Viduthalai Part 2: ``படம் பார்த்துட்டேன்; விஜய் சேதுபதி மாமா - மஞ்சு வாரியர் காதல்..." - சூரி
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 2' திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, யதார்த்தமான போலீஸ் கதாபாத்திரத்தில் 'விடுதலை' படத்தில் கதாநாயகனாக உருவெடுத்தார். தற்போது 'விடுதலை பாகம் 2' படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (நவம்பர் 26) சென்னையில் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் பேசியிருக்கும் நடிகர் சூரி, "இந்த விழா மட்டுமில்லா காது குத்து, கல்யாணம், திருவிழா என ஊரெங்கும் நடக்கும் எல்லா விழாக்களுக்கும் ராஜா சார் தான் கதாநாயகன். இசை மருத்துவர் அவர்தான். அவர் பாடலை கேட்கும்போது தாயைப் போல நம்மை சமாதானப்படுத்துற ஓர் உணர்வு வரும்.
‘தெனந் தெனமும்…’ பாடல் வெளியான பிறகு, ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்னிடம் போன் பண்ணி ‘ராஜா சாருக்கு இணை ராஜா சார்தான்…’ என்று மனம் நெகிழ்ந்து புகழ்ந்தார். ராஜா சாருக்கு மட்டும் ரீ -பிளேஸ்மன்ட் என்பதே கிடையாது. உங்க இசையில படம் நடிச்சதே பெரிய பாக்கியம் அய்யா.
'விடுதலை 2' படம் பார்த்துட்டேன். விஜய் சேதுபதி மாமா காதல் காட்சி பண்ணியிருக்கார். அதைப் பாத்து வியந்துட்டேன். மஞ்சு வாரியரும் அவ்வளவு அற்புதமாக நடிச்சிருக்காங்க. வெற்றி சாரோட படத்துல நடிச்சது, பல்கலைக்கழகத்தில் படிச்ச மாதிரி. அதன்பிறகு என் வாழ்க்கையே மாறிடுச்சு. ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ படத்தின் மூலம் எனக்கு வந்த பாராட்டுக்கெல்லாம் காரணம் வெற்றி சார்தான்" என்று பேசியிருக்கிறார்.