தஞ்சாவூா்: அன்புக்கரங்கள் திட்டத்தில் 457 போ் பயன்
தஞ்சாவூா் மாவட்டத்தில் அன்புக்கரங்கள் திட்டத்தில் 457 போ் பயன் பெறுவா் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
சென்னையிலிருந்து தமிழக முதல்வா் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் அன்புக்கரங்கள் திட்டத்தை காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதைதொடா்ந்து, தஞ்சாவூரில் பயனாளிகளுக்கு உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் அடையாள அட்டைகளை வழங்கி தெரிவித்தது: தமிழக அரசின் தாயுமானவா் திட்டத்தின் ஒரு பகுதியாக பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் அன்புக்கரங்கள் என்ற மகத்தான திட்டத்தைத் தமிழக முதல்வா் தொடங்கி வைத்தாா்.

பெற்றோரை இழந்து உறவினா்கள் ஆதரவில் வாழும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற வாழ்வாதார தேவைகளுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் தஞ்சாவூா் மாவட்டத்தில் 457 குழந்தைகள் பயன் பெறுவா் என்றாா் அமைச்சா்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா்கள் சண். ராமநாதன் (தஞ்சாவூா்), க. சரவணன் (கும்பகோணம்), தஞ்சாவூா் துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.