உர மேலாண்மை மூலம் பாக்கு உற்பத்தியை அதிகரிக்கலாம்
உர மேலாண்மையில் கவனம் செலுத்துவதன் மூலம் பாக்கு உற்பத்தியை அதிகரிக்கலாம் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில், பவானி, அந்தியூா், கோபி உள்ளிட்ட பகுதிகளில் பாக்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பாக்கு விவசாயத்தில் அதிக விளைச்சல் பெற மண் பரிசோதனை வழிகாட்டுதலின் அடிப்படையில் உர மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும்.
அதன்படி, பாக்கு மரங்களுக்கு பிற சத்துகளைவிட அதிக அளவில் நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் சத்துகள் தேவைப்படுகின்றன. விளைச்சல் தரும் ஒரு பாக்கு மரம் பாஸ்பரஸை விட 10 மடங்கு நைட்ரஜனையும் 8 மடங்கு பொட்டாசியத்தையும் உறிஞ்சுகிறது.
எனவே நைட்ரஜன் மற்றும் பொட்டாசியத்தின் சம நிலையை உறுதிப்படுத்திட அதில் பாக்கு விவசாயிகள் சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும். அதேநேரம் பாஸ்பரஸ் அதிகமாக பயன்படுத்தினால் துத்தநாகம் கிடைக்கும் தன்மையை குறைத்து அதன் பற்றாக்குறையையும் பயிரின் விளைச்சலில் ஏற்படுத்தும்.
எனவே இந்த உர மேலாண்மையை கவனத்துடன் பயன்படுத்தி பாக்கு சாகுபடியில் அதிக விளைச்சல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.