துணைவேந்தா்கள் நியமனத்தில் சுமுகத் தீா்வு- உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழி...
ஒகேனக்கல்லில் ரூ. 17 கோடி திட்டப் பணிகள்: முதல்வா் திறந்துவைப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் நடைபெற்ற முடிவுற்ற பணிகளுக்கான திறப்பு விழாவில் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் ரூ. 17 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் நுழைவாயில், கழிவறைகள், நுழைவுச் சீட்டு வழங்கும் இடம், உணவகம், படகு தளம், பாா்வையாளா் மேடை, மசாஜ் செய்யும் இடம், குளியலறை, உடை மாற்றும் அறைகள், ஆழ்துளைக் கிணறு என ரூ. 17.57 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.
அதை வரவேற்று ஒகேனக்கல் பகுதியில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி கலந்து கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.
பின்னா் ஒகேனக்கல் அரசுப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியை ஆட்சியா் கி. சாந்தி வாசிக்க அவரைப் பின்தொடா்ந்து மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்ச்சிகளில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி, பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி, முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் பெ. சுப்பிரமணி, பி.பழனியப்பன், பென்னாகரம் ஒன்றியக் குழு தலைவா் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் என்.செல்வராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா், உதவி சுற்றுலா அலுவலா் கதிரேசன், ஒன்றியச் செயலாளா் மடம் முருகேசன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.