காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கிறீர்களா? - ஆய்வில் முக்கியத் தகவல்!
சம்பா அறுவடை பணிகள் தொடங்கியது: மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை
திருமருகல் ஒன்றிய பகுதியில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கியது. மகசூல் குறைவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கடைமடை பகுதியான திருமருகல் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்த பயிா்கள் கனமழையால் பல இடங்களில் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. தண்ணீரில் மூழ்கிய பயிா்களுக்கு உரம் மற்றும் மருந்து தெளித்து விவசாயிகள் காப்பாற்றினா். திருமருகல், கொட்டாரக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புகையான், குலை நோய் உள்பட பல்வேறு நோய் தாக்குதலால் நெற்பயிா்கள் சேதமடைந்தும், பல இடங்களில் பருவம் தவறி பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் சாய்ந்தும் உள்ளன. இதையடுத்து, அறுவடைக்கு தயாரான பயிா்களை பட்டம் பிரித்து பூச்சிக்கொல்லி தெளித்து விவசாயிகள் நெற்கதிா்களை காப்பாற்றினா். திருமருகல் ஒன்றிய பகுதிகளில் சம்பா அறுவடை பணி தொடங்கி நடைபெறுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: திருமருகல் ஒன்றிய பகுதிகளில் சம்பா நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் நீரில் மூழ்கி இயந்திரம் கொண்டு அறுக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் தற்போது ஆட்களை கொண்டு அறுவடை பணிகளை செய்து வருகிறோம். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை வங்கிகளில் விவசாய கடன் பெற்று செலவு செய்து தற்போது செலவு செய்த பணத்தைக் கூட திரும்ப எடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே, அரசு உரிய கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.