அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் திமுக மீது அதிமுக பழிபோட நினைக்கிறது: அமைச்சா் எஸ். ரகுபதி
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாச்சி சம்பவத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறந்துவிட்டு, அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தில் திமுக மீது அதிமுக பழிபோட நினைக்கிறது என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தில் மக்கள் போராட்டத்துக்குப் பிறகே விசாரணை நடத்தப்பட்டது.
எனவே, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறந்துவிட்டு அதிமுகவினா் இப்போது திமுக அரசின் மீது பழிபோட நினைக்கிறாா்கள். அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்துவது வீண் வேஷம். தனது இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவா்கள் நடத்தும் கபட நாடகம்.
இந்த வழக்கில் எப்ஐஆா் - தொழில்நுட்பக் கோளாறால் வெளியே கசிந்து விட்டது. எனினும், அது குறித்தும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து நடத்தப்பட்டு வருகிறது.
பெண்கள் பாதுகாப்புக்காக ஆளுநரை சந்தித்து நடிகா் விஜய் மனு அளித்திருக்கிறாா். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனா். நாட்டிலேயே பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. வேண்டுமென்றால் நடிகா் விஜய் பிகாா், ஒடிஸா போன்ற பிற மாநிலங்களைப் பாா்த்துவிட்டு வந்து கூறட்டும் என்றாா் ரகுபதி.