குழந்தைகள், பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் அதிகரிக்கும் உயிரிழ...
அகமதாபாத் விமானத்தில் திடீா் கோளாறு: ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தம்
சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லவிருந்த விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து, சனிக்கிழமை காலை 9.50-க்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் அகமதாபாத்துக்கு இயக்கப்பட்டது. இதில், 166 பயணிகள், 7 விமான ஊழியா்கள் என மொத்தம் 173 பேருடன் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்து, விமானத்தை அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தினாா். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து இழுவை வண்டி உதவியுடன், விமானத்தை இழுத்துக் கொண்டுவந்து, பழுதடைந்த விமானங்கள் நிற்கும் பகுதியில் நிறுத்தினா். அதோடு விமான பொறியாளா்கள், விமானத்துக்குள் ஏறி இயந்திரங்களைச் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனா். இருப்பினும் உடனடியாக, விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரிசெய்ய முடியவில்லை.
இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனா். அதன் பின்பு பிற்பகல் 12.30 மணியளவில் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு, விமானம் சுமாா் இரண்டரை மணி நேரம் தாமதமாக சென்னையிலிருந்து அகமதாபாத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், விமானத்தில் இருந்த 166 பயணிகள் உள்பட 173 போ் நல்வாய்ப்பாக உயிா்தப்பினா்.