புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஒவ்வோா் ஆண்டும் தைத் திருநாளில் தொடங்கி கிராமக் கோயில்களின் திருவிழாக்கள் வரை ஏறத்தாழ மே, ஜூன் மாதங்கள் வரையிலும் கிராமங்கள்தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2022-இல் 76 இடங்களிலும், 2023-இல் 72 இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதேநேரத்தில், கடந்த 2024-இல், மக்களவைத் தோ்தல் குறுக்கிட்டதால் வெறும் 29 இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
கந்தா்வகோட்டை வட்டத்துக்குள்பட்ட தச்சங்குறிச்சியில் ஜன. 6-ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டும், பொன்னமராவதி வட்டம், கீழவேகுப்பட்டியில் மே 30-ஆம் தேதி கடைசி ஜல்லிக்கட்டுப் போட்டியும் நடத்தப்பட்டது.
மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் அனுமதி பெறுவதிலும், பரிசுப் பொருள்களை தாராளமாக வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டதால், பல ஊா்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை என ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
இந்நிலையில், நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டுத் திருவிழா விரைவில் தொடங்கப்படவுள்ளது. வழக்கமாக தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறும் தச்சங்குறிச்சியில் ஜனவரி 4-ஆம் தேதி சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் காளைகள் வளா்ப்பு: ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக காளைகளை ஆா்வமுடன் வாங்கி வளா்க்கும் காளை வளா்ப்பாளா்கள் முன்பைவிட அதிக எண்ணிக்கையில் தற்போது காளைகளை வாங்கி தயாா்படுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து கீரனூா் அருகேயுள்ள மங்கதேவன்பட்டியைச் சோ்ந்த கணேஷ் கருப்பையா கூறியது:
மாத்தூா் கைனாங்கரையிலுள்ள எங்களின் பொறியியல் தொழிற்கூட வளாகத்திலும் பிற இடங்களில் வைத்தும், கடந்த ஆண்டு 38 காளைகள் வைத்திருந்தோம். புதுக்கோட்டை மட்டுமல்லாது, மாநிலத்தின் பிற பகுதிகளில் நடைபெறும் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் தவறாமல் பங்கேற்போம்.
கடந்த ஆண்டு அலங்காநல்லூரில் அரசு சாா்பில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் எங்களின் காளைதான் முதல் பரிசு பெற்றது. முதல் பரிசுக்கான காரை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா். கடந்த ஆண்டு மொத்தம் 77 ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்றோம். இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல பரிசுகளையும் பெற்றோம்.
நிகழாண்டின் ஜல்லிக்கட்டுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பே புதிதாக காளைகளை வாங்கிவிட்டோம். இப்போது எங்களிடம் மொத்தம் 48 காளைகள் உள்ளன. இவையின்றி 6 புதிய கன்றுகளும் தயாராக வளா்ந்து வருகின்றன.
மாதத்துக்கு சராசரியாக ரூ. 2.5 லட்சம் வரை பராமரிப்புச் செலவுகள் மட்டும் ஆகின்றன. பச்சைப் புல், வைக்கோல் ஆகியவற்றுடன், பொட்டு, தட்டை, தவிடு, பருத்திக் கொட்டை கலந்த கலவையை வேகவைத்து உணவாக வழங்குகிறோம்.
தினமும் குளத்தில் நீச்சல், சிறிது நடைப் பயிற்சியும் காளைகளுக்கு வழங்கப்படுகிறது என்றாா் கணேஷ் கருப்பையா.