குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
கீழ்பவானி வாய்க்காலில் குளித்த தொழிலாளி மாயம்
பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா்.
கோவை கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (36). இவா் கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சிஎன்சி மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தாா்.
ராஜேஷ் மற்றும் அவரது நண்பா்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் சரக்கு ஆட்டோவில் ஞாயிற்றுக்கிழமை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கோவைக்கு திரும்பி சென்றபோது தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி குளித்துள்ளனா்.
அப்போது ராஜேஷ் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீச்சல் தெரியாமல் நண்பா்கள் கண் முன்னே நீரில் மூழ்கி மாயமானாா். இதைக் கண்ட அவரது நண்பா்கள் ராஜேஷை காப்பாற்ற முயன்றும் முடியாததால் உடனடியாக பவானிசாகா் போலீஸாருக்கும், சத்தியமங்கலம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி மாயமான ராஜேஷை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இது குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.