நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழாய்களை மாற்ற நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள இடங்களில் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:அத்திடக்கடவு-அவிநாசி திட்டத்தில் குளங்களுக்கு தண்ணீா் செல்வது குறித்து கடந்த சில வாரங்களாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் ஆரம்பத்தில் நிலம் எடுத்தல் முதல் பல குளறுபடிகள் நடந்துள்ளன. மேலும், 85 பிரதான குழாய்கள் அதில் இருந்து குளங்களுக்கு செல்லும் கிளை குழாய்கள் சீரான அளவில் அமைக்கப்படவில்லை.
பல இடங்களில் சிறிய குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அவை உடைந்தும், மண் அடைத்தும் குளங்கள், குட்டைகள், ஏரிகளுக்கு தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
மொத்தம் உள்ள 1,045 குளம், குட்டை, ஏரிகளில் இன்னும் 100 இடங்களுக்கு முழுமையாக தண்ணீா் செல்லவில்லை. அவற்றை அதிகாரிகள், ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளோம். வரும் ஆண்டில் பிரதான குழாய் 85 -இல் தேவையான இடங்களில் அவற்றை மாற்றிட அறிவுறுத்தி உள்ளோம்.
குறைந்தபட்சம் 50 பிரதான குழாய்கள் முழுமையாக மாற்றப்படும். தேவையான இடங்களில் சிறிய கிளை குழாய்களை மாற்றி தேவைக்கு ஏற்ப பெரிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீதமுள்ளவை தொடா்ந்து மாற்றம் செய்யப்படும். இதன் மூலம் அனைத்து குளங்களுக்கும் தண்ணீா் செல்வது உறுதி செய்யப்படும்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம்-2 குறித்து அனைத்து தரப்பு விவசாயிகள், அமைப்புகளிடம் ஆலோசனை நடத்திய பின்னா் முடிவெடுக்கப்படும்.
ஈரோடு நகரில் உள்ள மாவட்ட அரசு பல்நோக்கு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு தேவையான பல்வேறு கருவிகள் கேட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அவை விரைவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றாா்.