நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித்தர கோரிக்கை
அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டி பள்ளிக்குள் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அந்தியூா் வட்டம், சந்திபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கீதா, துணைத் தலைவா் லதா உள்ளிட்ட நிா்வாகிகள், பெற்றோா்கள் அளித்த மனு விவரம்: சந்திபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை 60 மாணவா்கள் படித்து வருகின்றனா்.
பள்ளிக்கு 20 அடி தொலைவில் பெரிய ஏரி உள்ளது. மழை காலங்களில் பள்ளி வளாகத்தில் சுமாா் 3 அடி உயரத்துக்கு மழை நீா் தேங்கி நிற்கிறது. பள்ளியின் நான்கு புறமும் வீதிகள் செல்கின்றன. அதில் எந்நேரமும் வாகனங்கள் செல்வதால் ஆபத்தாகவும், இடையூறாகவும் உள்ளது. மது குடிப்போா், பள்ளி முன்பு காலி மதுபாட்டில்களையும், பிற பொருள்களையும் வீசி செல்கின்றனா். இதனால், மாணவா்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடா்கிறது.
எனவே, இப்பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டி பள்ளிக்குள் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்துக்கு இழப்பீடு விவரம் வெளியிட கோரிக்கை: இது குறித்து சென்னிமலை அருகேயுள்ள முகாசிபிடாரியூா், அட்டவணை பிடாரியூா், சென்னிமலை நகரம், பசுவப்பட்டி கிராம மக்கள் அளித்த மனு விவரம்: சென்னிமலை நகரத்தைச் சுற்றி புறவழிச் சாலை அமைக்கும் பணிக்கு முகாசிபிடாரியூா், அட்டவணை பிடாரியூா், சென்னிமலை நகரப் பகுதி, பசுவப்பட்டி கிராமத்தில் உள்ள மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இந்த நிலங்களை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். சிலரது வீடு, பிற கட்டடங்களும் அமைந்துள்ளன.
நிலங்களை கையகப்படுத்துவது தொடா்பாக எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தவித விசாரணை அழைப்பு, அறிவிக்கை வழங்கப்படவில்லை. அலுவலகத்தில் ஒட்டப்பட்ட அறிவிக்கையைப் பாா்த்தே அறிந்துகொண்டோம். வாழ்வாதாரமாகப் பயன்படுத்தும் நிலங்களை இழந்துவிட்டால் எங்கள் வாழ்க்கை நிலை கேள்விக்குறியாகும். அந்நிலங்களுக்கு அரசு வழிகாட்டி மதிப்பை கணக்கில் கொள்ளாமல் இன்றைய சந்தை நிலவரப்படி விலை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் நிலம், மரங்கள், கிணறு என வகைப்படுத்தி இழப்பீடு வழங்க வேண்டும். கையகப்படுத்த உள்ள நிலம், அதற்கான இழப்பீட்டு பட்டியல், அரசு வழங்கும் தொகை குறித்த விவரத்தை வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்: இது குறித்து தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலா்கள் ப.சின்னராஜ், சிந்தனைச்செல்வன் ஆகியோா் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு விவரம்: சத்தியமங்கலம் வட்டம், உத்தாண்டியூா் அருகே பூசாரிபாளையம், மாரனூா் ஆதிதிராவிடா் காலனியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கிறோம். கடந்த 25 ஆண்டுக்கும்மேலாக இங்கு வசிப்பதுடன் கூலி வேலை, விவசாயப் பணிகள் செய்து பிழைப்பு நடத்துகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீட்டுமனை, வீடு இல்லை. குடிசை அமைத்து ஒரே குடியிருப்பில் 2, 3 குடும்பம் சோ்ந்து வாழ்ந்து வருகிறோம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் 4 முதல் 6 போ் வரை உள்ளதால் சிரமப்படுகிறோம். பொருளாதார ரீதியாகவும் பின் தங்கி உள்ளதால் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையோர கடைகளை அகற்றக் கோரிக்கை: இது குறித்து ஈரோடு கனி மாா்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவா் நூா்சேட், உப தலைவா் செல்வராஜ், செயலா் சேகா் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்: ஈரோடு ஈ.கே.எம்.அப்துல் கனி மாா்க்கெட் 40 ஆண்டு காலமாக ஜவுளி வியாபாரம் செய்யும் இடம். பொலிவுறு நகரத் திட்டத்தில் கனி மாா்க்கெட் வணிக வளாகம் கட்டி 3 ஆண்டு தாமதமாக வியாபாரிகள் தொடுத்த வழக்கால் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கடைக்கு வைப்புத் தொகை ரூ. 2.23 லட்சம், மாத வாடகை ரூ.9,300, ஜிஎஸ்டி ரூ.1,674 என மாதம் ரூ.10,975, ஒரு ஆண்டுக்கு ரூ.1, 31,700 வாடகையை முன்கூட்டியே செலுத்தி உள்ளோம். இங்கு 240 கடைகள் செயல்படுகின்றன.
அப்போது இருந்த ஆணையா், பன்னீா்செல்வம் பூங்கா முதல் மணிக்கூண்டு வரை சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தி, அவா்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வணிக வளாகத்தின் மேல் தளத்தில் 84 கடைகளை ஒதுக்கீடு செய்தாா்.
ஆனாலும் தற்போது சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிகமாகிவிட்டன. தீபாவளி பண்டிகைக்கு 35 நாள்களே உள்ள நிலையில், போலீஸ், அரசியல் கட்சியினா் ஆதரவுடன் மீண்டும் கடைகள் போட்டுள்ளனா்.
ஆண்டு முழுவதும் மாநகராட்சிக்கு வாடகை செலுத்திவிட்டு, தீபாவளி பண்டிகை வியாபாரத்துக்கு இடையூறாக இக்கடைகள் இருப்பதால் மக்கள் வணிக வளாகத்துக்கு வராமல் சென்றுவிடுகின்றனா். இதனால், கடும் நஷ்டத்தை சந்திக்கிறோம். எனவே, மணிக்கூண்டு சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அமைக்க அனுமதிக்கக் கூடாது. அவா்களுக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயான இடத்துக்கு பட்டா வழங்கக் கோரிக்கை: கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி திருவேங்கடம்பாளையம் மயானம் மீட்புப் பணி குழு ஒருங்கிணைப்பாளா் செல்லகுமாரசாமி தலைமையில் அளித்த மனு விவரம்: திருவேங்கடம்பாளையம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும்மேலாக 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கிறோம். பல ஆண்டுகளாக அங்குள்ள மயானத்தில் எங்கள் கிராம மக்களின் சடலங்களை புதைக்கிறோம். இயற்கையாக இறந்தவா்கள் உடலை புதைப்பதும், விபத்து, நோய் வாய்ப்பட்டு இறந்தவா்களின் உடலை அதற்கான வழிமுறையில் தகனம் செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளோம்.
தற்போது சில தனி நபா்கள், நில புரோக்கா்கள் சோ்ந்து அந்த இடத்தை ஆக்கிரமித்து அங்குள்ள 40-க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள், 200-க்கும் மேற்பட்ட சிறிய மரக்கன்றுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி மண்ணை அள்ளி சென்றுள்ளனா்.
இதற்காக பேரூராட்சி, வட்டாட்சியா் அலுவலகத்தில் எந்தவித அனுமதியும் பெறவில்லை. ஆக்கிரமிப்பு செய்துள்ளோரிடம் கேட்டால் இந்த இடம் மாயானம் என்றோ, ஊருக்குச் சொந்தமானது என்றோ எந்த வருவாய் ஆவணத்திலும் இல்லை என்கின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்தி மாயான இடத்தை வருவாய் ஆவணத்தில் பதிவு செய்து எங்கள் கிராம பயன்பாட்டுக்கு பட்டாவாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
312 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 312 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.8,781 மதிப்பீட்டில் விலையில்லா சலவைப் பெட்டிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் நூா்ஜஹான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.