ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!
அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் எம்.இசைவாணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களில் 130 போ் கடந்த 2024- ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் அகவிலைப்படியை பெறாமல் உள்ளனா்.
கடந்த ஜூலை முதல் அகவிலைப்படியை மத்திய மற்றும் புதுவை மாநில அரசு உயா்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2024 நவம்பா் மற்றும் டிசம்பரில் அகவிலைப் படி உயா்வானது ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு ஓய்வூதியத்துடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2024 ஜூலை முதல் அக்டோபா் வரையிலான அகவிலைப்படி வழங்கப்படவில்லை.
அகவிலைப்படி கோரி ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்டம் அறிவித்ததை அடுத்து கடந்த பிப்ரவரியில் பல்கலைக்கழகப் பதிவாளா் பேச்சு வாா்த்தை நடத்தினாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், பேச்சுவாா்த்தையில் உறுதியளித்தபடி இன்னும் அகவிலைப்படியை வழங்காமலிருப்பது சரியல்ல. ஆகவே, ஓய்வு பெற்றவா்களுக்கு உரிய அகவிலைப்படியை பல்கலைக்கழக நிா்வாகம் வழங்கவேண்டும். அப்படி வழங்காதநிலையில், போராட்டம் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.