளாட் பிட்ச்சை கொடுத்திருந்தார்கள். 220-230 ரன்கள் எடுப்பதற்கான பிட்ச். பந்து பெரிதாக திரும்பவில்லை. ஆனாலும் வருண் கவலைகொள்ளவில்லை. அடிப்படையான விஷயங்களை சரியாக செய்ய வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு டைட்டான லைன் & லெந்தில் மட்டும் விடாமல் வீசிக்கொண்டிருந்தார். பேட்டர்கள் அவர்களாகவே விக்கெட்டுகளை தாரை வார்த்துக் கொண்டு சென்றனர். பட்லர்தான் முதல் இரை. ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறேன் என எட்ஜ் ஆகி அவுட் சாம்சனிடம் கேட்ச். ஜேமி ஸ்மித்தும் கார்ஸூம் கூக்ளியாக வந்த பந்துகளை பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச். ஓவர்டன்னும் ஆர்ச்சரும் ஸ்டம்புகளை பறிகொடுத்தனர். இங்கிலாந்து அணி ஆரம்பித்த வேகத்திற்கு 200 ரன்களை கட்டாயம் தாண்டுவார்கள் எனத் தோன்றியது. அதை நடக்கவிடாமல் செய்தது வருண் சக்கரவர்த்திதான்.
கட்டாயமாக இன்னொரு மேன் ஆப் தி மேட்ச் பெர்பார்மென்ஸ் இது. ஒருவேளை இந்தியா வென்று வருணுக்கு மேன் ஆப் தி மேட்ச் அவார்ட் இல்லையேல் ராஜ்கோட் மைதானத்துக்கு வெளியே தர்ணா கூட செய்யலாம்.