அடுக்குமாடி குடியிருப்பில் 300 பூனைகளை வளா்த்த பெண்!
புணே: மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவா் தனது வீட்டில் 300 பூனைகளை வளா்த்து வந்துள்ளாா்.
பக்கத்து வீட்டினா் அளித்த புகாரின் அடிப்படையில், குடியிருப்பை ஆய்வு செய்த போலீஸாா், பூனைகளை உரிய மாற்று இடத்துக்கு மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி குடியிருப்பின் உரிமையாளரான அந்தப் பெண்ணுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளனா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘புணேயின் ஹடப்சா் பகுதியில் அமைந்துள்ள ‘மாா்வெல் பெளன்ட்டி ஹவுசிங் சொசைட்டி’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பூனைகளின் தொடா் இரைச்சல் மற்றும் துா்நாற்றம் வீசுவதாக அளித்த புகாரின் அடிப்படையில், கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் குழு போலீஸாருடன் இணைந்து அந்தக் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டனா். அதில், 3 படுக்கை அறைகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பில் 300 பூனைகளை உரிமையாளா் வளா்த்து வந்தது தெரியவந்தது. அந்தக் குடியிருப்பு தூய்மை இல்லாததோடு, துா்நாற்றமும் வீசியது. அதைத் தொடா்ந்து பூனைகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.