செய்திகள் :

‘Vote Chori’ Row : `வாக்கு திருட்டும் மோடியின் சூழ்ச்சியும்’ - வன்னி அரசு | களம் 02

post image

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

`சர்வாதிகாரத்தின் உச்சம்’ என்பது சனநாயகத்தின் அத்தனை நம்பிக்கை அமைப்புகளை சிதைப்பதுடன், அதன் சாரத்தையும் தின்று செரித்து விடும். பாஜக மற்றும் மோடியும் அதைத்தான் செய்து வருகிறார்கள். இந்தியாவின் தலைமை அமைச்சராக மோடி பொறுப்பேற்ற பிறகு, பாஜக-வின் வாக்கு வங்கி பெருமளவு உயர்ந்திருக்கிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தால், இந்திய அரசியல் பரப்பில் பாஜக-வின் வெற்றியை வைத்து கட்டமைக்கப்பட்ட மோடியின் அரசியல் ஆழமும் அகலம் நமக்குத் தெரியும்.

கடந்த 1984 ஆம் ஆண்டு, பாஜக போட்டியிட்ட முதல் தேசிய பொதுத் தேர்தலில், பாஜக-வின் வாக்கு வங்கி சுமார் 7.4% ஆக இருந்தது. 2019 தேர்தலில் அதன் வாக்கு வங்கி 37.36% ஆக அதிகரித்தது. பாஜக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி (NDA) 44.84% வாக்குகளைப் பெற்றது. இந்த ஆண்டுகளில், பாஜக அதன் புவியியல் ரீதியாக பரந்துபட்ட அதிகார எல்லையைத் தன்வசப்படுத்தியிருந்தது.  2019 ஆம் ஆண்டில், பாஜக அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும், சொந்தமாகவோ அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளுடனோ ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக தன்னை திடப்படுத்திக்கொண்டது.

மோடி
மோடி

வேட்பாளர்களை நிறுத்திய 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அந்தக் கட்சி 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதி அல்லது பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது. 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அலை வீசியதாக பாஜக பிரகடனப்படுத்தியது. ஆனாலும், தமிழ்நாட்டில் மோடி அலை இப்போது வரை தவழ்ந்து கூட வரமுடியவில்லை என்பது தனிக்கதை. பாஜக-வின் இந்த வெற்றிகள் எல்லாம் நேர்மையாகவோ அல்லது மக்களின் ஆதரவோடோ பெறப்பட்டதா என்பதை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி இருக்கிறது தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்.

சனநாயகத்தில் சனநாயக பின்னடைவு!

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் என்பது ஒரு தோல்வியுற்ற அல்லது காலாவதியான சித்தாந்தம் என்பதை மோடியின் அண்மைக்கால நகர்வுகள் பட்டவர்த்தனப்படுத்துகின்றன. குறிப்பாக, மோடி பெற்ற தேர்தல் வெற்றிகள் எல்லாம் சனநாயகத்தை சவக்குழியில் கிடத்திவிட்டு, மக்கள் விரோதமாக ஆட்சியை அபகரித்து ஒரு வரலாற்றுப் படுகொலையை மோடி நிகழ்த்தி இருக்கிறார். 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் ஆட்சியின் மீதான அதிருப்தி பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வந்தது. அதன் பிறகு பாஜக செய்த அனைத்து செயல்பாடுகளும் சனநாயகத்திற்கு எதிராகவும் மக்கள் விரோதமாகவும் தான் இருக்கிறது. ஆனாலும், பாஜக ஆட்சியில் தொடர்ச்சியாக மூன்றாவது முறை தொடர்கிறது. 

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு, விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்திய பிறகு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த பிறகு, மணிப்பூர் மாநிலத்தில் பாஜக-வின் இரட்டை ஆட்சி முறை தோல்வி அடைந்த பிறகு, பல மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்குள் ஊடுருவி, கட்சிகளை உடைத்து தவறான முன்னுதாரனத்தை அமைத்து மக்களின் அதிருப்திக்கு ஆளான பிறகும், பாஜக தொடர்ச்சியாக தேர்தல் வெற்றியைப் பெறுவது என்பது சாத்தியமே இல்லாதது. ஆனால், இத்தனை மக்கள் விரோத செயல்களுக்கும் பிறகு பாஜகவால் எப்படி தேர்தல் வெற்றி சாத்தியம் என்றால் அங்கு தான், பாஜக-வின் சூழ்ச்சியே அம்பலமாகிறது.

மோடி

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, உலகின் மிகப்பெரிய சனநாயகத்தில் சனநாயக பின்னடைவு (Democratic Backsliding in the World’s Largest Democracy - Sabyasachi Das) என்ற தலைப்பில் அசோகா பல்கலைக்கழக பேராசியர் சப்யசாச்சி தாஸ் ஒரு நுட்பமான ஆய்வறிக்கையை வெளிக்கொண்டு வந்தார். 47 பக்கங்கள் அடங்கிய அந்த ஆய்வறிக்கையில் பாஜகவின் தேர்தல் வெற்றி சனநாயகத்தைக் கேள்விக்குள்ளாகியதை ஆதாரப்பூர்வமாக விளக்கியுள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் மோடி இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க, 2014 நாடாளுமன்ற தேர்தலில் 543 தொகுதிகளில் பாஜக 303 தொகுதிகளைக் கைப்பற்றியது. உத்தரப்பிரதேசம் போன்ற பாஜக செல்வாக்கு செலுத்தும் மாநிலங்களில் நிர்வாக இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி வெற்றியை ஈட்டியுள்ளது.  பேராசிரியர் சப்யசாச்சி தாஸ்ஆய்வறிக்கையில் நுட்பமான ஒரு அம்சம் என்னவென்றால், பாஜக தோல்வி அடைந்த தொகுதிகளை விட நெருக்கடியான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது என்பது தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த மாநில சிவில் சர்வீஸ் (SCS) அதிகாரிகளான வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் அதிக அளவில் உள்ள தொகுதிகளில், மோசடி குவிந்துள்ளதாகத் தெரிகிறது என்றும் தாஸ் சுட்டிக்காட்டுகிறார். மத்திய அரசால் நியமிக்கப்படும் IAS அதிகாரிகளைப் போலல்லாமல், மாநில சிவில் சர்வீஸ் அதிகாரிகள் அரசியல் ரீதியாக வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அவர் வாதிடுகிறார்.

இரண்டு வெவ்வேறு கருதுகோள்களை ஆதாரங்களுடன் சோதித்துப் பார்ப்பதன் மூலம் அவர் ஒரு முடிவுக்கு வருகிறார். ஒன்று தேர்தல் மோசடி அல்லது கையாளுதல் இருந்ததா? இரண்டு சாத்தியமான முடிவை துல்லியமாக கணித்த பிறகு, பாஜக இந்த இறுக்கமான போட்டிகளில் வெற்றி பெற்றதா? என்பது தான் அதற்கான விடை. மாநில தேர்தல் ஆணையர்கள், அதிகாரிகளை தன் கையில் வைத்துக்கொண்டு பாஜக முறைகேடான வெற்றியை தொடர்ச்சியாக பெற்று வந்துள்ளது.

சனநாயகத்தை படுகொலை செய்த தேர்தல் ஆணையம்!

புலனாய்வு அமைப்புகளான சி.பி.ஐ. அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை எப்படி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மீது ஏவி அரசியல் படுகொலையை மோடி – அமித் ஷா கூட்டணி நிகழ்த்தியதோ அதேப்போல, தேர்தல் ஆணையத்தையும் தன் கையில் வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி சனநாயகத்தை பாஜக படுகொலை செய்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி (CEO) ஆகியோரின் தரவுகள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் வாக்காளர்களின் அடிப்படையில், Vote for Democracy (VFD) நடத்திய விரிவான ஆய்வில், மகாராஷ்டிராவின் நவம்பர் 2024 தேர்தலில் 288 சட்டமன்றத் தொகுதிகளில் பல முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட மகாராஷ்டிராவின் இந்தியா கூட்டணி கட்சியினரும் இதே குற்றச்சாட்டை தரவுகளுடன் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கடந்த நவம்பர் 2024ல் நடைபெற்ற மகாராஷ்டிர தேர்தல்களில் வாக்காளர் எண்ணிக்கை அசாதாரணமாக அதிகரித்துள்ளது: மாலை 5 மணிக்கு 58.22% ஆக இருந்த வாக்குப்பதிவு நள்ளிரவுக்குள் 66.05% ஆக உயர்ந்தது. ஏற்கனவே பதிவான வாக்குகளை விட சில மணி நேரங்களில் சுமார் 48 லட்சம் வாக்குகள் கள்ளத்தனமாக போடப்பட்டன. அதாவது, சில நிமிடங்களிலேயே 7.83% வாக்குகள் பதியப்பட்டன. நான்டெட், ஜல்கான், ஹிங்கோலி, சோலாப்பூர், பீட் மற்றும் துலே போன்ற மாவட்டங்களில் வாக்குப்பதிவானது சில மணி நேரத்தில் அதிகரித்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் பல வேறுபாடுகளும் முரண்பாடுகளும் காணப்பட்டன.

கடந்த 2024 ஆகஸ்ட் 30 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் 9.64 கோடி வாக்காளர்களைப் பட்டியலிட்டது. இந்த எண்ணிக்கை பின்னர் 2024 அக்டோபர் 15 மற்றும் 30, ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

2019 சட்டமன்றத் தேர்தல் வாக்காளர்கள் பட்டியலையும் மக்களவைத் தேர்தல் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பார்த்தால், 11.6 லட்சமாகத் தாண்டியது. வாக்குகள் 8.4 லட்சமாக அதிகரித்தன. 2024 ஆம் ஆண்டில், பட்டியல்கள் கிட்டத்தட்ட 40 லட்சமாகவும், வாக்குகள் 71 லட்சத்திற்கும் அதிகமாகவும் அதிகரித்தன. 2019 முதல் 2024 வரை சட்டமன்றங்களில், பட்டியல்கள் 71.8 லட்சம் அதிகரித்தன. ஆனால் வாக்குகள் 96.7 லட்சம் அதிகரித்தன.

இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் இனி வாக்களிக்க முடியுமா?

தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தச் செயல்முறை (Special Intensive Revison - SIR), பிறப்புச் சான்றிதழ் அல்லது குடியுரிமைச் சான்றிதழை வழங்க முடியாத ஏழை மற்றும் விளிம்புநிலை சமூக வாக்காளர்களின் வாக்குரிமையை இழக்கச் செய்யக்கூடும் என்ற ஆபத்து நம் முன்பாக எழுந்து நிற்கிறது.

பீகாரில் சுமார் 7.7 கோடி வாக்காளர்களின் சரிபார்ப்பு என்பது ஒரு மகத்தான பணியாகும். இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் துல்லியமாக முடிக்கப்பட வாய்ப்பில்லை. மக்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித் இன மக்களை சொந்த நாட்டினுள்ளேயே வாக்களிக்க தகுதி இல்லாத அகதிகளாக மாற்றுவதற்காகவே இந்த நடவடிக்கை முறையை பாஜக கொண்டு வருகிறது.

வாக்காளர்கள்

அதாவது, மனுஸ்மிருதி சொல்வதைப் போலான நான்கு வர்ண நிலையில், இஸ்லாமியர்களும், தலித் இன மக்களும் நான்கு வர்ணத்திற்குள் அடங்காமல் வெளியேற்றப்படுவார்கள். இஸ்லாமியர்கள், தலித்  சமூக மக்களுக்கான அடிப்படை குடியுரிமையே நிறுத்தப்பட்டு அவர்கள் உயிர் வாழ்ந்து கொள்ளலாம். ஆனால் இந்தியர் என்ற உரிமையோடு வாழ முடியாது என்பதை பிரதமர் மோடி சொல்லாமல் சொல்கிறார்.  பிறப்பு சான்றிதழ் பெறுவதிலும், குடியுரிமை சான்றிதழ் பெறுவதிலும் பெரிய சிக்கல்களை இந்த மக்கள் சந்திக்க நேரிடும். இந்தியாவில் எத்தனை சதவிகிதம் பேர் குடியுரிமை சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள் என்ற தரவே அரசிடம் இல்லாத போது இஸ்லாமியர்கள், தலித் சமூகத்தினரை பொது சமூகத்திலிருந்து வெளிதள்ளும் சூழ்ச்சியை மோடி கையாளுகிறார்.

குடியுரிமை பிரச்னையை தனிமைப்படுத்தியோ அல்லது குறுகிய கண்ணோட்டத்திலோ ஆராய முடியாது. பீகார் சாதி கணக்கெடுப்பு அறிக்கை 2023 இன் தரவுகளுடன் சேர்த்துக் கருத்தில் கொள்ளும்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல்கள் குறித்த கையேட்டில் (2023) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஆவணத் தேவைகள் , வரவிருக்கும் தேர்தல் திருத்தத்தின் போது மக்கள் எதிர்கொள்ளக்கூடிய குறிப்பிடத்தக்க சிரமங்களை வெளிப்படுத்துகின்றன. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, பீகார் மாநிலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், மாநில மக்கள்தொகையில் பொதுப் பிரிவு 15.52% ஆக இருக்கிறது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முறையே 27.12% மற்றும் 36.01% ஆக உள்ளனர்.

வன்னி அரசு - VCK

புதிய வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக ஆணையத்தால் பட்டியலிடப்பட்டுள்ள 11 ஆவணங்களில், பிறந்த தேதிக்கான சான்றாக மெட்ரிகுலேஷன் சான்றிதழ் உள்ளது. இது 2007 க்கு முன் பிறந்த வாக்காளர்களுக்கு மிகவும் பொருத்தமானது. அவர்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக மதிப்பிடப்படுகின்றனர். இருப்பினும், 2023 சாதி கணக்கெடுப்பு, பங்கேற்பாளர்களில் 14.71% பேர் மட்டுமே 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 9.19% பேர் மட்டுமே தங்கள் உயர்நிலைக் கல்வியை முடித்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

கூடுதலாக, குடியுரிமைக்கான செல்லுபடியாகும் சான்றாக பாஸ்போர்ட்டை இந்திய தேர்தல் ஆணையம் பட்டியலிட்டிருந்தாலும், பீகார் மக்கள் தொகையில் 2.4% பேர் மட்டுமே ஒன்றைக் கொண்டுள்ளனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால், புலம் பெயர்ந்து வாழக்கூடிய மக்கள் தங்களின் பிறப்பு சான்றிதழை யாரிடம் இருந்து பெறுவார்கள். பீகாரில் இருந்து தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் மக்களில் கணிசமானவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் யாரிடம் சென்று பிறப்பு சான்றிதழைப் பெறுவார்கள். அவர்களுக்கு பீகாரிலும் சான்றிதழ் கிடைக்காது தமிழ்நாட்டிலும் வாக்காளர் உரிமை கிடைக்காத போது அவர்கள், இந்திய குடிமக்கள் என்ற உரிமையையே இழக்க நேரிடும். அப்படி பார்க்கும் போது தான், இந்தியாவில் உழைப்பாளர்களாக இவர்கள் வாழ்ந்து கொள்ளலாம் ஆனால், உரிமையை எல்லாம் கேட்க முடியாது என்ற மறைமுக அச்சத்தை மோடி அரசு உருவாக்குகிறது.

2023 ஆம் ஆண்டு பீகார் சாதி கணக்கெடுப்பு அறிக்கை வெளிப்படுத்திய இந்த சமூக-பொருளாதார நடைமுறைகளை கருத்தில் கொண்டு, தற்போதைய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் பின்னணியில் உள்ள நியாயத்தை கேள்விக்குள்ளாக்குவது முக்கியம். தேர்தல் திருத்தம் அச்சத்தை ஏற்படுத்துகிறது, மேலும் பீகாரின் வாக்காளர்களில் கணிசமான பகுதியினர், குறிப்பாக எஸ்சி, எஸ்டி மற்றும் பிற விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள், திருத்தப்பட்ட பட்டியலில் தங்களைச் சேர்ப்பதற்குத் தேவையான ஆவணங்களை அணுக முடியாமல் போகலாம்.

தேர்தல் ஆணையத்தின் முரண்பாடு:

தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலை திருத்த உத்தரவிட்டதற்கான காரணத்தை, ஜூன் 24, 2025 தேதியிட்ட உத்தரவின் பத்தி 7 இல் கோடிட்டுக் காட்டியுள்ளது . அதன்படி, கடந்த இரண்டு தசாப்தங்களாக பெரிய அளவிலான சேர்த்தல்கள் மற்றும் நீக்கல்கள் காரணமாக, முதன்மையாக விரைவான நகரமயமாக்கல் மற்றும் அடிக்கடி இடம்பெயர்வு காரணமாக, வாக்காளர் பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகிறது. பல தனிநபர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து தங்கள் பெயர்களை நீக்காமல் புதிய இடங்களில் வாக்காளர் பட்டியலைப் பதிவு செய்துள்ளதாக கூறுகிறது. இதனால் நகல் பதிவுகள் ஏற்படுவதாகவும் இது வாக்காளர் பட்டியலின் துல்லியம் குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்துவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தனது கவலையை வெளிப்படுத்துகிறது. இந்த கூற்றை ஆராய்ந்து பார்த்தால், இதில் முரண்பாடு இருப்பது பட்டவர்த்தனமாக வெளிப்படும்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் முன்வைக்கும் இந்த வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. ஒருபுறம், "பெரிய அளவிலான சேர்த்தல்கள் மற்றும் நீக்கங்கள்" காரணமாக வாக்காளர் பட்டியலில் "குறிப்பிடத்தக்க மாற்றங்கள்" ஏற்பட்டுள்ளன என்றும், மறுபுறம், தற்போதைய வாக்காளர் பட்டியலில் திடீர் தீவிர திருத்தம் தேவைப்படுவதாகவும் அது கூறுகிறது. இருப்பினும், கடைசியாக சிறப்பு வாக்காளர் திருத்தம் (SIR) 2003 இல் செய்யப்பட்டதால், இவ்வளவு விரிவான திருத்தத்தை மேற்கொள்ள ஆணையம் இப்போது என்ன அவசரத்தை எதிர்கொள்கிறது என்ற கேள்வியை இது எழுப்புகிறது?

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 326 இன் கீழ் தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 19 உடன் படிக்கப்படுகிறது. இந்த விதிகளின் கீழ் வாக்காளராகப் பதிவு செய்ய, ஒருவர் இந்திய குடிமகனாகவும், சட்டத்தால் குறிப்பிடப்பட்ட தகுதித் தேதியில் குறைந்தது 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் பொதுவாக தொடர்புடைய தொகுதியில் வசிக்க வேண்டும் மற்றும் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தின் கீழும் பதிவு செய்ய தகுதியற்றவர்களாக இருக்கக்கூடாது எனக் கூறுகிறது.

வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்கு ஒருவருக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்கிறார்கள். தற்போதைய சிறப்பு தீவிர திருத்தம், விண்ணப்பதாரரின் பிறந்த ஆண்டைப் பொறுத்து வெவ்வேறு ஆவணங்களின் தொகுப்புகளைச் சமர்ப்பிக்க கட்டாயமாக்குகிறது. குறிப்பாக, 2004 க்குப் பிறகு பிறந்த நபர்கள் பல ஆவணங்களை வழங்க வேண்டும். இதில் அவர்களின் தேதி மற்றும் பிறந்த இடத்தைக் குறிக்கும் தனிப்பட்ட ஆவணம்; தந்தையின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தைக் காட்டும் ஆவணம்; மற்றும் தாயின் பிறந்த தேதி மற்றும் இடத்தைப் பிரதிபலிக்கும் ஆவணம் ஆகியவை அடங்கும்.

ஆவணங்கள்

இந்த உண்மைகளை நிறுவ, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களில் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்; அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது கல்விச் சான்றிதழ்; தொடர்புடைய அதிகாரியால் வழங்கப்பட்ட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC), பட்டியல் சாதிகள் (SC), அல்லது பட்டியல் பழங்குடியினர் (ST) சாதிச் சான்றிதழ்; அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்கள்; மற்றும், பொருந்தக்கூடிய இடங்களில், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து பதிவுகள் ஆகியவை அடங்கும்.  இந்த புதிய திருத்தங்கள் தான் இஸ்லாமிய, தலித் மக்களின் உரிமையைப் பறிக்கக் கூடிய தன்மை கொண்டதாக இருக்கின்றன.

பீகாரில் மொத்தம் 65 லட்சம் வாக்காளர்கள் வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளதாக சிறப்பு தீவிர திருத்தத்தின் முதல் கட்ட முடிவில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிட முதலில் மறுத்த தேர்தல் ஆணையம் பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவால் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த 65 லட்சம் பேரும் அடுத்த ஒரு மாதத்துக்குள் தகுந்த ஆவணங்கள் மூலம் நிரூபித்து வாக்காளர் பட்டியலில் மீண்டும் இணையலாம் என்று  சொல்லும் தேர்தல் ஆணையம் யாருக்காக வேலை செய்கிறது என்பது நமக்கு புலப்படுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியில் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வதாக கூறி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது. வாக்கு முறைகேட்டை ஆராய சிசிடிவி காட்சிகளை கேட்டால், வாக்களித்த பெண்களின் அந்தரங்கம் பாதிக்கப்படும் என்று புதிய விளக்கம் அளித்து, ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய ராகுல் காந்திக்கு கெடு விதித்து மன்னிப்பு கோர சொல்கிறார் தேர்தல் ஆணையர்.

பாஜகவின் அகண்ட பாரதம்

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே அகண்ட பாரதம் கொள்கையில் தீவிரமாக இருக்கிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தல், இந்தியாவிற்கு பாரதம் என்று பெயர் சூட்டல், நாடாளுமன்றத்திற்குள் சனாதனத்தை நிறுவுதல் என பரந்துபட்ட அளவில் பாஜகவின் நடவடிக்கைகள் அனைத்துமே அகண்ட பாரதத்திற்கான ஒற்றைக் குறிக்கோலோடு நகர்ந்து கொண்டிருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை பாஜக அமல்படுத்துவதற்கான நோக்கமே இஸ்லாமியர்கள், பட்டியல் சமூக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதிச்செயலாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. நிலம் இல்லாமல், வாழ்வாதாரத்திற்கான சிக்கல்களால் புலம்பெயர்ந்து வாழும் இஸ்லாமியர்கள், தலித் சமூக மக்கள் இந்தியாவில் வாழ்ந்து கொள்ளலாம் ஆனால், அவர்கள் வாக்களிக்கும் உரிமைகளைப் பெற்றுவிடக் கூடாது என்பதில் மோடி ஆட்சி கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இதற்கு எதிரான வலுவான குரல் கொடுக்க வேண்டியது இந்தியர்களாகிய நம் அனைவரின் கடமை.

புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லும் போது, ‘ஒருவருக்கு ஒரு ஓட்டு, அந்த ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரே மதிப்பு’ என்பார். ஆனால் மோடி தலைமையிலான பாஜக கும்பல்  வாக்குகளை திருடி மதிப்பு இழக்க சதி செய்கிறது. இந்த சனநாயகத்துக்கு எதிராக ‘சனநாயகன்கள்’ உரத்து பேசவேண்டும்.

- வன்னி அரசு

(தொடரும்)

சென்னை: மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி; "மெல்லிய மழைக்கே உயிர்கள் பலி" - தமிழிசை கண்டனம்

சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இன்று காலை கண்ணகி நகரில் பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி என்ற பெண் தேங்கிய நீரில் மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்... மேலும் பார்க்க

Sergio Gor: "என் நண்பர், நம்பிக்கையானவர்" - இந்தியாவிற்கான அமெரிக்க தூதரைப் பரிந்துரைத்த ட்ரம்ப்

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். இவர் இந்தியாவிற்கு மட்டுமல்ல... இவர் தான் பாகிஸ்தான் உள்ளிட்ட தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்குச் சிறப்புத் தூதராகவும் இருப்பார். இந்தப்... மேலும் பார்க்க

``உணவகங்களில் ரூ.20 தண்ணீர் பாட்டில்களுக்கு ரூ.100 வசூலிப்பது ஏன்?'' - டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி

பெரிய ஹோட்டல்களுக்கு சாப்பிட சென்றால், ரூ.20 தண்ணீர் பாட்டிலை அதிக விலைக்கு விற்பார்கள். ஆனால், 'தண்ணீர் பாட்டில் வேண்டாம். டம்ளரில் தண்ணீர் தாங்க' என்று கேட்க கூச்சப்பட்டு, அந்தத் தண்ணீர் பாட்டிலிலேய... மேலும் பார்க்க

Vijay: `விஜய்யின் எம்ஜிஆர் புகழாரம்' - அதிமுக வாக்குகளை கைபற்றுவாரா?

எம்ஜிஆர் புகழ் பாடிய விஜய்விஜய் தவெகவைத் தொடங்கிய பிறகு, முதல் மாநாடு விக்கிரவாண்டியில் 27.10.2024 அன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மதுரையில் நடந்த இரண்டாவது மாநாடு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏ... மேலும் பார்க்க

`Nayanthara -வுக்கும் கூட்டம் கூடும்'- Vijay- ஐ எச்சரிக்கும் பழ.கருப்பையா | TVK Madurai manadu

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த மாநாடு தவெக-வுக்கு எந்தளவுக்கு பலன் தரும்? விஜய் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற விவாதங்கள் எழுந்துள்ள நி... மேலும் பார்க்க