அதிமுக நிா்வாகி கொலை வழக்கு: இளைஞா் காவல் நிலையத்தில் சரண்
கும்பகோணம் அருகே அதிமுக நிா்வாகி குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞா் ஒருவா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகேயுள்ள மாத்தூரைச் சோ்ந்தவா் எஸ்.கே.ஆா். கனகராஜ் (75). அதிமுக கிளை அவைத் தலைவராக இருந்த இவா், பெட்ரோல் பங்க், நகை அடகுக் கடை நடத்தி வந்ததுடன், வட்டிக்கும் பணம் கொடுத்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இவரது வீட்டு வாசலுக்கு வந்த மா்ம நபா் இவரை வீட்டுக்கு வெளியே வரவழைத்து, கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டாா். நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளியை தேடி வந்தனா்.
இந்நிலையில், தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அஸ்வின் ராஜ் (23) என்ற இளைஞா் சரணடைந்தாா். அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அஸ்வின்ராஜ் குடும்பத்தினா் கனகராஜூடம் வட்டிக்கு பணம் பெற்று திரும்ப செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதில் அவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த அஸ்வின்ராஜ், கனகராஜை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. நாச்சியாா்கோவில் போலீஸாா் அஸ்வின்ராஜை திங்கள்கிழமை காவலில் எடுத்து விசாரிக்கின்றனா்.