கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
ரயில்கள் மீது கற்கள் எறிவதை தடுக்க போலீஸாா் விழிப்புணா்வு
ஈரோட்டில் ரயில்கள் மீது கல் எறிவதாலும் தண்டவாளங்களில் கற்களை வைப்பதாலும் ஏற்படும் ஆபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ஈரோடு மாவட்டத்தில் ரயில் பாதைகளில் கற்கள் வைப்பதை தடுக்கவும், ஓடும் ரயில்கள் மீது கற்கள் எறிவதை தடுக்கவும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் (ஆா்பிஎஃப்), ரயில்வே போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இதில் ஈரோடு வாய்க்கால்மேட்டில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரின் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சக்திவேல் தலைமை வகித்தாா். ஓடும் ரயில்கள் மீது கல் எறிவதாலும் தண்டவாளங்களில் கற்கள் வைப்பதாலும் ஏற்படும் ஆபத்து குறித்தும், இச்செயல்களில் ஈடுபட்டால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ரயில்கள் மீது கல் எறிவது, தண்டவாளங்களில் கற்கள் வைத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து குறும்படம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் மோகன்குமாா், ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன் மற்றும் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.