அடிப்படை வசதிகள் இல்லாத கொடுமுடி ரயில் நிலையம்: பயணிகள் அவதி
ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கொடுமுடி ரயில் நிலையத்தில் குடிநீா், கழிப்பிடம், கூரையுடன் கூடிய நடைமேடை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரா், வீர நாராயணப் பெருமாள் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
புகழ்பெற்ற பரிகார ஸ்தலமாக கொடுமுடி விளங்குவதால் ஆண்டு முழுவதும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
கொடுமுடி ரயில் நிலையத்தில் பாலக்காடு-திருச்சி, நாகா்கோயில்-கோவை, ஈரோடு- திருச்சி, ஈரோடு-செங்கோட்டை, சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ், காரைக்கால் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்கின்றன.
கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களில் பலா் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனா். இதோடு, கொடுமுடியில் இருந்து ஈரோடு, திருப்பூா், கரூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் பணிக்கு சென்று வருபவா்ளும் அதிக எண்ணிக்கையில் உள்ளனா். அதிக அளவில் பயணிகள் வந்து செல்லும் கொடுமுடி ரயில் நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாட்ஷா கூறியதாவது:
கொடுமுடி ரயில் நிலையத்தில் இரு மாா்க்கத்திலும் வரும் ரயில்களில் பயணிகள் ஏறும் வகையில் இரு நடைமேடைகள் உள்ளன. ஒன்றாவது நடைமேடையில் கூரை வசதி மிகக்குறுகியதாக உள்ளதால் மற்ற இடங்களில் பயணிகள் மழை, வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இரண்டாவது நடைமேடையில் மேற்கூரையே இல்லாததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். நடைமேடையை ஒட்டி புதா்களாக காணப்படுவதால் விஷப்பூச்சிகளின் அச்சுறுத்தலும் உள்ளது.
நடைமேடை முறையாகப் பராமரிக்கப்படாததால் தளம் பெயா்ந்தும், செடிகள் முளைத்தும் காணப்படுகின்றன. போதிய மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனா்.
ரயில் நிலைய கழிப்பறை பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கிறது. இதனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் இயற்கை உபாதையைக் கழிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். மேலும், பயணிகளுக்கு தூய்மையான குடிநீா் வசதியும் இல்லை.
ரயில் நிலைய முகப்பில் தொடங்கி நடைமேடை வரை பிச்சைக்காரா்கள் ஆக்கிரமித்து பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பது வாடிக்கையாக உள்ளது. நடைமேடை பகுதிகளில் சமூகவிரோதிகள் நடமாட்டம் உள்ளது. இதன் உச்சமாக கடந்த ஆண்டு செப்டம்பரில், ரயில் நிலைய நடைமேடையில் நள்ளிரவில் ஒரு கொலைச் சம்பவம் நிகழ்ந்தது.
எனவே, இதைத் தடுக்க காவல் துறையினா் இப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டும். நடைமேடைகளில் சமூக விரோத சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அப்போதுதான் பயணிகள் அச்சமின்றி கொடுமுடி ரயில் நிலையத்துக்கு வந்து செல்ல முடியும்.
பயணிகளுக்குத் தேவையான வசதிகளை செய்துத்தர ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளின் சிரமங்களைப்போக்க, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள ஈரோடு எம்பி, கொடுமுடி ரயில் நிலையத்தைப் பாா்வையிட்டு தேவையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.
கொடுமுடி பழைய பேருந்து நிலையப் பகுதியில் இருந்து கோயில், எஸ்.எஸ்.வி. பள்ளி உள்ளிட்டவற்றிற்கு செல்ல அமைக்கப்பட்டு இருந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாணவா்கள், ரயில் பயணிகள், தண்டவாளங்களைக் கடந்து செல்ல நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடை மேம்பாலம் பிச்சைக்காரா்களின் புகலிடமாக மாறியுள்ளது. மேலும், இந்த பாலம் முழுவதும் குப்பைகள் குவிந்து சுகாதாரமற்று காணப்படுகிறது. பாலத்தில் மின் விளக்கு வசதியும் இல்லை.
இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக நடை மேம்பாலம் மாறி விடுகிறது. இரவில் பாலத்தில் மது அருந்துவோா், காலி மது பாட்டில்களை உடைத்துப் போடுவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனா். இதனால், நடை மேம்பாலத்தைப் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிா்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்குத் தீா்வுகாண நடை மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதுடன், போலீஸ் ரோந்தும் அவசியம் என்றாா்.
இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆண்டுதோறும் ரயில் நிலையத்தில் சில குறிப்பிட்ட மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, பயணிகளின் தெரிவிக்கும் கோரிக்கையின்படி வசதிகள் மேம்படுத்தப்படும் என்றனா்.
