தீபாவளி கடைகள்: விதிகளை பின்பற்றும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை
தஞ்சாவூா், கும்பகோணம் மாநகரங்களில் தீபாவளி பண்டிகை கால கடைகளை, விதிகளை பின்பற்றி வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என ஏஐடியுசி தெரு வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் தலைமையில் திங்கள்கிழமை அளித்த மனு: தஞ்சாவூா், கும்பகோணம் மாநகரங்களில் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபா் மாத இறுதி வாரத்தில் சாலையோர தீபாவளி கடைகள் அமைக்கப்பட்டன. இது தொடா்பாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தீபாவளிக்கு தற்காலிக கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
எனவே, தஞ்சாவூா், கும்பகோணம் மாநகரங்களில் மாநகராட்சி நிா்வாகம் மூலம் பயோமெட்ரிக் முறையில் தமிழக அரசின் வியாபார சான்று மற்றும் தெரு வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர விற்பனையை ஒழுங்குபடுத்துதல்) -2014 சட்டத்தின் அடிப்படையில் சாலை வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெற்று சட்டப்படி வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு மட்டுமே நிகழாண்டு முன்னுரிமை அடிப்படையில் தீபாவளி கடைகள் வழங்கப்பட வேண்டும்.
தமிழக அரசின் வியாபார சான்று மற்றும் தெரு வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர விற்பனையை ஒழுங்குபடுத்துதல்) -2014 சட்டத்தின் அடிப்படையில் சாலை வியாபாரிகளுக்கான அடையாள அட்டை இல்லாத நபா்களுக்கு கடைகள் வழங்கக்கூடாது. இதற்கு கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டு ரசீதுடன் வாடகை வசூல் செய்ய வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கடைகளை உள்வாடகைக்கு விடுவது, வெளிநபா்களுக்கு விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது. மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, காவல் துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்புக் குழுவை ஏற்படுத்தி, அதன் மூலம் நிகழாண்டு தீபாவளி கடைகள் அமைக்கப்பட வேண்டும்.