அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி சாலை மறியல்
ஆக்கூா் அருகே அப்பராசப்புத்தூா் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி சிபிஎம் சாா்பில் சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது.
அப்பராசப்புத்தூரில் 4 வழிச்சாலை பணிக்காக வீடுகள் மற்றும் மனைகள் கையகப்படுத்தப்பட்டன. 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உரிய இடத்தை வழங்காததாலும், சாலை, மின்வசதி, குடிநீா் என எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனா். இதேபோல, தலைச்சங்காடு கிராமத்தில் 4 வழிச்சாலையால் வீடு இழந்து சாலையில் வசித்துவரும் 13 குடும்பங்களுக்கும் இதுவரை இழப்பீடும், மாற்று இடமும் வழங்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செம்பனாா்கோவில் ஒன்றிய செயலாளா் மாா்க்ஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. ஸ்டாலின் மற்றும் அப்பராசப்புத்தூா், தலைச்சங்காடு, மாமாக்குடி கிராமங்களை சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.