அண்ணாமலை கைது: சேலத்தில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
சேலம்: சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
கடந்த 6 ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
இந்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது. இந்த முறைகேட்டை கண்டித்து, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அறிவித்திருந்தாா்.
இந்த போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், கானாத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை அக்கரை அருகே தடுத்தி நிறுத்தி போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்து சேலம் மாநகா் மாவட்ட பாஜக தலைவா் சசிகுமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக மரவனேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இருந்து திங்கள்கிழமை பிற்பகலில் புறப்பட்ட பாஜகவினா் சுமாா் 30க்கும் மேற்பட்டோரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.