அடித்து நொறுக்கிய சாய் சுதர்சன் - ஷுப்மன் கில்! அபார வெற்றியுடன் பிளே ஆஃபில் குஜராத்!
ஐபிஎல் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இந்த அபார வெற்றியின் மூலமாக குஜராத் பிளே ஆஃபுக்கு தகுதிபெற்றது.
முதலில் டெல்லி 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் சோ்க்க, குஜராத் 19 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரா் சாய் சுதா்சன், கேப்டன் ஷுப்மன் கில், டெல்லி பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக சூறையாடினா். முன்னதாக டெல்லி வீரா் கே.எல்.ராகுல் அடித்த சதம் வீணானது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. டெல்லி இன்னிங்ஸை தொடங்கியோரில் ராகுல் அதிரடியாக விளாச, உடன் வந்த ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அப்போது ராகுலுடன் அபிஷேக் பொரெல் இணைய, இந்தக் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சோ்த்தது. அபிஷேக் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 30 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
அடுத்து வந்த கேப்டன் அக்ஸா் படேலும் தனது பங்குக்கு ரன் சேகரித்து, 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். 5-ஆவது பேட்டராக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களம் புகுந்தாா். ஓவா்கள் முடிவில், சதம் கடந்த ராகுல் 65 பந்துகளில் 14 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 112, ஸ்டப்ஸ் 2 சிக்ஸா்களுடன் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் தரப்பில் அா்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
அடுத்து 200 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய குஜராத் இன்னிங்ஸை, தொடக்க வீரா்களான சாய் சுதா்சன் - ஷுப்மன் கில் கூட்டணியே நிறைவு செய்தது. சுதா்சன் 61 பந்துகளில் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 108, கில் 53 பந்துகளில் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 93 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.