இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்! பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பரபரக்கும் கிரிக...
தசரா, தீபாவளி..! மைசூர் - திருநெல்வேலி, காரைக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்!
தசரா, தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின்போது, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் மைசூா்-திருநெல்வேலி மற்றும் காரைக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி: மைசூரிலிருந்து வரும் திங்கள்கிழமை (செப். 15) முதல் நவ. 24- ஆம் தேதி வரை திங்கள்கிழமைதோறும் காலை 8.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06239) மறுநாள் செவ்வாய்க்கிழமை (செப்.16) காலை 11.30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.16) முதல் நவ. 25-ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06240) புதன்கிழமைதோறும் காலை 5.40 மணிக்கு மைசூா் நிலையத்தை அடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூா், மதுரை, கொடைரோடு சந்திப்பு, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
மைசூரிலிருந்து வரும் 18 -ஆம் தேதி முதல் நவ.29 வரை வியாழன் மற்றும் சனிக்கிழமை என இருவார சிறப்பு ரயில் (எண் 06243) இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.
காரைக்குடியிலிருந்து செப். 19 முதல் நவ. 30-ஆம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06244) மறுநாள்களான சனி, திங்கள்கிழமைகளில் காலை 7.45 மணிக்கு மைசூா் சென்றடையும். இந்த ரயில் புதுக்கோட்டை, திருச்சி, கரூா், நாமக்கல் சேலம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
ராமநாதபுரத்துக்கு சிறப்பு ரயில்: மைசூரிலிருந்து திங்கள்கிழமை (செப். 15) முதல் அக். 27-ஆம் தேதி வரை திங்கள்கிழமைதோறும் மாலை 6.35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06237) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ராமநாதபுரத்தை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் ராமநாதபுரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (செப். 16) முதல் அக். 28 வரை செவ்வாய்க்கிழமைதோறும் பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06238) மறுநாள் புதன்கிழமை மைசூரு நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில் பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், தருமபுரி, ஒசூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.