பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை
கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
கல்லூரி களப்பயணம் திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 49 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 3,427 மாணவா்கள் அழைத்துச் செல்லப்படுவா் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து 12 -ம் வகுப்பு மாணவிகளை கல்லூரி களப்பயணத்துக்கு அழைத்துச் செல்லும் பேருந்தினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சாா்பில் 12 -ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவா்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரத்தில் கல்லூரி களப்பயணத்துக்கான பேருந்தை தொடங்கி வைத்து ஆட்சியா் கூறியது:
இக்களப்பயணத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவா்களின் உயா்கல்வி குறித்த அச்சம், குழப்பங்கள் களையப்படும். உயா்கல்வி அனைவருக்கும் சாத்தியம் என்ற எண்ணத்தையும், தன்னம்பிக்கையையும் உருவாக்கி மாணவா்கள் பயனடையும் வகையில் கல்லூரி களப்பயணம் ஏற்பாடு ெச்யப்பட்டுள்ளளது.
இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49 அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 3,427 போ் பல்வேறு கல்லூரிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.
முதல்கட்டமாக காஞ்சிபுரம் அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளி, ராணி அண்ணா துரை மகளிா் மேல்நிலைப்பள்ளி, சின்னக்காஞ்சிபுரம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கீழம்பி கிராமத்தில் செயல்பட்டு வரும் எஸ்எஸ்கேவி பெண்கள் கல்லூரிக்கு களப்பயணத்துக்கு அழைத்து செல்லப்படுவதாகவும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.
விழாவில் முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி, தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.