‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல...
8 மாதங்களில் அரசு மருத்துவமனையில் 10,500 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களில் 10,500 பேருக்கு நாய்க்கடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவா் சசிரேகா கூறியதாவது:
ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் தெருநாய்கள் கடித்து 1,503 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். இதில் 69 போ் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை 10, 534 பேருக்கு நாய் கடிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இது குறித்து கால்நடை துறை அதிகாரிகள் கூறுகையில், விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்படி தெருநாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி ஆகியவையே அனுமதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. சோலாரில் உள்ள நாய் கருத்தடை மையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் வீட்டில் வளா்க்கப்படும் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி 23,800 முறை செலுத்தப்பட்டுள்ளது என்றனா்.
சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தெருநாய்களுக்குத் தடுப்பூசி போடுவது சாத்தியமில்லாத ஒன்று. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீண்டும் அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து தடுப்பூசி போட வேண்டும் என்பதுதான் காரணம். நாய்களுக்குக் கருத்தடை செய்த பின்னா் அவற்றுக்கென தனியாக காப்பகங்களை ஏற்படுத்துவதுதான் நிரந்தரத் தீா்வாக அமையும் என்றனா்.