இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி...
Waqf Bill: பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன 'போரா முஸ்லீம்கள்' - யார் இவர்கள்?
மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வக்பு சட்ட திருத்த மசோதா நாடுமுழுவதும் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமியர் அமைப்புகள் வக்பு சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
இந்த நிலையில் வக்ஃப் மசோதாவுக்காக பிரதமர் மோடியைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர் தாவூதி போரா முஸ்லீம்கள். வக்பு திருத்தச் சட்டத்தில் தங்களது கோரிக்கைகள் பல இடம்பெற்றுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
குஜராத்தில் அதிகமாக வசிக்கும் இந்த போரா முஸ்லீம்கள் என்பவர்கள் யார்? முன்னதாக மோடி எகிப்தில் உள்ள 11ம் நூற்றாண்டு மசூதிக்கு சென்றபோது, அந்த மசூதியை புரனமைத்த இந்திய போரா முஸ்லீம்கள் பேச்சு பொருளாகினர்.
இவர்களுக்கும் எகிப்து மசூதிக்கும் உள்ள தொடர்பு என்ன? விரிவாகக் காணலாம்...
யார் இந்த தாவூதி போரா முஸ்லீம்கள்?
அல் ஹக்கீம் மசூதி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மசூதியின் முழுப் பெயர் ‘இமாம் அல் ஹக்கீம் பி அமர் அல்லா’ என்பதாகும்.
கி.பி. 11ம் நூற்றாண்டில் ஃபாத்திமிட் வம்சம் எகிப்தை ஆட்சி செய்த காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டது.
இந்தியாவில் குடியேறிய போரா முஸ்லிம்கள் இந்த ஃபாத்திமிட் வம்சத்தில் இருந்து தோன்றியவர்கள்தாம். உலகம் முழுவதும் உள்ள போரா முஸ்லிம் சமூகத்துக்கு மிக முக்கியமான பண்பாட்டு, சமய சின்னமாக இந்த மசூதி விளங்குகிறது.

2021-ம் ஆண்டு கணக்குப்படி உலகம் முழுவதும் 20 லட்சம் முதல் 50 லட்சம் போரா முஸ்லிம்கள் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலும் பாகிஸ்தானின் கராச்சி நகரிலும் வசிக்கிறார்கள்.
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், மத்தியக் கிழக்கிலும், கிழக்கு ஆப்பிரிக்காவிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் போரா முஸ்லிம்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள்.
குஜராத்தில் உள்ள போரா முஸ்லீம்களுடன் மோடி நெருங்கிய தொடர்பை பேணி வருகிறார்.
தாவூதி போரா முஸ்லிம்களின் வரலாறு
தாவூதி போரா முஸ்லிம்கள் இஸ்லாம் மதத்தின் ஒரு பிரிவான ஃபாத்திமி இஸ்மாயிலி தாயிபி என்ற பிரிவின் போதனைகளைப் பின்பற்றுகிறவர்கள். அவர்கள் எகிப்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், பிறகு ஏமனுக்கு சென்ற இவர்கள், பிறகு 11ம் நூற்றாண்டில் இந்தியாவில் குடியமர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதன் பிறகு 1539ம் ஆண்டு, இந்தப் பிரிவினரின் தலைமையகம் ஏமனில் இருந்து இந்தியாவின் குஜராத் மாநிலம், பதான் மாவட்டத்தில் உள்ள சித்பூர் என்ற இடத்துக்கு மாற்றப்பட்டது.
இந்தியாவில் 5 லட்சம் தாவூதி போரா முஸ்லிம்கள் இருப்பதாக கூறுகிறது அரசாங்கத் தரவு. இந்தியாவில், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய இடங்களிலும் இவர்கள் இருந்தாலும், குஜராத் மாநிலம் சூரத் நகரத்தையே தங்கள் சொந்த ஊராக கருதுகிறார்கள் போரா முஸ்லிம்கள்.
மிகவும் நெருங்கி வாழும் தாவூதி போரா சமூகத்தினர், இஸ்லாத்தின் ஐந்து நெறிகளான குரான் ஓதுவது, ஹஜ், உம்ரா பயணம் மேற்கொள்வது, தினசரி ஐந்து வேளை தொழுவது, ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பது, ஜகத் செலுத்துவது ஆகிய கடமைகளை கடைபிடிப்பவர்கள். பாரம்பரிய விழுமியங்களைக் கடைபிடிக்கும் அதே நேரம், வணிகம் செய்வதும், வாழ்க்கையைப் பற்றிய நவீனப் பார்வையைக் கொண்டிருப்பதும் இவர்களது அடையாளம் என்கிறார்கள்.!