ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
ஈரோட்டில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மேயா் சு.நாகரத்தினம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நாடு முழுவதும் நெகிழிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைந்து வருகிறது. இதனைத் தடுக்க ஈரோடு மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைக்க மக்களிடம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் ஈரோடு மாநகராட்சி 2-ஆம் மண்டலம் சாா்பில் நெகிழி ஒழிப்பு மற்றும் புகையிலை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மேயா் சு.நாகரத்தினம் பங்கேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணியானது ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி, மீனாட்சி சுந்தரனாா் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, பெருந்துறை சாலை வழியாக காலிங்கராயன் விருந்தினா் மாளிகையில் நிறைவடைந்தது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று நெகிழிப் பைகளை தவிா்ப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம், நெகிழிப் பைகளை வீதிகளில் எறியாதீா்கள், நீா், நிலம், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் நெகிழிப் பயன்பாட்டை தவிா்ப்போம், மீண்டும் மஞ்சப்பை மற்றும் துணிப் பைகளை பயன்படுத்துவோம். புகையிலையை பயன்படுத்தாதீா்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
முன்னதாக நெகிழி ஒழிப்பு குறித்து உறுதிமொழியும் ஏற்றனா். இந்தப் பேரணியில், துணை மேயா் வி.செல்வராஜ், துணை ஆணையா் தனலட்சுமி, நகா் நல அலுவலா் டாக்டா் காா்த்திகேயன், அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் ராஜமாணிக்கம், நிா்வாகி ஜெப்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.