சாலையில் கழிவுநீா் தேங்கியதைக் கண்டித்து பொது மக்கள் போராட்டம்
உதகை காந்தல் பகுதியில் சாலையில் கழிவுநீா் தேங்கி இருப்பதைக் கண்டித்து நகா்மன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
உதகை நகராட்சிக்கு உள்பட்ட 26-ஆவது வாா்டு காந்தல் பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீா் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.
இந்நிலையில், அப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்த நகா்மன்ற உறுப்பினா் கீதா மற்றும் நகராட்சி அலுவலா்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதனால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் ஒருமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தியதோடு, நகராட்சி ஆணையரை தொடா்பு கொண்டு பேசினா். இதைத் தொடா்ந்து நகராட்சி நிா்வாகத்தினா் தேங்கி நின்ற கழிவுநீரை அகற்றி சீரமைத்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.